மாவட்ட செய்திகள்

நாகர்கோவிலில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி கலெக்டர் பிரசாந்த் வடநேரே தொடங்கி வைத்தார் + "||" + Helmut awareness rally collector Prasanth Vadneer launched in Nagercoil

நாகர்கோவிலில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி கலெக்டர் பிரசாந்த் வடநேரே தொடங்கி வைத்தார்

நாகர்கோவிலில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி கலெக்டர் பிரசாந்த் வடநேரே தொடங்கி வைத்தார்
சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி நாகர்கோவிலில் நடைபெற்ற ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் பிரசாந்த் வடநேரே தொடங்கி வைத்தார்.
நாகர்கோவில்,

சாலை பாதுகாப்பு குறித்து மக்களிடம் எடுத்துரைக்கும் விதமாக சாலை பாதுகாப்பு வார விழா கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த வாரத்தில் வாகன ஓட்டிகள் கடைபிடிக்க வேண்டிய சாலை விதிகள் குறித்தும், இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதின் அவசியம் குறித்தும் விளக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சாலை பாதுகாப்பு வார விழா நேற்று தொடங்கியது. தொடர்ந்து வருகிற 10–ந் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி நாகர்கோவில் மற்றும் மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணிவதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி நாகர்கோவிலில் நேற்று நடந்தது.

இந்த பேரணியை கலெக்டர் பிரசாந்த் வடநேரே கொடியசைத்து தொடங்கி வைத்தார். வடசேரி அண்ணா விளையாட்டு அரங்கம் முன் தொடங்கிய இந்த பேரணியானது மணிமேடை சந்திப்பு வரை சென்று முடிவடைந்தது. பேரணியில் ஓட்டுனர் பயிற்சி பள்ளியை சேர்ந்தவர்கள், வாகன ஓட்டிகள் உள்பட பலர் கலந்து கொண்டு விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை இருசக்கர வாகனத்தின் முன் வைத்தபடி சென்றனர்.

இதைத் தொடர்ந்து வடசேரி பஸ் நிலையத்தில் அரசு பஸ்களில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை கலெக்டர் பிரசாந்த் வடநேரே ஒட்டினார். நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து அதிகாரி பழனிசாமி, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் உலகநாதன், கனகவள்ளி மற்றும் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கலந்துகொண்டனர்.