மாவட்ட செய்திகள்

புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் என்.ஆர். காங்கிரஸ் போட்டி ரங்கசாமி அறிவிப்பு + "||" + Puducherry parliamentary constituency NR. Congress Competition Rangaswamy announcement

புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் என்.ஆர். காங்கிரஸ் போட்டி ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் என்.ஆர். காங்கிரஸ் போட்டி ரங்கசாமி அறிவிப்பு
புதுவை நாடாளுமன்ற தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிடும் என்று ரங்கசாமி கூறினார்.
புதுச்சேரி,

என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் 9-வது ஆண்டு தொடக்கவிழா கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. விழாவில் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், என்.ஆர்.காங்கிரஸ் கட்சி நிறுவன தலைவருமான ரங்கசாமி கலந்துகொண்டார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தொடங்கிய 2 மாதத்தில் ஆட்சியை பிடித்தது. வர உள்ள தேர்தல்களிலும் எங்கள் கட்சி வெற்றிபெறும் என்ற நம்பிக்கை உள்ளது. என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கவும், வளர்ச்சி அடையவும் காரணமாக இருந்த அனைத்து மக்களுக்கும், பிறமாநில மக்களுக்கும், தமிழகத்தை சேர்ந்த நண்பர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

தொடர்ந்து எங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க கேட்டுக்கொள்கிறேன். என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் புதுவை எவ்வாறு வளர்ச்சி அடைந்தது என்பதை அனைவரும் அறிவார் கள். எங்கள் ஆட்சியில் நெசவாளர், ஊனமுற்றோருக்கான திட்டங்கள், இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கு என பல திட்டங்களை கொண்டு வந்தோம். இதனால் புதுவை வளர்ச்சி அடைந்தது. இவ்வாறு ரங்கசாமி கூறினார்.

அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி: வருகிற நாடாளுமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிடுமா?

பதில்: கடந்த தேர்தலைப்போலவே இந்த தேர்தலிலும் போட்டியிடுவோம். கூட்டணி கட்சிகள், மக்கள் ஆதரவோடு வெற்றிபெறுவோம்.

கேள்வி: உங்கள் வேட்பாளர் யார்?

பதில்: தக்க நேரத்தில் அதை வெளியிடுவோம்.

கேள்வி: கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடக்கிறதா?

பதில்: தேர்தல் என்றால் கூட்டணி பேச்சுவார்த்தை எப்போதும் இருந்துகொண்டுதான் இருக்கும். ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் பேசிக்கொண்டுதான் உள்ளோம்.

கேள்வி: அ.தி.மு.க., பாரதீய ஜனதாவுடன் கூட்டணியில் உள்ளர்களா?

பதில்: ஜெயலலிதா இருக்கும்போது ராஜ்யசபா தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளித்தோம். நெல்லித்தோப்பு இடைத்தேர்தலின்போது அ.தி.மு.க.வுக்கு வாக்கும் சேகரித்தோம். பாரதீய ஜனதாவும் ஆதரவு அளித்தது.

கேள்வி: பிரதமர் மோடியின் செயல்பாடு எப்படி உள்ளது?

பதில்: மிகவும் நன்றாக உள்ளது. மத்திய அரசின் பட்ஜெட்டையும் பாராட்டி இருந்தேனே.

கேள்வி: எதிர்க்கட்சியின் பணிகளை நீங்கள் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளதே?

பதில்: அரசின் தவறான செயல்பாடுகளை சுட்டிக்காட்டி சட்டசபையில் எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் பேசி உள்ளனர்.

கேள்வி: கவர்னர், முதல்-அமைச்சர் மோதல் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: கவர்னருக்குத்தான் அதிக அதிகாரம் உள்ளது என்று நாங்கள் ஆட்சியில் இருக்கும்போது நாராயணசாமி தெரிவித்தார். கவர்னருக்கான அதிகாரம் குறித்து அவருக்கு நன்றாக தெரியும். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பும் வந்துள்ளது. ஆனால் போட்டி போட்டுக்கொண்டு கவர்னரை குறை கூறி வருகிறார். எந்த பணிகளையும் செய்யவில்லை. புதிய திட்டங்களையும் கொண்டுவரவில்லை. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் இல்லை. வேலை பார்த்துக் கொண்டு இருப்பவர்களையும் நீக்கம் செய்கிறார்கள். எதற்கெடுத்தாலும் கவர்னரை குறைகூறி காலத்தை கழிக்கிறார்கள். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மாணவர்களுக்கான திட்டங்களை செயல்படுத்தவில்லை. பொதுப்பணித்துறை மூலம் எங்காவது பணிகள் நடக்கிறதா? மழைக்குப்பின் எந்த சாலையும் போடப்படவில்லை. நாங்கள் கொண்டுவந்த திட்டங்களையும் செயல்படுத்தவில்லை.

கேள்வி: தீபாவளி, பொங்கல் பண்டிகைக்கான பரிசு பொருட்கள் வழங்காததற்கு கூட நீங்கள் எதிர்ப்பு காட்டவில்லையே?

பதில்: பொங்கல் பொருட் கள் தராதது அரசின் இயலாமையை காட்டுகிறது. ஆட்சியாளர்கள் கவர்னரை குறைசொல்லியே காலத்தை கடத்துகிறார்கள். அது மக்களுக்கு நன்றாக தெரியும். ஆட்சியில் இருந்து கொண்டு போக்கு சொல்லக்கூடாது. மற்றவர்கள் மீது பழிபோடக்கூடாது. முதல்-அமைச்சர் அவருக்கு உரிய வேலையை செய்யவேண்டும். அதை செய்யாமல் பிறர்மேல் பழிபோடுவது ஏன்? இவ்வாறு ரங்கசாமி கூறினார்.