மாவட்ட செய்திகள்

ஐகோர்ட்டு நீதிபதி வீட்டில் துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை முயற்சி + "||" + Court of Justice Judge Fire with firearms The police attempted suicide

ஐகோர்ட்டு நீதிபதி வீட்டில் துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை முயற்சி

ஐகோர்ட்டு நீதிபதி வீட்டில் துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை முயற்சி
சென்னை ஐகோர்ட்டு நீதிபதி வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீஸ்காரர், துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்றார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அடையாறு,

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள காஞ்சி குடியிருப்பில் ஐகோர்ட்டு நீதிபதி முரளிதரன் வீடு உள்ளது. இங்கு ஆயுதப்படை போலீஸ்காரர் சரவணன் (வயது 27), நேற்று மாலை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார்.

அப்போது சரவணன், திடீரென தன்னிடம் இருந்த துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்றார். இதில் அவரது தலையில் குண்டு பாய்ந்தது. துப்பாக்கி சத்தம் கேட்டு அங்கு ஓடி வந்த சக போலீசார், சரவணன் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக அவரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு தொண்டு செல்லப்பட்ட சரவணன், அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தற்கொலைக்கு முயன்ற ஆயுதப்படை போலீஸ்காரர் சரவணன், நெல்லையை சேர்ந்தவர். இன்னும் திருமணம் ஆகவில்லை. தனது பெற்றோரை பார்க்க சொந்த ஊருக்கு சென்று இருந்த அவர், நேற்று முன்தினம் இரவுதான் சென்னை திரும்பி வந்தார். பின்னர் நேற்று வழக்கம்போல் நீதிபதி வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தபோது இந்த விபரீத முடிவை எடுத்து உள்ளார்.

முன்னதாக அவர் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது. அதில் அவர், “எனக்கு வாழ பிடிக்கவில்லை. சாகப்போகிறேன். என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. நான் இறந்த பிறகு எனது காக்கி சீருடையை கழற்றாமல் அப்படியே அடக்கம் செய்யுங்கள். அதுதான் எனது கடைசி ஆசை. என் சாவுக்கு பிறகு வரும் பணத்தை எனது பெற்றோரிடம் ஒப்படைத்துவிடுங்கள். என்னை மன்னித்து விடுங்கள்” என எழுதி இருந்தார்.

மேலும் அந்த கடிதத்தை தனது நண்பர்களுக்கு ‘வாட்ஸ்அப்’பில் அனுப்பி உள்ளார். பின்னர் செல்போனை ‘சுவிட்ச் ஆப்’ செய்துவிட்டு துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்று உள்ளது விசாரணையில் தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த அபிராமபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அஜி குமார் தலைமையிலான போலீசார், சரவணன் எழுதிய கடிதத்தை கைப்பற்றி, அவரது தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

நீதிபதிகள், அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வசிக்கும் பகுதியில் நீதிபதி வீட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.