மாவட்ட செய்திகள்

பயங்கரவாதிகள் தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் பலி:நெல்லையில் பாகிஸ்தான் கொடி எரிப்புஇந்து அமைப்பினர் போராட்டம் + "||" + 40 militants killed in terror attack Pakistan flag flame

பயங்கரவாதிகள் தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் பலி:நெல்லையில் பாகிஸ்தான் கொடி எரிப்புஇந்து அமைப்பினர் போராட்டம்

பயங்கரவாதிகள் தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் பலி:நெல்லையில் பாகிஸ்தான் கொடி எரிப்புஇந்து அமைப்பினர் போராட்டம்
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் பலியான சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து நெல்லையில் இந்து அமைப்பினர் பாகிஸ்தான் கொடியை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை, 

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் பலியான சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து நெல்லையில் இந்து அமைப்பினர் பாகிஸ்தான் கொடியை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வீரர்கள் பலி

காஷ்மீர் மாநிலத்தில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் துணை ராணுவத்தினர் 40 பேர் பலியானார்கள். இதில் தமிழகத்தை சேர்ந்த தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள சவலாப்பேரி சுப்பிரமணியன், அரியலூர் மாவட்டம் கார்டுகுடி சிவசந்திரன் ஆகிய 2 பேர் பலியானார்கள். அவர்களது உடல்கள் நேற்று சொந்த ஊர்களுக்கு கொண்டு வரப்பட்டு இறுதிச்சடங்கு செய்யப்பட்டது.

நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

கொடி எரிப்பு

இதையொட்டி நெல்லையில் பாகிஸ்தான் நாட்டு கொடியை எரித்து போராட்டம் நடத்தப்பட்டது. பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் 4 வழிச்சாலை பாலத்தின் கீழ் பகுதியில் இந்து அமைப்பினர் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். தீவிரவாத தாக்குதலில் பலியான துணை ராணுவ வீரர்களின் உருவப்படங்களை வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் பாகிஸ்தான் நாட்டு தேசிய கொடியை எரித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

இதில் ஒருசிலர் தங்களது கையில் வெட்டி வீரர்களின் புகைப்படத்துக்கு ரத்த திலகமிட்டனர். பாகிஸ்தான் மற்றும் பயங்கரவாதிகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதில் இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார், நிர்வாகக்குழு உறுப்பினர் குற்றாலநாதன், ஆர்.எஸ்.எஸ். மாவட்ட தலைவர் முருகையா, பொறுப்பாளர் வெங்கட்ராமன், பிரசார நிர்வாகி ராமசாமி, விசுவ இந்து பரிஷத் துணைத்தலைவர் குழைக்காதர், மாநில அமைப்பாளர் சேதுராமன் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

அஞ்சலி

நெல்லை ராமையன்பட்டியில், உயிர்த்தியாகம் செய்த துணை ராணுவ வீரர்களின் உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் துணை ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.