மாவட்ட செய்திகள்

தர்மபுரி நகராட்சியில் கட்டண நிலுவை தொகை செலுத்தாத 58 குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு 10 கடைகளுக்கு சீல் + "||" + Dharmapuri municipality Discontinued 58 drinking water connections that do not pay a tariff Seal for 10 stores

தர்மபுரி நகராட்சியில் கட்டண நிலுவை தொகை செலுத்தாத 58 குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு 10 கடைகளுக்கு சீல்

தர்மபுரி நகராட்சியில் கட்டண நிலுவை தொகை செலுத்தாத 58 குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு 10 கடைகளுக்கு சீல்
தர்மபுரி நகராட்சி பகுதியில் கட்டண நிலுவை தொகை செலுத்தாத 58 குடிநீர் இணைப்புகளை நகராட்சி அதிகாரிகள் துண்டித்தனர். இதேபோல் நகராட்சிக்கு வாடகை செலுத்தாத 10 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

தர்மபுரி,

தர்மபுரி நகராட்சி பகுதியில் சொத்துவரி, குடிநீர் இணைப்பிற்கான கட்டண நிலுவை தொகை ஆகியவற்றை முறையாக செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பை துண்டிக்கும் பணி தர்மபுரி நகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்படி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டபோது 15 வார்டுகளில் 58 குடிநீர் இணைப்புகள் உரிய கட்டணம் செலுத்தாமல் இருப்பதை கண்டறிந்தனர். இதையடுத்து 58 குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. 25 மின் மோட்டார்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல் நகராட்சி அலுவலக மேலாளர் தமிழ்செல்வி, நகர அமைப்பு ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட அதிகாரிகள் நகராட்சி கடைகளுக்கு வாடகைதாரர்கள் முறையாக வாடகையை செலுத்துகிறார்களா? என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது வாடகை நிலுவை தொகையை முறையாக செலுத்தாமல் இருந்த 10 கடைகளை மூடி சீல் வைத்தனர்.

இதுதொடர்பாக ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது:–

தர்மபுரி நகராட்சி நிர்வாகத்தை செயல்படுத்த மாதந்தோறும் ரூ.1½ கோடி தேவைப்படுகிறது. நகராட்சி கடைகளின் வாடகை, குடிநீர் இணைப்பு கட்டணம், பாதாள சாக்கடை கட்டணம் உள்ளிட்டவற்றை சம்பந்தப்பட்டவர்கள் முறையாக செலுத்தினால்தான் நகராட்சிக்கு உரிய வருவாய் கிடைக்கும். தர்மபுரி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் வசிப்பவர்களில் சொத்துவரி, நகராட்சி கடைவாடகை, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை கட்டணம் ஆகியவற்றை செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு வருகிறது.

தர்மபுரி நகராட்சி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் நகராட்சிக்கு மேற்கண்ட வரிகள், கடை வாடகை மற்றும் குடிநீர் கட்டணம் ஆகியவற்றை நிலுவையின்றி உரிய நேரத்தில் செலுத்தி ஜப்தி நடவடிக்கை மற்றும் குடிநீர் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கை ஆகியவற்றை தவிர்த்து கொள்ளுமாறு தண்டோரா மூலம் எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.