மாவட்ட செய்திகள்

ஊட்டியில், தேனிலவு படகு இல்லத்தை சீரமைக்கும் பணி தொடக்கம் + "||" + At Ooty, Honeymoon Boat House Start work on the alignment

ஊட்டியில், தேனிலவு படகு இல்லத்தை சீரமைக்கும் பணி தொடக்கம்

ஊட்டியில், தேனிலவு படகு இல்லத்தை சீரமைக்கும் பணி தொடக்கம்
ஊட்டியில் தேனிலவு படகு இல்லத்தை சீரமைக்கும் பணி தொடங்கி உள்ளது.
ஊட்டி,

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ் ஊட்டி படகு இல்லம், தொட்டபெட்டா மலைசிகரம், பைக்காரா படகு இல்லம் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. ஊட்டி படகு இல்லத்தில் மிதி படகு, துடுப்பு படகு, மோட்டார் படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. இங்கு சீசன் காலங்களில் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருவதால், அவர்களது வசதிக்காக ஊட்டி ஏரியின் மறுகரையோரத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தேனிலவு படகு இல்லம் அமைக்கப்பட்டது.

தேனிலவு படகு இல்லத்தை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கும் வகையில் பசுமை புல்வெளியுடன் கூடிய பூங்கா உள்ளது. சிறுவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் இருக்கிறது. இங்கு சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்தினருடன் மோட்டார் படகில் சவாரி செய்து மகிழ்கிறார்கள். மோட்டார் படகில் 8 இருக்கைகளுக்கு ரூ.670, 10 இருக்கைகளுக்கு ரூ.810 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்கள் மற்றும் வாடகை வாகனங்களை நிறுத்த பார்க்கிங் வசதி, கழிப்பிட வசதி செய்து கொடுக்கப்பட்டு உள்ளது.

கடந்த 2 ஆண்டுகளாக தேனிலவு படகு இல்லம் போதிய பராமரிப்பு இல்லாமல் இருந்தது. உயரமாக வளர்ந்து உள்ள மரத்துக்கு நடுவே அமைக்கப்பட்ட மரத்தினால் ஆன நடைபாதை சேதமடைந்து காணப்பட்டது. படகு இல்லத்தில் டிக்கெட் வழங்கும் அறை, அலுவலக அறைகளின் மேற்கூரைகள் அடிக்கடி பெயர்ந்து கீழே விழுந்த வண்ணம் இருந்தன. இதனால் அப்பகுதி எப்போது வேண்டுமானாலும் சரிந்து விழலாம் என்ற நிலையில் இருந்தது. இதன் காரணமாக நடைபாதை மூடப்பட்டு, சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

மேலும் மோட்டார் படகில் ஏறுவதற்கு சுற்றுலா பயணிகள் நிற்கும் பகுதி ஆடிக்கொண்டே இருந்தது. இதனால் அவர்கள் மிகவும் அச்சம் அடைந்தனர். மழைக்காலங்களில் சேதமடைந்த மேற்கூரையில் இருந்து தண்ணீர் ஒழுகும். இதற்கிடையில் படகு இல்லம் மேம்படுத்தப்படாததால், இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகை மிகவும் குறைந்தது. இதனால் ஊட்டியில் மற்ற சுற்றுலா தலங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகளை ஒப்பிடும் போது, தேனிலவு படகு இல்லத்துக்கு குறைவான எண்ணிக்கையில் வருகை தந்தனர்.

இதே நிலை தொடர்ந்ததால் சுற்றுலா பயணிகள் திரும்பி செல்லும் நிலை நீடித்தது. இதனை தொடர்ந்து தேனிலவு படகு இல்லத்தை முழுமையாக சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு படகு இல்லத்தில் நடைபாதை மட்டும் சீரமைக்கப்பட்டது. இந்த நிலையில் கோடை சீசனை முன்னிட்டு தேனிலவு படகு இல்லத்தை சீரமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. சேதமடைந்த மேற்கூரைகள், நடைபாதைகள் அகற்றப்பட்டு உள்ளன.

இரும்பினால் ஆன மேற்கூரைகள், நடைபாதைகள் அமை க்கப்பட்டு வருகிறது. அவை துருப்பிடிக்காமல் இருக்க வர்ணம் தீட்டப்படுகிறது. நடைபாதையில் படிக்கட்டுகள் புதிதாக அமைக்கப்பட உள்ளது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் ரூ.45 லட்சம் மதிப்பில் தேனிலவு படகு இல்லத்தை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணி வருகிற ஏப்ரல் மாதம் 2-வது வாரத்தில் முடிக்கப்படும். அதன் பின்னர் கோடை சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்யலாம் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.