மாவட்ட செய்திகள்

கரூர் வந்த ரெயிலில் கழிவறையில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் பிணம் + "||" + The girl's body was found hanging in the toilet in Karur

கரூர் வந்த ரெயிலில் கழிவறையில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் பிணம்

கரூர் வந்த ரெயிலில் கழிவறையில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் பிணம்
கரூர் வந்த ரெயிலின் கழிவறையில் ஆண் பிணம் ஒன்று தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர், 

கேரள மாநிலம் எர்ணாகுளத்திலிருந்து தமிழகம் வழியாக காரைக்காலுக்கு டீ-கார்டன் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் வழக்கமாக, கரூருக்கு காலை 6.15 மணியளவில் வந்து 6.20-க்கு மணிக்கு புறப்பட்டு செல்லும். இந்த நிலையில் நேற்று காலை தாமதமாக காலை 7 மணிக்கு கரூர் ரெயில் நிலையத்திற்கு டீ-கார்டன் எக்ஸ்பிரஸ் வந்தது. அப்போது என்ஜின் அருகே பொதுப்பெட்டியில் இருந்த பயணிகள் அனைவரும் கும்பலாக கீழே இறங்கி, தாங்கள் பயணம் செய்து வரும் பெட்டியிலுள்ள கழிவறை நீண்ட நேரமாக திறக்கப்படாமல் உள்ளது.

இதனால் இயற்கை உபாதை கழிக்க சிரமமாக உள்ளது என ரெயில்நிலைய நடைமேடையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரெயில்வே போலீசாரிடம் தெரிவித்தனர். அதன்பேரில் கரூர் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயசங்கர் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து அந்த ரெயில்பெட்டி கழிவறை ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தனர். அப்போது 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர், தான் அணிந்திருந்த காவி வேட்டியால் கழிவறை கொக்கியில் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார், கழிவறை கதவை திறந்து உள்ளே சென்று அந்த பிணத்தை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது பிணமாக தொங்கியவரின் சட்டைப்பையில், மங்களூர்-ஆலுவாவுக்கு செல்லும் வகையில் கடந்த 9-ந்தேதி எடுக்கப்பட்ட ரெயில் டிக்கெட் ஒன்றும், ரூ.60-ம் இருந்தது. இந்த நபர் எங்கு ஏறினார்? எப்போது ஏறினார்? என்பன உள்ளிட்ட விவரங்கள் குறித்து ரெயில் பயணிகளிடம் போலீசார் கேட்டனர். ஆனா ல் இவரை பார்க்கவில்லை என அனைவரும் கூறிவிட்டனர். இதையடுத்து அந்த ஆணின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக, கரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ரெயில் கழிவறையில் தூக்கிட்டு அந்த நபர் தற்கொலை செய்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டாரா? அந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது பற்றி கரூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ரெயில் கழிவறையில் கிடந்த பிணத்தை அப்புறப்படுத்தியது, பயணிகளிடம் விசாரணை போன்ற காரணங்களால் டீ-கார்டன் எக்ஸ்பிரஸ் ரெயில் 1½ மணி நேரம் தாமதமாக 7.50 மணிக்கு கரூர் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.