மாவட்ட செய்திகள்

மனைவியை கழுத்தை அறுத்து கொன்ற வியாபாரி கத்தியுடன் போலீசில் சரணடைந்தார் + "||" + The man who slayed his wife and surrendered to the police with a knife

மனைவியை கழுத்தை அறுத்து கொன்ற வியாபாரி கத்தியுடன் போலீசில் சரணடைந்தார்

மனைவியை கழுத்தை அறுத்து கொன்ற வியாபாரி கத்தியுடன் போலீசில் சரணடைந்தார்
மண்ணச்சநல்லூர் அருகே மனைவியை கழுத்தை அறுத்து கொன்ற வியாபாரி கத்தியுடன் போலீசில் சரணடைந்தார்.
சமயபுரம்,

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள வடக்கு ஈச்சம்பட்டியை சேர்ந்தவர் பாலச்சந்திரன் (வயது 39). இவருடைய மனைவி மகாலட்சுமி (34). இவர்களுக்கு போதகன் (8), கார்த்திக் (7) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

சிங்கப்பூரில் வேலை செய்து வந்த பாலச்சந்திரன், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மண்ணச்சநல்லூருக்கு வந்தார். தற்போது, இவர் வீட்டிலேயே சமோசா தயாரித்து கடைகளுக்கு வியாபாரம் செய்து வருகிறார். இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்தபோது, அவ்வப்போது தனது மனைவிக்கு பணம் அனுப்பியுள்ளார்.

இந்த நிலையில், ‘நான் சிங்கப்பூரில் இருந்து அனுப்பிய பணத்தை என்ன செய்தாய்?’ என்று தனது மனைவியிடம் பாலசந்திரன் பலமுறை கேட்டுள்ளார். அதற்கு மகாலட்சுமி சரியான பதில் கூறவில்லை என்று தெரிகிறது. மேலும் மகாலட்சுமியின் நடத்தையில் பாலச்சந்திரனுக்கு சந்தேகம் இருந்துள்ளது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

அதுபோல் நேற்று முன்தினம் இரவும் கணவன்-மனைவிக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. பின்னர் குழந்தைகளை தூங்கவைத்துவிட்டு இருவரும் தூங்கச்சென்றனர். ஆனால் மனைவியின் மீது பாலச்சந்திரனுக்கு கோபம் தீரவில்லை.

இதனால் ஆத்திரத்தில் இருந்த அவர், நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் வீட்டில் இருந்த கத்தியால், தூங்கிக்கொண்டிருந்த மகாலட்சுமியை கழுத்தை அறுத்து கொலை செய்தார். பின்னர், அந்த கத்தியுடன் மண்ணச்சநல்லூர் போலீஸ் நிலையத்துக்கு சென்ற பாலச்சந்திரன், தனது மனைவியை கொலை செய்து விட்டதாக கூறி சரணடைந்தார்.

இதைத் தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் இம்மானுவேல் ராயப்பன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பூபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் மகாலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலச்சந்திரனை கைது செய்தனர். இந்த பயங்கர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் பாகனை மிதித்து கொன்ற யானை
சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் ஆண்டாள் என்ற யானை பாகனை மிதித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2. சொத்து தகராறில் தாயை கொன்ற மகனுக்கு 10 ஆண்டு சிறை புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பு
சொத்து தகராறில் தாயை கொன்ற மகனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கி புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.