மாவட்ட செய்திகள்

அருள் மீது போடப்பட்டுள்ள குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி வக்கீல்கள் கண்டன ஆர்ப்பாட்டம் + "||" + Demonstrators have demanded to cancel the thief's law on grace

அருள் மீது போடப்பட்டுள்ள குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி வக்கீல்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

அருள் மீது போடப்பட்டுள்ள குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி வக்கீல்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
வக்கீல் அருள் மீது போடப்பட்டுள்ள குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி பெரம்பலூரில் வக்கீல்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர்,

வேலை வாங்கி தருவதாக கூறி பெரம்பலூரில் இளம்பெண்கள் பலரை அ.தி.மு.க. பிரமுகர் மற்றும் சிலர், போலி பத்திரிகையாளர் ஒருவர் உதவியுடன் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக கடந்த மாதம் 21-ந்தேதி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் கொடுத்த நாம் தமிழர் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளரும், வக்கீலுமான அருளை பெரம்பலூர் வக்கீல்கள் நல சங்கத்தை சேர்ந்த வக்கீல்கள் கொடுத்த புகாரின்பேரில், பெரம்பலூர் போலீசார் தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இதற்கிடையே, இது குறித்து பெண் பேசியதாக போலியான செல்போன் ஆடியோ வெளியிட்டதாக பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் 2-வது வழக்குப்பதிவு செய்து, மீண்டும் வக்கீல் அருளை கைது செய்தனர். வக்கீல் அருளுக்கு, 2 வழக்கிலும் பெரம்பலூர் கோர்ட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. ஆனால், பெண் பேசியதாக போலியான செல்போன் ஆடியோ வெளியிட்டதற்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷா மித்தல் பரிந்துரையின்பேரில் கலெக்டர் சாந்தா அருளை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து குண்டர் சட்டத்தின் கீழ் அருளை கைது செய்ததற்கான நகலை, திருச்சி மத்திய சிறையில் உள்ள வக்கீல் அருளிடம் போலீசார் வழங்கினர். இதனால், ஜாமீன் கிடைத்தும் வெளியில் வர முடியாமல் சிறையிலேயே அருள் உள்ளார்.

வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

இந்நிலையில் வக்கீல் அருள்மீது பொய் வழக்கு போட்டு குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுத்த மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து பெரம்பலூர் மாவட்ட வக்கீல்கள் சங்கத்தினர் நேற்று காலை புதிய பஸ் நிலையத்தின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு சங்கத்தின் தலைவர் முகமது இலியாஸ் தலைமை தாங்கினார். முன்னாள் தலைவர் கோவிந்தராஜன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். சங்கத்தின் செயலாளர் துரை, பொருளாளர் பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட வக்கீல்கள், வக்கீல் அருள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளையும், குண்டர் சட்டத்தையும் ரத்து செய்ய வேண்டும். இந்த வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.

கோர்ட்டு பணிகள் 2-வது நாளாக புறக்கணிப்பு

வக்கீல் அருளை குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளதற்கு கண்டனம் தெரிவித்து நேற்று முன்தினம் முதல் பெரம்பலூரில் வக்கீல்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 2-வது நாளாக இந்த போராட்டம் நடந்தது. நாளை (வெள்ளிக்கிழமை) வரை வக்கீல்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு போராட்டம் நடைபெறுகிறது. அருள் மீதான குண்டர் சட்டத்தை நாளைக்குள் ரத்து செய்யாவிட்டால், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து வருகிற 20-ந்தேதி கூட்டம் நடத்தி போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என்று வக்கீல் சங்கத்தினர் தெரிவித்தனர். வக்கீல்களின் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தால் நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.