மாவட்ட செய்திகள்

வாக்குப்பதிவு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட 38 வகை பொருட்கள் + "||" + Were sent to polling centers 38 category items

வாக்குப்பதிவு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட 38 வகை பொருட்கள்

வாக்குப்பதிவு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட 38 வகை பொருட்கள்
ராமநாதபுரம் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் பரமக்குடி சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி வாக்குப்பதிவு மையங்களுக்கு தேவையான 38 வகை பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
ராமநாதபுரம்,

ராமநாதபுரம் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் பரமக்குடி சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று (வியாழக்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. வாக்குப்பதிவு நடைபெற உள்ள 1,916 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்களை லாரிகளில் ஏற்றி கலெக்டர் வீரராகவ ராவ் மற்றும் அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.

ராமநாதபுரம் நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 2 வாக்குப்பதிவு எந்திரங்கள், ஒரு கட்டுப்பாட்டு எந்திரம், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்து கொள்ளும் விவிபாட் எந்திரம் ஆகியவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதேபோல பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு இவற்றுடன் கூடுதலாக சட்டமன்ற தேர்தலுக்கான ஒரு மின்னணு வாக்குப்பதிவு எந்திரம், ஒரு கட்டுப்பாட்டு எந்திரம், ஒரு விவிபாட் எந்திரம் ஆகியவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இவற்றுடன் அந்தந்த வாக்குச்சாவடியில் இடம் பெற்றுள்ள வாக்காளர் பட்டியல், அதில் உள்ள தபால் வாக்குகள், மாற்றுத்திறனாளிகள் விவரம், தேர்தல் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதவிர அழியாத மை, 4 தடுப்பு அட்டைகள், பல்வேறு விண்ணப்ப படிவங்கள், எழுதுபொருட்கள், அரக்கு சீல், ஊசி, நூல், பேனா, பென்சில், உள்ளிட்ட 38 வகையான பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

இவை தவிர அங்குள்ள வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கு 1 முதல் 6 போலீசார் வரை பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் 208 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன. இந்த மையங்களில் பொதுமக்கள் எவ்வித அச்சமுமின்றி சுதந்திரமாக வாக்களிக்க ஏதுவாக போதிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படையினர், தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் வாக்களிப்பதற்காக சாய்வு தளம், சக்கர நாற்காலி வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்களை அழைத்து செல்வதற்கு தன்னார்வலர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் மின்சாரம், குடிநீர், கழிப்பறை, மின் விளக்கு, மின் விசிறி போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வெயிலின் தாக்கத்தை குறைக்கும் வகையில் தேவைப்படும் இடங்களில் நிழற்கூரைகளும் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடி மையங்களில் அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் அமர்ந்து வாக்குப்பதிவை கண்காணிக்கும் வகையில் அவர்களுக்கு தனியாக இருக்கை வசதி, தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வாக்குப்பதிவு எந்திரத்தில் இடம் பெற்றுள்ள வேட்பாளர்கள், சின்னங்கள் பற்றிய விவரத்தை சுவரொட்டிகள் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.