மாவட்ட செய்திகள்

தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டம் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது + "||" + The devotees crowd in Tamil New Year celebrations

தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டம் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது

தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டம் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
குமரி மாவட்டத்தில் தமிழ்ப்புத்தாண்டு நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக கூட்டம் அலைமோதியது.
சுசீந்திரம்,

தமிழ்ப் புத்தாண்டு நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் மற்றும் வீடுகளில் சித்திரை விஷூ கனி காணும் நிகழ்ச்சி, கை நீட்டம் வழங்குதல் போன்றவை நடந்தது. புத்தாண்டையொட்டி சித்திரை விஷூ கனி கண்டால் இந்த ஆண்டு முழுவதும் வளமும், நலமும் பெருகும் என்பது ஐதீகம்.

விஷூ கனி காண்பதற்காக குமரி மாவட்ட மக்கள் நேற்று முன்தினமே தங்கள் வீடுகளை சுத்தம் செய்து, கனி காண்பதற்கு தேவையான பழ வகைகள், வெற்றிலை பாக்கு, தேங்காய், காய்கறிகள், மங்கள பொருட்கள், கொன்றை பூ, புத்தாடை ஆகியவற்றை பெரிய நிலைக்கண்ணாடி முன் வைத்திருந்தனர். நிலைக்கண்ணாடியில் தங்க ஆபரணங்களும், தங்க காசுகளும், நாணயங்களும், பணத்தையும் வைத்தனர். நேற்று அதிகாலையில் பெரியவர்களும், சிறியவர்களும் எழுந்ததும் கண்களை மூடியபடியே தாங்கள் முன்தினம் வைத்த நிலைக்கண்ணாடி முன்பு சென்று கனிகாணும் பொருட்களையும், தங்க ஆபரணங்களையும் முதல் காட்சியாக கண்டனர்.

கோவில்களில் கூட்டம்

பின்னர், குளித்து புத்தாடை அணிந்து குடும்பம், குடும்பமாக அவரவர் வசிக்கும் பகுதிகளில் உள்ள கோவில்களுக்கு சென்றனர். கோவில்களிலும் கனி காணும் நிகழ்ச்சி நடந்தது. மேலும், பக்தர்களுக்கு கை நீட்டமும் வழங்கப்பட்டது.

தமிழ்ப்புத்தாண்டையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் நேற்று கூட்டம் அலைமோதியது. பெரியவர்களும், சிறியவர்களும் குடும்பம், குடும்பமாக சென்று சாமி தரிசனம் செய்தனர்.

நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவில், வடசேரி காசி விஸ்வநாதர் கோவில், வடிவீஸ்வரம் இடர் தீர்த்த பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களில் மக்கள் அதிகாலையிலேயே நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். நாகராஜா கோவிலில் உள்ள நாகர் சிலைகளுக்கு ஆண்களும், பெண்களும் பால் மற்றும் மஞ்சள் அபிஷேகம் செய்து வணங்கினர். இடர் தீர்த்த பெருமாள் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த ஆண்களுக்கும், பெண்களுக்கும் நாணயங்கள் கை நீட்டலாக வழங்கப்பட்டது. இந்த நாணயத்தை வீட்டில் வைத்திருந்தால் செல்வம் செழித்தோங்கும் என்பது ஐதீகம்.

திருப்பதி கோவில்

கன்னியாகுமரியில் உள்ள திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் நேற்று சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து துவாரபாலகர் மண்டபத்தில் காய், கனிகள் படைக்கப்பட்டு கனிகாணுதல் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு திருப்பதி கோவில் பொறுப்பாளர் சாய்கிருஷ்ணா, குமரி மாவட்ட வள்ளலார் பேரவை தலைவர் சுவாமி பத்மேந்திரா, குகநாதீஸ்வரர் பக்தர் பேரவை தலைவர் கோபி ஆகியோர் கைநீட்டம் வழங்கினர். மேலும், தயிர்சாதம், புளியோதரை, பொங்கல் ஆகிய பிரசாதமும் வழங்கப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

இதுபோல், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், முப்பந்தல் இசக்கியம்மன் கோவில், சுசீந்திரம் துவாரகை கிருஷ்ணன் கோவில் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள கோவில்களில் தமிழ்ப்புத்தாண்டு சிறப்பு பூஜைகள், கனிகாணும் நிகழ்ச்சி, கைநீட்டம் வழங்குதல் போன்றவை நடந்தது.

கேரள முறைப்படி...

கேரள முறைப்படி பூஜைகள் நடைபெறும் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில், திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில், குமாரகோவில் குமாரசாமி கோவில் போன்ற கோவில்களில் விஷூ கனிகாணும் நிகழ்ச்சி இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது. ஆனாலும், இந்த கோவில்களில் நேற்று தமிழ்ப் புத்தாண்டையொட்டி சிறப்பு பூஜைகள், வழிபாடுகள், அபிஷேகம் போன்றவை நடந்தன.