மாவட்ட செய்திகள்

வருகிற 7-ந் தேதி நாகர்கோவில்- கன்னியாகுமரி இடையே நீராவி என்ஜின் ரெயில் இயக்கப்படுகிறது ஒரு பயணிக்கு ரூ.500 கட்டணம் நிர்ணயம் + "||" + Nagercoil Between Kanyakumari Steam engine The train is operated

வருகிற 7-ந் தேதி நாகர்கோவில்- கன்னியாகுமரி இடையே நீராவி என்ஜின் ரெயில் இயக்கப்படுகிறது ஒரு பயணிக்கு ரூ.500 கட்டணம் நிர்ணயம்

வருகிற 7-ந் தேதி நாகர்கோவில்- கன்னியாகுமரி இடையே நீராவி என்ஜின் ரெயில் இயக்கப்படுகிறது ஒரு பயணிக்கு ரூ.500 கட்டணம் நிர்ணயம்
நாகர்கோவில்- கன்னியாகுமரி இடையே நீராவி என்ஜின் பொருத்திய பாரம்பரிய ரெயில் வருகிற 7-ந் தேதி முதல் இயக்கப்படுகிறது. இதில் பயணம் செய்ய விரும்பும் ஒரு பயணிக்கு ரூ.500 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நாகர்கோவில்,

ரெயில்வே துறை சார்பில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் மிகவும் பழமை வாய்ந்த நீராவி என்ஜினுடன் கூடிய ‘ஹெரிடேஜ் ரெயில்‘ என்ற பாரம்பரிய ரெயில் பயணத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த பயணத்தின் போது இங்கிலாந்து நாட்டில் தயாரிக்கப்பட்டு, இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட 164 ஆண்டுகள் பழமை வாய்ந்த நீராவி என்ஜின் மூலம் ரெயில் இயக்கப்படுகிறது.

இது போன்ற பாரம்பரிய ரெயில் பயணம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் சென்னை, மதுரை உள்ளிட்ட பல்வேறு கோட்டங்களில் நடைபெற்றுள்ளது.

இதேபோல் வருகிற 7-ந் தேதி நாகர்கோவில்-கன்னியாகுமரி இடையே பாரம்பரிய ரெயில் இயக்கப்பட உள்ளது. இதற்காக கடந்த சில நாட்களுக்கு முன் பழமை வாய்ந்த நீராவி என்ஜின், சரக்கு ரெயில் கோச் மூலம் நாகர்கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் இந்த என்ஜினுக்கு வர்ணம் பூசும் பணி மற்றும் பராமரிப்பு பணிகள் நாகர்கோவில் ரெயில்வே யார்டில் மேற்கொள்ளப்பட்டது.

இதையடுத்து பரிசோதனை ஓட்டம் நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து கன்னியாகுமரி ரெயில் நிலையம் வரை நடந்த இந்த சோதனை ஓட்டத்தின் போது நாகர்கோவில் ரெயில் நிலைய அதிகாரிகள், அதில் பயணம் செய்து பரிசோதித்து பார்த்தனர். இந்த நீராவி என்ஜின் பொருத்தப்பட்ட ரெயில் பெட்டியில் பயணம் செய்ய பலர் முன்பதிவும் செய்துள்ளனர்.

பாரம்பரிய ரெயில் பயணத்தின் போது ஒரு பயணிகள் பெட்டியும், ஒரு கார்டு பெட்டியும் மட்டுமே இணைக்கப்பட்டிருக்கும். பயணிகள் பெட்டி முழுக்க, முழுக்க குளிர்சாதன வசதி கொண்டதாகும். இதில் 40 பேர் பயணம் செய்யும் வகையில் தனித்தனி சொகுசு இருக்கைகள் இருக்கும். பெட்டிக்குள் இருந்தவாறு வெளிப்புற இயற்கை அழகை கண்டு ரசிக்கும் வகையில் கண்ணாடி ஜன்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன. 1855-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட நீராவி என்ஜின் ரெயில் நிலக்கரியால் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் மணிக்கு 40 கி.மீ. தூரம் செல்லும். நாகர்கோவில்- கன்னியாகுமரி இடையே உள்ள 20 கி.மீ. தொலைவை இந்த ரெயில் மூலம் கடக்க அரை மணி நேரம் ஆகும். இந்த ரெயிலில் பயணம் செய்ய விரும்பும் ஒரு பயணிக்கு ரூ.500 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பயணிகள் அதிக அளவு இந்த ரெயிலில் பயணம் செய்ய விரும்பும் பட்சத்தில் பாரம்பரிய ரெயில் கூடுதலாக சில நாட்கள் இயக்கப்பட வாய்ப்புள்ளது என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் ரெயில்வே அதிகாரிகள் கூறும் போது, நாகர்கோவில் ரெயில் நிலையத்தின் முதல் நடைமேடையில் ரூ.20 லட்சம் செலவில் மேற்கூரை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

1-வது மற்றும் 2-வது நடைமேடைகளில் ரூ.24 லட்சம் செலவில் ‘லிப்ட்‘ அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இவற்றுக்கான மின் இணைப்பு வழங்கும் பணிகள் நடைபெற வேண்டியுள்ளது. விரைவில் இவை பயன்பாட்டுக்கு வரும் என்றனர்.