மாவட்ட செய்திகள்

புதுவை தொகுதியில் வாக்கு எண்ணிக்கை இரவு வரை நீடிக்கும்; மாவட்ட தேர்தல் அதிகாரி பேட்டி + "||" + Counting of votes in the pondichery constituency will last until night; District Electoral Officer interviewed

புதுவை தொகுதியில் வாக்கு எண்ணிக்கை இரவு வரை நீடிக்கும்; மாவட்ட தேர்தல் அதிகாரி பேட்டி

புதுவை தொகுதியில் வாக்கு எண்ணிக்கை இரவு வரை நீடிக்கும்; மாவட்ட தேர்தல் அதிகாரி பேட்டி
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வி.வி.பாட் எந்திரங்களில் பதிவான வாக்குகளை ஒப்பிட்டு பார்த்து வாக்குகள் எண்ணப்படுவதால் புதுவை எம்.பி. தொகுதி வாக்கு எண்ணிக்கை இரவு வரை நீடிக்கும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரி அருண் கூறினார்.
புதுச்சேரி,

புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதிக்காக வாக்குப்பதிவு கடந்த மாதம் (ஏப்ரல்) 18-ந் தேதி நடந்து முடிந்தது. வாக்கு எண்ணிக்கை வருகிற 23-ந் தேதி நடைபெற உள்ளது. புதுவையில் உள்ள 23 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களான புதுவை லாஸ்பேட்டையில் உள்ள பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரியிலும், மோதிலால் நேரு அரசு பாலிடெக்னிக் கல்லூரியிலும் வைக்கப்பட்டுள்ளன. அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு பணியில் மத்திய பாதுகாப்பு படையினரும், ஐ.ஆர்.பி.என். போலீசாரும், புதுவை உள்ளூர் போலீசாரும் சுழற்சி முறையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதேபோல் தாசில்தார் மற்றும் அதிகாரிகள் சுழற்சி முறையில் கண்காணித்து வருகின்றனர். வாக்கு எண்ணிக்கை மையத்தில் 2 தீயணைப்பு வாகனமும், தீயணைப்பு வீரர்களும் தயார் நிலையில் உள்ளனர். மேலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பும் நடந்து வருகிறது.

இந்த நிலையில் லாஸ்பேட்டை வாக்கு எண்ணிக்கை மையங்களில் மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான அருண், மத்திய ராணுவப்பிரிவு டி.ஜி.பி. இளங்கோ ஆகியோர் நேற்று மாலை ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டனர். இந்த ஆய்வின்போது வாக்கு எண்ணும் மையத்தின் சிறப்பு அதிகாரி செந்தில்குமார் உடனிருந்தார்.

ஆய்வு முடிந்தவுடன் மாவட்ட தேர்தல் அதிகாரி அருண் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தேர்தல் துறை ஆணையத்தின் உத்தரவுபடி வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இது வழக்கமாக நடைபெறும் பணிதான். இங்கு பாதுகாப்பு வசதிகள் முறையாக உள்ளது.

வாக்கு எண்ணிக்கை வருகிற 23-ந் தேதி காலை 8 மணிக்கு தொடங்குகிறது. முதலில் தபால் வாக்கு எண்ணப்படும். அதைத்தொடர்ந்து 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். மேலும் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 5 வி.வி.பாட் எந்திரங்களில் உள்ள வாக்குகள் எண்ணப்படும். மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வி.வி.பாட் எந்திரங்களில் பதிவான வாக்குகளை ஒப்பிட்டு பார்த்து அறிவிப்பு வெளியிடப்படும். அதனால் வாக்கு எண்ணிக்கை இரவு வரை நீடிக்கும். எனவே தேர்தல் முடிவு வெளியிடும் நேரத்தை துல்லியமாக தெரிவிக்க முடியாது. வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் தேர்தல் அதிகாரிகளுக்கு 3 கட்டமாக பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.