மாவட்ட செய்திகள்

மனித மூளையை இணையத்துடன் இரண்டறக் கலக்கும் தொழில்நுட்பம் + "||" + The internet has swallowed the whole man

மனித மூளையை இணையத்துடன் இரண்டறக் கலக்கும் தொழில்நுட்பம்

மனித மூளையை இணையத்துடன் இரண்டறக் கலக்கும் தொழில்நுட்பம்
இன்டர்நெட்டானது மனிதனை முழுவதுமாக விழுங்கிவிட்டது
இன்று உலக மக்கள் அனைவரின் கைகளிலும் தவழ்ந்து விளையாடும் ஸ்மார்ட்போனின் வருகையால் உலகமே உள்ளங்கையில் அடங்கிப்போனது. ஆனால் இணையமானது மனிதனின் வாழ்க்கையை முற்றிலும் ஆக்கிரமித்தது மட்டுமல்லாமல், யாருக்கு ஓட்டு போடுவது என்ற ஒவ்வொருவரின் முடிவு தொடங்கி, தனி மனித பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அந்தரங்க தகவல்கள் திருடப்படுவது வரை இணையம் அல்லது இன்டர்நெட்டானது மனிதனை முழுவதுமாக விழுங்கிவிட்டது என்பது கவலைக்குறிய செய்தியும் கூட.

இது ஒருபுறமிருக்க, மனித உடலாக இருந்துகொண்டு எந்திரமாக இருக்கும் கம்ப்யூட்டர் வழியாக இன்டர்நெட்டில் உலவாமல், ‘கிளவுட்’ (cloud) எனப்படும் ‘இணையவெளி’யில் மனித மூளையை முற்றிலுமாக இணைத்துவிட முடியுமா என்று உலகின் பல ஆய்வாளர்கள் கடந்த பல வருடங்களாக அயராமல் ஆய்வு செய்து வருகின்றனர்.

முக்கியமாக, அத்தகைய ஒரு முயற்சியின் தொடக்கமாக, இரண்டு மனிதர்களின் மூளைகளை ஒன்றிணைக்கும் ஒரு மூளைத்தொடர்பு ஆய்வு நடைபெற்றது. அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகம் மற்றும் கார்னெகி மெல்லான் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கடந்த 2017-ம் வருடம் இந்த ஆய்வை நடத்தினார்கள். அப்போது, இரண்டு மனிதர்களின் மூளையை நேரடியாக இணைத்து, அதன் மூலமாக, சரி அல்லது தவறு ஆகிய விடைகள் கொண்ட 20 கேள்வி கள் அடங்கிய ஒரு விளையாட்டை வெற்றிகரமாக விளையாட வைத்தனர்.

அதே ஆய்வுக்குழுவினர், கடந்த 2018-ம் வருடம் மூன்று மனிதர்களின் மூளைகளை ஒன்றாக இணைத்து, அவர்களின் எண்ணங்களை பரிமாறிக்கொள்ளவும் செய்து அசத்தியுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல், ஒன்றாக இணைக்கப்பட்ட மூன்று மூளைகளின் எண்ணங்களைக் கொண்டு ‘டெட்ரிஸ்’ (Tetris) எனும் ஒரு விளையாட்டை வெற்றிகரமாக விளையாட முடியும் என்று உலகில் முதல் முறையாக நிரூபித்தனர்.

இது போதாதென்று, அதே மருத்துவத் தொழில்நுட்பத்தைக் கொண்டு மக்கள் பலரின் மூளைகளை ஒன்றிணைத்து மனித மூளை வலை ஒன்றை உருவாக்க முடியும் என்றும் அந்த ஆய்வுக்குழுவினர் கூறியுள்ளனர். அத்தகைய ஒரு ஆய்வு முயற்சியின் நீட்சியாக, இன்னும் சில பத்தாண்டுகளில் மனித மூளையை இணைய வெளியுடன் முற்றிலுமாக இணைத்துவிட முடியும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

‘மனித மூளை-இணையவெளி இடைமுகம்’ (human brain-cloud interface' (B-CI)) எப்படி இருக்கும் மற்றும் எப்படிச் செயல்படும் என்பது குறித்த விளக்கமான ஒரு ஆய்வுக்கட்டுரையை கலிபோர்னியாவில் உள்ள இன்ஸ்டிடியூட் பார் மாளிகியூலர் மேனுபேக்சரிங் ஆய்வு மையத்தைச் சேர்ந்த நானோதொழில்நுட்ப ஆய்வாளர் ராபர்ட் ப்ரேய்டாஸ் தலைமையிலான ஆய்வுக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

கேட்பதற்கு ஒரு அறிவியல் புனைக்கதை போலத் தோன்றும் இந்த தொழில்நுட்பம் சாத்தியமே என்றும், அதற்கான அவசியத் தேவைகள் என்னவென்றும் இந்த ஆய்வுக்கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது.

