மாவட்ட செய்திகள்

நெல்லை நயினார்குளத்தில் மீன்பிடிக்கும் பணி + "||" + Nellai Nainikarkulam Fishing work

நெல்லை நயினார்குளத்தில் மீன்பிடிக்கும் பணி

நெல்லை நயினார்குளத்தில் மீன்பிடிக்கும் பணி
நெல்லை டவுன் நயினார்குளத்தில் மீன்பிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நெல்லை,

நெல்லை டவுன் நயினார்குளம் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமானது ஆகும். 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த குளம் மீன்பாசி குத்தகை விடப்படும். இதனை நீர்ப்பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் குத்தகை எடுத்து மீன் வளர்த்து வருகின்றனர். கடந்த 2017-ம் ஆண்டு இந்த குளத்தில் மீன் குஞ்சுகள் விடப்பட்டன. ஓராண்டு மீன்கள் வளர்ந்திருந்த நிலையில் குளத்தில் தண்ணீர் முழுமையாக இருந்ததால் மீன்களை பிடிக்க முடியவில்லை.

இதையடுத்து இந்த ஆண்டு கோடையால் சற்று தண்ணீர் குறைந்து உள்ளது. மேலும் சமீபத்தில் குளத்தில் இருந்து தண்ணீரும் திறக்கப்பட்டது. இதையடுத்து மீன்பிடிக்கும் பணி தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நேற்று காலை இந்த குளத்தில் தொழிலாளர்கள் வலைவீசி மீன்களை பிடித்தனர். அவற்றை சாக்கு மூட்டைகளில் கட்டி, கரையில் நிறுத்தி இருந்த லாரியில் கொண்டு வந்து கொட்டினர். பின்னர் ஐஸ் கட்டிகளை போட்டு மதுரை மற்றும் கேரள மாநிலத்துக்கு விற்பனைக்காக கொண்டு சென்றனர்.இதுகுறித்து நீர்ப்பாசன விவசாயிகள் சங்க தலைவர் நெல்லையப்பன் கூறியதாவது:-

நயினார்குளத்தில் ஆண்டுதோறும் மீன்குஞ்சுகளை விட்டு, ஓராண்டு வளர்ப்பில் பிடித்து விடுவோம். தற்போது 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் மீன்குஞ்சுகள் விடப்பட்டன. 2 ஆண்டுகள் வளர்க்கப்பட்டதால் மீன்கள் எடை 4 கிலோ முதல் 7 கிலோ வரை இருக்கிறது. இதில் கட்லா, கெண்டை வகைகள், மிர்கால், ரோகு, சிலேபி உள்ளிட்ட வகையிலான மீன்கள் பிடிக்கப்பட்டு வருகிறது. மேலும் 4 நாட்கள் இந்த மீன்பிடிக்கும் பணி நடைபெறுகிறது.

இங்கு பிடிக்கப்படும் மீன்கள் ஒரு கிலோ ரூ.80 முதல் ரூ.160 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதன்மூலம் கிடைக்கும் பணத்தை கொண்டு நயினார்குளத்தில் உள்ள 9 மடைகள், குன்னத்தூரில் இருந்து நயினார்குளத்துக்கு தண்ணீர் வரும் 3½ கிலோ மீட்டர் கால்வாய் ஆகியவை பராமரிப்பு செய்ய உள்ளோம். நயினார்குளம் தண்ணீர் தற்போது மீன்பிடிப்பதற்காக திறக்கப்படவில்லை. வாழை மற்றும் மஞ்சள் விவசாயத்துக்காக திறந்து பயன்படுத்தப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.