மாவட்ட செய்திகள்

மானாமதுரை அருகே பெண் எரித்துக் கொலை + "||" + The girl was burnt alive near Manamadurai

மானாமதுரை அருகே பெண் எரித்துக் கொலை

மானாமதுரை அருகே பெண் எரித்துக் கொலை
மானாமதுரை அருகே தேசிய நெடுஞ்சாலையோரத்தில் ஒரு பெண் எரித்துக் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மானாமதுரை,

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள வாகுடி ரோட்டில் மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் ஒரு பெண் எரித்துக் கொல்லப்பட்டு கிடந்தார். அவரது உடல் அடையாளம் காண முடியாத அளவில் உருக்குலைந்து கிடந்தது. இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து, மானாமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து நேற்று அதிகாலை சம்பவ இடத்திற்கு சென்ற மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். அந்த பெண்ணுக்கு சுமார் 35 வயது இருக்கும்.

மேலும் அந்த பெண் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். அந்த பெண்ணின் உடலை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து போலீசார் அந்த பகுதியிலும், மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் பெண் யாரும் காணாமல் போனதாக புகார் எதுவும் உள்ளதா? என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பெண் எதற்காக கொல்லப்பட்டார்? காதல் விவகாரம் காரணமா? கடத்தி வந்து கொன்றார்களா? என்ற கோணங்களில் தீவிர விசாரணை நடந்து வருகிறது.