பாகூர் அருகே வீட்டில் தனியாக இருந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மின்துறை ஊழியர் கைது போக்சோ சட்டம் பாய்ந்தது


பாகூர் அருகே வீட்டில் தனியாக இருந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மின்துறை ஊழியர் கைது போக்சோ சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 16 May 2019 11:15 PM GMT (Updated: 16 May 2019 7:23 PM GMT)

பாகூர் அருகே மின்சார ரீடிங் எடுக்க சென்ற போது வீட்டில் தனியாக இருந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக மின்துறை ஊழியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

பாகூர், 

புதுச்சேரி மாநிலம் அபிஷேகப்பாக்கத்தைச் சேர்ந்தவர் வினோத் (வயது 26). அரசு மின்துறை ஊழியர். இவருக்கு வீடு வீடாகச் சென்று மின்சார மீட்டரில் ரீடிங் கணக்கெடுத்து உபயோகிப்பாளர்களுக்கு மின்கட்டண பில்போடும் பணி ஒதுக்கப்பட்டுள்ளது.

பாகூர் அருகே உள்ள கிராமத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரீடிங் எடுக்கும் பணியில் வினோத் ஈடுபட்டிருந்தார். அப்போது, ஒரு வீட்டில் 4-ம் வகுப்பு படித்து வரும் 9 வயது சிறுமி தனியாக இருப்பதை தெரிந்து கொண்டார். இதைத்தொடர்ந்து தண்ணீர் கேட்பது போல் நடித்து அந்த சிறுமியை மிரட்டி வினோத் பாலியல் பலாத்காரம் செய்தார்.

அப்போது சிறுமி அலறிய சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்ததும் வினோத் அங்கிருந்து தப்பி ஓடினார். அந்த சிறுமிக்கு புதுச்சேரி ராஜீவ்காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின்பேரில், பாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவுதம் சிவகணேஷ், சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் ஆகியோர் விசாரணை நடத்தினார்கள். விசாரணையைத் தொடர்ந்து மின்துறை ஊழியர் வினோத் மீது, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சட்டப்பிரிவின் கீழ் (போக்சோ) வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வந்தனர். இந்தநிலையில் மின்துறை ஊழியரை உடனடியாக கைது செய்யக்கோரி சிறுமியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பாகூர்- கரிக்கலாம் பாக்கம் ரோட்டில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி அறிந்து பாகூர் போலீசார் அங்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் கிராம மக்கள் அதனை ஏற்கவில்லை, மின்துறை ஊழியரை கைது செய்தால் மட்டுமே மறியலை கைவிடுவோம் என கூறினர்.

இதற்கிடையே அபிஷேகப்பாக்கம் பகுதியில் பதுங்கி இருந்த வினோத்தை தனிப்படை போலீசார் இரவோடு இரவாக கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரிக்கும் செல்போனில் எடுத்த படத்தை காட்டிய பிறகே பொதுமக்கள் மறியலை கைவிட்டனர்.

இந்தநிலையில் விசாரணைக்குப் பின் வினோத் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதையொட்டி மின்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வினோத் குறித்து தலைமைக்கு அறிக்கை அனுப்பி உள்ளனர். இதையடுத்து துறை ரீதியாகவும் அவர் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

Next Story