முக்கியமாக, நானோ ரோபாட்டிக்ஸ் எனும் ஆய்வுத்துறையின் முன்னேற்றங்கள் மூலமாகவே இந்த மனித-இணையவெளி இடைமுகம் சாத்தியமாகும் என்கிறார் ஆய்வாளர் ராபர்ட். மேலும், மனிதத் தலைமுடியின் தடிமனை விட குறைவான தடிமன் கொண்ட நுண்ணிய எந்திரங்களான நானோபாட்ஸ் (nanobots) தற்போது மனிதர்களுக்கு பலவிதத்தில் பயன்படும் என்பது உறுதியாகிவிட்டது. அதுபோல, மனித-இணையவெளி இடைமுகம் உருவாக நரம்பியல் நானோ ரோபாட் தொழில்நுட்பம் (neural nanorobotics) அவசியப்படும் என்றும் கூறுகிறார் ராபர்ட்.

நரம்பியல் நானோரோபாட் கருவிகள் மனித ரத்த நாளங்கள் வழியாக மூளை-ரத்த தடையைத் தாண்டி மூளைக்குள் நுழைந்து, பின்னர் மூளையின் குறிப்பிட்ட உயிரணுக்களுக்கு அருகில் அல்லது அந்த உயிரணுக்களுக்கு உள்ளே நுழைந்து கொள்ளும். அதனைத் தொடர்ந்து மூளையில் இருக்கும் தகவல்களை இணையவெளிக்கும், இணையவெளியில் இருக்கும் தகவல்களை மனித மூளைக்கும் என இருபுறமும் ஒயர்லெஸ் முறையில் தகவல் பரிமாற்றம் செய்யும் என்று ஆச்சரியப்படுத்துகிறார் ராபர்ட்.

கேட்பதற்கு ‘மேட்ரிக்ஸ்’ திரைபடத்தில் வரும் காட்சிகள் போலத் தோன்றும் இந்த தொழில்நுட்பம் கற்பனை அல்ல முற்றிலும் சாத்தியமே என்று உறுதியாகக் கூறுகிறார் ராபர்ட். உதாரணமாக, சில பத்தாண்டுகளுக்கு முன்பு ‘இன்டர்நெட்’ என்ற ஒன்றே இல்லை. ஆனால் இன்று, இன்டர்நெட் முகத்தில் கண் விழித்து அதே இன்டர்நெட்டில் சில நிமிடங்கள் முதல் பல மணி நேரங்கள் வரை மூழ்கிக் கிடந்துவிட்டு பிறகுதான் உறங்கவே செல்கிறோம் நாம்.

ஆக, நாம் தற்போது உடலால் கம்ப்யூட்டருக்குள் நுழையவில்லையே தவிர, மற்றபடி நம் மூளையால், எண்ணங்களால் கம்ப்யூட்டர்களில்தான் வாழ்ந்து வருகிறோம் என்பது மறுக்க முடியாத உண்மை. கடந்த வருடம் மூன்று மூளைகளை இணைத்த ப்ரெயின் நெட் (BrainNet) தொழில்நுட்பம், மூன்று மூளைகளுக்கு இடையிலான மின் சமிக்ஞைகள் (electrical signals) மற்றும் காந்தத் தூண்டுதல்கள் வழியாகவே செயல்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கியமாக, நியூரல் நானோரோபாட்டிக்ஸ் துறையின் முன்னேற்றம் மூலமாக ‘சூப்பர் மூளை’கள் உருவாக்கப்படும் என்றும், மிகவும் முக்கியமாக, அத்தகைய சூப்பர் மூளைகள் எண்ணற்ற மனிதர்கள் மற்றும் எந்திரங்களின் எண்ணங்கள் மற்றும் சிந்தனைத் திறன் ஆகியவற்றை நிகழ்நேரத்தில் சேகரித்து செயல்படும் அசுரத்திறன் கொண்டதாக இருக்கும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

அதெல்லாம் சரி, இந்த தொழில்நுட்பம் உருவாக என்னென்ன தடைகள் ஏற்படும் என்று கேட்டால், மனித மூளைத் திசுவுடன் நியூரல் நானோரோபாட்களை பாதுகாப்பாக இணைப்பதுதான் என்று கூறப்படுகிறது.

எது எப்படி இருந்தாலும், கற்பனை செய்தால் அட்டகாசமாகவும், அதேசமயம் அபாயகரமாகவும் தோன்றும் மூளை-இணையவெளி இடைமுகத்தை மனிதர்கள் உருவாக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என்றே பெரும்பாலான விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.