மாவட்ட செய்திகள்

லஞ்சம் வாங்கிய வழக்கில் கருவூல அதிகாரிகள் உள்பட 3 பேருக்கு சிறை - விழுப்புரம் ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் தீர்ப்பு + "||" + In the case of bribery, three persons, including treasury officials, Villupuram corruption scam in court Verdict

லஞ்சம் வாங்கிய வழக்கில் கருவூல அதிகாரிகள் உள்பட 3 பேருக்கு சிறை - விழுப்புரம் ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் தீர்ப்பு

லஞ்சம் வாங்கிய வழக்கில் கருவூல அதிகாரிகள் உள்பட 3 பேருக்கு சிறை - விழுப்புரம் ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் தீர்ப்பு
லஞ்சம் வாங்கிய வழக்கில் ஓய்வுபெற்ற கருவூல அதிகாரிகள் உள்பட 3 பேருக்கு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் தீர்ப்பு கூறப்பட்டது.
விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வட்டார குழந்தைகள் வளர்ச்சித்திட்ட கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தவர் சுமதி. இவர் தனது அலுவலகத்தில் உணவூட்டசெலவின பட்டியல், சம்பள பட்டியல், 6-வது ஊதியக்குழு நிலுவைத்தொகை, சேமநலநிதி முன்பணம், மாதச்சம்பள பட்டியல் போடுவதற்காக பில் எடுத்துக்கொண்டு திண்டிவனம் உதவி கருவூல அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த உதவி கருவூல அலுவலர்கள் தயாளன், அண்ணாதுரை ஆகியோர் பில் போடுவதற்கு சுமதியிடம் லஞ்சம் கேட்டுள்ளனர். லஞ்சம் கொடுக்க விரும்பாத சுமதி இதுபற்றி விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அதைத்தொடர்ந்து போலீசார் கூறிய அறிவுரைப்படி கடந்த 23.2.2004 அன்று மீண்டும் திண்டிவனம் கருவூல அலுவலகத்திற்கு பில் எடுத்து சென்ற சுமதி, 2 ஆயிரம் ரூபாயை உதவி கருவூல அலுவலர் தயாளனுக்கும், ஆயிரம் ரூபாயை இளநிலை உதவியாளர் அண்ணாதுரைக்கும் கொடுக்க முயன்றார்.

அப்போது அங்கு அலுவலக பணிக்காக வந்த திண்டிவனம் வேளாண்மை பொறியியல் துறையை சேர்ந்த அலுவலக உதவியாளர் ஆறுமுகம் என்பவர் சுமதியிடம் இருந்து லஞ்ச பணத்தை வாங்கி, தயாளன், அண்ணாதுரை ஆகியோரிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக 3 பேரையும் பிடித்து கைது செய்தனர். இந்த வழக்கு விழுப்புரம் ஊழல்தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்து நீதிபதி பிரியா நேற்று தீர்ப்பு கூறினார். அதில் தயாளன்(75), அண்ணாதுரை(63) ஆகியோருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.6 ஆயிரம் அபராதமும், அலுவலக உதவியாளர் ஆறுமுகத்துக்கு(49) 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார். தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். தயாளன், அண்ணாதுரை ஆகியோர் பணிஓய்வு பெற்று விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.