மாவட்ட செய்திகள்

வருமானவரி சோதனையில் ரூ.4 கோடி பறிமுதல்மந்திரி, காங். கூட்டணி வேட்பாளரின் ஆதரவாளர்கள் வீடுகளில் சிக்கியதால் பரபரப்பு + "||" + Income Tax Check Rs 4 crore confiscated

வருமானவரி சோதனையில் ரூ.4 கோடி பறிமுதல்மந்திரி, காங். கூட்டணி வேட்பாளரின் ஆதரவாளர்கள் வீடுகளில் சிக்கியதால் பரபரப்பு

வருமானவரி சோதனையில் ரூ.4 கோடி பறிமுதல்மந்திரி, காங். கூட்டணி வேட்பாளரின் ஆதரவாளர்கள் வீடுகளில் சிக்கியதால் பரபரப்பு
2-வது கட்ட தேர்தல் நடைபெறும் சிவமொக்கா, பாகல்கோட்டையில் நடந்த வருமானவரி சோதனையில் ரூ.4 கோடி சிக்கியது.
பெங்களூரு, 

2-வது கட்ட தேர்தல் நடைபெறும் சிவமொக்கா, பாகல்கோட்டையில் நடந்த வருமானவரி சோதனையில் ரூ.4 கோடி சிக்கியது. குறிப்பாக மந்திரி, காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் ஆகியோரின் ஆதரவாளர்கள் வீடுகளில் பணம் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வருமான வரி சோதனை

கர்நாடகத்தில் முதல்கட்ட நாடாளுமன்ற தேர்தல் தென்கர்நாடகத்தில் உள்ள 14 தொகுதிகளுக்கு கடந்த 18-ந்தேதி நடந்தது. 2-வது கட்டமாக வடகர்நாடகத்தில் உள்ள பாகல்கோட்டை, விஜயாப்புரா உள்பட 14 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு வருகிற 23-ந் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது.

இதையொட்டி வாக்காளர்களுக்கு பணம் வினியோகிப்பதை தடுக்க காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், மந்திரிகள், எம்.எல்.ஏ.க்களின் ஆதரவாளர்கள் வீடுகளில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சில இடங்களில் பா.ஜனதா தலைவர்களின் ஆதரவாளர்கள் வீடுகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

ரூ.4 கோடி சிக்கியது

இந்த நிலையில் 2-வது கட்ட தேர்தல் நடைபெறும் சிவமொக்கா, பாகல்கோட்டை, விஜயாப்புரா ஆகிய மாவட்டங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று தீவிர சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் சிக்கியது. மொத்தம் ரூ.4 கோடி ரொக்கம் சிக்கியது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

மந்திரியின் ஆதரவாளர்கள்

முதல்-மந்திரி குமாரசாமியின் மந்திரி சபையில் சுகாதாரத்துறை மந்திரியாக இருப்பவர் சிவானந்த பட்டீல். இவர் பாகல்கோட்டை மாவட்ட பொறுப்பு மந்திரியாக இருந்து வருகிறார். இந்த நிலையில் மந்திரி சிவானந்த பட்டீலின் ஆதரவாளர்களான ஆரீப் கார்லேகர், யாசீன் ஆகிய 2 பேரின் வீடுகளில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

பழைய பேட்டையில் உள்ள யாசீன், நவநகரில் உள்ள ஆரீப் கார்லேகர் ஆகியோரது வீடுகளில் நேற்று மதியம் முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது வீட்டில் உள்ள முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் பரிசீலனை செய்தனர். இதில் சோதனைக்கு உள்ளான ஆரீப் கார்லேகர் மாவட்ட கூட்டுறவு வங்கியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்த சோதனையின்போது ரூ.1 கோடி சிக்கியது. இது தொடர்பாக யாசீன் மற்றும் ஆரீப் கார்லேகர் ஆகியோரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெண் வேட்பாளரின் ஆதரவாளர்கள்

இதேபோல், விஜயாப்புரா நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் சுனிதா சவுகான் என்பவர் போட்டியிடுகிறார். இவர் நாகடானா தொகுதி ஜனதாதளம்(எஸ்) கட்சி எம்.எல்.ஏ.வான தேவானந்த் சவுகானின் மனைவி ஆவார். இந்த நிலையில் நேற்று திடீரென்று வேட்பாளர் சுனிதா சவுகானின் ஆதரவாளர்களான இண்டி தாலுகா தம்பா கிராமத்தில் உள்ள ராமசந்திரா தொட்டமணி, தேவப்பா ஆகியோரின் வீடுகளில் வருமான வரி சோதனை மேற்கொள்ளப்பட்டு ஆவணங்கள் பரிசீலனை செய்யப்பட்டன. இந்த சோதனையின்போது ரூ.12 லட்சம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

முதல்-மந்திரி குமாரசாமி, முன்னாள் பிரதமர் தேவேகவுடா ஆகியோர் சுனிதா சவுகானை ஆதரித்து நேற்று பிரசாரம் செய்த நிலையில் அவர்கள் 2 பேரும் நேற்று விஜயாப்புராவில் இருந்து வெளியேறினர். அதன்பிறகு இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

இதுகுறித்து நாகடானா தொகுதி எம்.எல்.ஏ. தேவானந்த் சவுகான் கூறுகையில், ‘வருமான வரி சோதனையில் சட்டவிரோதமாக வைக்கப்பட்ட பணம் எதுவும் கிடைக்கவில்லை. தோல்வி பயத்தில் எதிராளிகள் வருமான வரித்துறையை அனுப்பி உள்ளனர். தேர்தல் நேரத்தில் எங்களை திசைதிருப்பவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு அஞ்சமாட்டோம்’ என்றார்.

அதுபோல் சிவமொக்காவில் காரில் இருந்த மாற்று டயருக்குள் பதுக்கிவைத்திருந்த ரூ.2.30 கோடியை வருமானவரித் துறையினர் பறிமுதல் செய்தனர். இதுபற்றி காரில் இருந்தவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். பத்ராவதியில் நடந்த வருமானவரி சோதனையில் ரூ.60 லட்சம் சிக்கியுள்ளது.

இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வருமானவரித்துறை விளக்கம்

இந்த சோதனை குறித்த வருமானவரித் துறை விளக்கமளித்துள்ளது. அதுதொடர்பாக வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இன்று(அதாவது நேற்று) வருமான வரித்துறை சார்பில் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதன்மூலம் ரூ.4 கோடிக்கும் அதிகமான பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. பெங்களூருவில் இருந்து சிவமொக்கா, பத்ராவதிக்கு சென்ற வாகனத்தில் மாற்று டயருக்குள் வைத்து கடத்தி செல்லப்பட்ட ரூ.2.30 கோடி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

அதுபோல் பத்ராவதியில் நடந்த சோதனையில் ரூ.60 லட்சம் சிக்கியது. பாகல்கோட்டையில் உள்ள நவநகரில் வங்கி ஊழியர் வீட்டில் ரூ.1 கோடி சிக்கியது. வி்ஜயாப்புராவில் நடந்த சோதனையில் ரூ.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

மேலும் கோவாவில் நகைக்கடை அதிபர்கள் 2 பேரின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் ரூ.30 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசிக்கப்பட்டவை