மாவட்ட செய்திகள்

கரூர் அருகே வாகன சோதனையில் ரூ.5½ கோடி தங்க நகைகள் பறிமுதல் அதிகாரிகள் நடவடிக்கை + "||" + Authorities seized Rs.5.5 crore gold jewelery at Karur

கரூர் அருகே வாகன சோதனையில் ரூ.5½ கோடி தங்க நகைகள் பறிமுதல் அதிகாரிகள் நடவடிக்கை

கரூர் அருகே வாகன சோதனையில் ரூ.5½ கோடி தங்க நகைகள் பறிமுதல் அதிகாரிகள் நடவடிக்கை
கரூர் அருகே வாகன சோதனையில் ரூ.5½ கோடி மதிப்பிலான தங்க நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கரூர்,

நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. மேலும் வாக்காளர்களுக்கு பணம், பொருட்கள் வழங்கப்படுவதை தடுக்க பறக்கும் படையினர் உள்ளிட்ட குழுவினர் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். இதில் வாகனங்களில் ரூ.50 ஆயிரத்தில் மேல் ரூ.10 லட்சம் வரை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. மேலும் ரூ.10 லட்சத்துக்கு மேல் பணம் மற்றும் பொருட்கள் இருந்தால், அது தொடர்பாக ஆய்வு செய்ய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

இந்த விதிகளின்படி கரூர் மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் ஆகியோர் ஆங்காங்கே வாகன சோதனை நடத்தி, உரிய ஆவணம் இல்லாத பணம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே ஆண்டிபட்டிக்கோட்டை சோதனைச்சாவடியில் நிலையான கண்காணிப்பு குழுவினர் நேற்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த குழுவில் வேளாண்மை துறை உதவி இயக்குனர் குழந்தைவேலு, சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் உள்பட போலீசார் இடம் பெற்றிருந்தனர்.

அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் வந்த ஒரு வேனை, அந்த குழுவினர் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது வேனில் 13 பெட்டிகளில் தங்க நகைகள் வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. பெட்டிகளுடன் சேர்த்து தங்க நகைகள் மொத்தம் 94 கிலோ 89 கிராம் எடை கொண்டதாக இருந்தது. தங்க நகைகளின் மதிப்பு ரூ.5 கோடியே 63 லட்சத்து 13 ஆயிரம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் அந்த வேனில் டிரைவர் மதுரையை சேர்ந்த கிருபாகரன் மற்றும் கூரியர் நிறுவன மேலாளர் ஒருவரும், துப்பாக்கி ஏந்திய 2 பாதுகாவலர்களும் இருந்தனர். இந்த நகைகளுக்குரிய ரசீது உள்ளிட்ட ஆவணங்களை அதிகாரிகளிடம் அவர்கள் எடுத்து காண்பித்தனர். இதற்கிடையே அரவக்குறிச்சி உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியும், கலால் உதவி ஆணையருமான மீனாட்சி சம்பவ இடத்திற்கு வந்து பிடிபட்ட நகை பெட்டிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வேனில் இருந்தவர்கள், தாங்கள் மதுரை சரோஜினி காலனியில் உள்ள, விலையுயர்ந்த பொருட்களை பார்சல் சர்வீஸ் மூலம் பாதுகாப்புடன் கொண்டு சென்று சேர்க்கும் ஒரு பிரபல கூரியர் நிறுவனத்தில் வேலை பார்ப்பதாக கூறினர். மேலும் தமிழகத்தில் உள்ள பிரபல நகைக்கடை உரிமையாளர்கள் தங்களது கிளை கடைகளுக்கு நகையை அனுப்பி வைக்க தங்களது பார்சல் சேவையை பயன்படுத்துவதாகவும், அந்த வகையில் சென்னை, சேலம், கோவை உள்ளிட்ட இடங்களில் உள்ள நகைக்கடை கிளைகளுக்கு நகைகளை கொண்டு செல்வதாகவும் தெரிவித்தனர்.

எனினும் தேர்தல் நடத்தை விதிப்படி, ரூ.10 லட்சத்துக்கு மேல் பணம் அல்லது பொருள் இருந்தால் அதனை சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என கரூர் நாடாளுமன்ற தேர்தல் அதிகாரி கூறியுள்ளதால், உடனே அந்த தங்க நகைகளை ஆய்வு குழுவினர் பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து தங்க நகை பெட்டிகளுடன் அந்த வேன் கரூர் கலெக்டர் அலுவலகத்திற்கு கொண்டு வந்து நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக, கரூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான அன்பழகன் நிருபர்களிடம் கூறுகையில், ஆண்டிபட்டிகோட்டை சோதனைச்சாவடியில் தேர்தல் நடத்தை விதியின் அடிப்படையின் தான், வேனில் கொண்டு செல்லப்பட்ட தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் உள்ளிட்டோர் அடங்கிய கணக்கீட்டு குழுவினர் மற்றும் வருவாய்த்துறையினர் உள்ளிட்டோர் இந்த தங்க நகைகள் மற்றும் அதற்குரிய ஆவணங்களை சரிபார்ப்பார்கள். அந்த நகையும், ஆவணமும் உண்மை தன்மை உடையது என்றால், அவர்கள் விடுவித்து உத்தரவிடுவார்கள். சரியாக இல்லையென்றால் பறிமுதல் நடவடிக்கை எடுக்கப்படும்.

பெட்டிகள் மற்றும் தங்க நகைகளின் மொத்த எடை தான் 94 கிலோ ஆகும். லலிதா ஜூவல்லரி, ஜாய் ஆலுக்காஸ் உள்பட பிரபல நகைக்கடை நிறுவனத்தினர் தங்களது கிளைகளுக்கு தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு பார்சல் சேவை மூலம் இந்த நகையை அனுப்ப கொண்டு சென்றது குறிப்பிடத்தக்கது ஆகும். கரூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் இதுவரை ரூ.10 லட்சத்து 5 ஆயிரத்து 542 பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதில் சம்பந்தப்பட்ட நபர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்ததால் ரூ.3 லட்சத்து 832 திருப்பி அவர்களிடம் வழங்கப்பட்டுள்ளது. பறக்கும் படை, நிலையாக நின்று ஆய்வு செய்யும் குழுவின் பணிகளை கண்காணிக்க அவர்களது வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது, என்றார்.

முன்னதாக தேர்தல் நடத்தும் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான அன்பழகன் மற்றும் தேர்தல் செலவின பார்வையாளர்கள் அம்பர்கர் ஏ.தாமோதர், ஸ்ரீமனோஜ்குமார் மற்றும் வருமானவரித்துறை கூடுதல் ஆணையர் சிலாகாமார்தி, விஜய்ராஜூ, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் ஆகியோர் பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தையும், அதில் இருந்த தங்க நகை பெட்டிகளையும், அவர்கள் சமர்ப்பித்த ஆவணங்களையும் பார்வையிட்டனர். நிலையான கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை கருவூலத்தில் ஒப்படைத்தனர். ஆவணங்கள் மற்றும் நகைகளை உரிய ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் மேல்முறையீட்டு குழுவிடம் ஆவணங்களை சமர்ப்பித்து பொருட்களை பெற்றுக்கொள்ள சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.