மாவட்ட செய்திகள்

மீனவர் கொலை வழக்கில் 1½ ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் போலீசில் சிக்கினார் + "||" + In the case of fisherman murder He was hiding in police for 1½ years

மீனவர் கொலை வழக்கில் 1½ ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் போலீசில் சிக்கினார்

மீனவர் கொலை வழக்கில் 1½ ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் போலீசில் சிக்கினார்
உச்சிப்புளி அருகே மீனவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேடப்பட்டு வந்தவர் 1½ ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டார்.

பனைக்குளம்,

கடந்த 2017–ம் ஆண்டு மே மாதம் 20–ந்தேதி திருச்சியில் நடைபெற்ற முத்தரையர் சங்க மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் யூனியன் உச்சிப்புளி அருகே உள்ள தர்கா வலசை கிராமத்தில் இருந்து அதிகம் பேர் வாகனங்களில் சென்றனர். அங்கு மாநாடு முடிந்து ஊருக்கு திரும்பி வந்த அவர்கள் உச்சிப்புளியில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். அப்போது தோப்புவலசை கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன், கார்த்தி உள்பட 4 பேர் அங்கு வந்து ஓட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்தவர்களுடன் தகராறு செய்து தாக்கினர்.

இந்த சம்பவம் தொடர்பாக தர்காவலசை கிராம மக்கள் ஒரு கூட்டம் நடத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினர். அப்போது அந்த பகுதியில் வந்து கொண்டிருந்த தோப்புவலசையை சேர்ந்த வைரவப்பாண்டி, முனீசுவரன் ஆகியோரை தர்காவலசையை சேர்ந்த ஒரு தரப்பினர் தாக்கினர். இந்த சம்பவங்கள் தொடர்பாக இருதரப்பினரும் அளித்த புகாரின்பேரில் உச்சிப்புளி போலீசார் தனித்தனியே வழக்கு பதிவு செய்தனர்.

இந்த பிரச்சினை தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக 2017–ம் ஆண்டு மே 28–ந்தேதி தர்காவலசையை சேர்ந்த நாகராஜ் என்பவர் தனியாக வந்து கொண்டிருந்தபோது ஒரு கும்பல் அவரை தாக்கி கழுத்தை அறுத்து கொலை செய்தது. மேலும் அதே ஊரைச்சேர்ந்த லட்சுமணன்(வயது 40) என்பவரையும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடி விட்டது. இந்த சம்பவம் தொடர்பாக உச்சிப்புளி போலீசார் வழக்கு பதிந்து 3 பேரை கைது செய்தனர். மேலும் 20 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இச்சம்பவத்தில் தொடர்புடையவர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இதில் தொடர்புடைய கவியரசன் என்பவர் போலீசாரிடம் சிக்காமல் கடந்த 1½ ஆண்டுகளுக்கும் மேலாக தலைமறைவாக இருந்து வந்தார். இந்த நிலையில் அவர் உச்சிப்புளி பகுதியில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைதொடர்ந்து உச்சிப்புளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் சாமுவேல், சப்–இன்ஸ்பெக்டர்கள் அன்சாரி, கார்த்திக்ராஜா மற்றும் போலீசார் உச்சிப்புளி அருகே பதுங்கியிருந்த கவியரசனை கைது செய்தனர்.