மாவட்ட செய்திகள்

கழிவு நீரை சுத்திகரித்து தொழிற்சாலைகளுக்கு வினியோகம்சென்னை குடிநீர் வாரியம் அதிரடி நடவடிக்கை + "||" + Chennai Water Board Action

கழிவு நீரை சுத்திகரித்து தொழிற்சாலைகளுக்கு வினியோகம்சென்னை குடிநீர் வாரியம் அதிரடி நடவடிக்கை

கழிவு நீரை சுத்திகரித்து தொழிற்சாலைகளுக்கு வினியோகம்சென்னை குடிநீர் வாரியம் அதிரடி நடவடிக்கை
கோயம்பேடு, கொடுங்கையூரில் அமைந்துள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து செப்டம்பர் மாதம் முதல் தினசரி 90 மில்லியன் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு தொழிற்சாலைகளுக்கு வழங்க சென்னை குடிநீர் வாரியம் நடவடிக்கை எடுத்து உள்ளது.
சென்னை,

ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டுகோட்டையில் உள்ள தொழிற்சாலைகளுக்கு தேவையான 45 மில்லியன் லிட்டர் தண்ணீர் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து சென்னை குடிநீர் வாரியம் வழங்கி வருகிறது. அதேபோல் மணலியில் உள்ள பெட்ரோலிய பொருட்கள் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு தேவையான 45 மில்லியன் லிட்டர் தண்ணீர் மீஞ்சூரில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் இருந்து வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

போதுமான குடிநீர் வீடுகளுக்கே வழங்க முடியாத நிலையில், தொழிற்சாலைகளுக்கும் தண்ணீர் வழங்க வேண்டிய நிலை இருந்து வருகிறது. இதனை மாற்றி அமைக்க புதிய திட்டத்தை சென்னை குடிநீர் வாரியம் முடிவு செய்து நடவடிக்கையில் இறங்கி உள்ளது.

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்

குறிப்பாக கோயம்பேடு, கொடுங்கையூர், நெசப்பாக்கம், பெருங்குடி ஆகிய 4 இடங்களில் கழிவு நீரை சுத்திகரிக்கும் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. தலா ரூ.700 கோடி மதிப்பில் இந்த நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலையில் கோயம்பேடு, கொடுங்கையூர் ஆகிய 2 இடங்களிலும் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகள் நிறைவடைந்து உள்ளன. ஜூலை மாதம் முதல் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் பெறப்படுகிறது.

அதற்கு பிறகு கோயம்பேட்டில் உள்ள கழிவுநீரை சுத்திகரிக்கும் நிலையத்தில் இருந்து சுத்திகரிக்கப்படும் தண்ணீர் ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டுகோட்டை பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்பட உள்ளது. அதேபோல் மணலி பகுதியில் உள்ள பெட்ரோலிய பொருட்கள் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு கொடுங்கையூரில் உள்ள சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து தண்ணீர் வினியோகம் செய்யப்பட உள்ளது.

இதுகுறித்து சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் டி.என்.ஹரிஹரன் கூறியதாவது:-

தொழிற்சாலைகளுக்கு மாற்று ஏற்பாடு

ஸ்ரீபெரும்புதூரை சுற்றியுள்ள தொழிற்சாலைகளுக்கு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தினசரி 45 மில்லியன் லிட்டர் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்போது செம்பரம்பாக்கம் ஏரி வறண்டுவிட்டதால் கல்குவாரி, புழல் ஏரியில் இருந்து பெறப்படும் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் மணலியில் உள்ள சுத்திகரிப்பு நிலையங்களுக்கு மீஞ்சூரில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் கோயம்பேடு மற்றும் கொடுங்கையூர் பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து பெறப்படும் தண்ணீர் தொழிற்சாலைகளுக்கு மாற்று ஏற்பாடாக வழங்கப்பட உள்ளது. இதற்காக கோயம்பேட்டில் இருந்து ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டுகோட்டை, சிப்காட் சுற்றியுள்ள பகுதிகளுக்கு குழாய்கள் பதிக்கும் பணி நிறைவு நிலையை இறுதிகட்டத்தை எட்டி உள்ளது.

அதேபோல் கொடுங்கையூரில் இருந்து மணலியில் உள்ள பெட்ரோலிய பொருட்கள் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு குழாய்கள் பதிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இவ்வாறு தொழிற்சாலைகளுக்கு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டால், தற்போது தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும் குடிநீரை பொதுமக்களுக்கு வழங்க முடியும்.

குடிக்க உகந்தது

சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர் குடிக்க கூட உகந்ததாக தான் உள்ளது. இதில் எந்த வித மாற்றத்தையும் பார்க்க முடியாது. கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் இருந்து பெறப்படும் குடிநீரை விட, கழிவு நீரை சுத்திகரிக்கும் நிலையங்களில் இருந்து பெறப்படும் தண்ணீர் அவ்வளவு சுத்தமாகவே இருக்கும்.

சென்னை மாநகருக்கு தினமும் 550 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்படுகிறது. அதே அளவுக்கு கழிவு நீரும் சேகரிக்கப்படுகிறது. இதனை சுத்திகரிக்கும் போது 80 சதவீதம் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் கிடைக்கிறது. இந்த தண்ணீர் தற்போது கோயம்பேடு, கொடுங்கையூரில் உள்ள சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் சோதனை அடிப்படையில் சுத்திகரிப்பு பணி நடக்க இருக்கிறது. வரும் ஜூலை மாதம் முழு அளவில் பணிகள் நிறைவடைந்து செப்டம்பர் மாதம் தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வினியோகம் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.

செலவு குறைவு

கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்களில் இருந்து கடல் தண்ணீரை குடிநீராக்குவதற்கு ஆகும் செலவை விட கழிவு நீரில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட நீர் தயாரிக்க 50 சதவீதம் செலவு குறைவாக இருப்பதுடன், தண்ணீரும் நன்றாகவே இருக்கிறது.

கோயம்பேடு, கொடுங்கையூரை தொடர்ந்து நெசப்பாக்கம் மற்றும் பெருங்குடியில் அமைக்கப்பட்டு வரும் சுத்திகரிப்பு நிலைய பணிகளும் விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளது. இதன் மூலம் கழிவு நீர் சுத்திகரிக்கப்பட்டு தொழிற்சாலைகளுக்கு வழங்க முடியும். தற்போது தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும் குடிநீர், முழுவதும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திருப்பி விட முடியும் என்ற நிலை உருவாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.