மாவட்ட செய்திகள்

சிவகாசியில் பரபரப்பு: போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்கு சென்ற வாலிபர் சாவு, மாஜிஸ்திரேட்டு விசாரணை + "||" + The death of a young man who went to the police station in Sivakasi, Magistrate trial

சிவகாசியில் பரபரப்பு: போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்கு சென்ற வாலிபர் சாவு, மாஜிஸ்திரேட்டு விசாரணை

சிவகாசியில் பரபரப்பு: போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்கு சென்ற வாலிபர் சாவு, மாஜிஸ்திரேட்டு விசாரணை
சிவகாசியில் விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்செல்லப்பட்ட வாலிபர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுதொடர்பாக மாஜிஸ்திரேட்டு விசாரணை நடத்தினார்.
சிவகாசி,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி முத்துராமலிங்கபுரம் காலனியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் என்ற பாபு (வயது 32). அவருடைய மனைவி பஞ்சவர்ணம். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். பல்வேறு திருட்டு வழக்குகளில் ராமச்சந்திரனுக்கு தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சிவகாசி கிழக்கு போலீசார் மின்கம்பி திருட்டு தொடர்பாக ராமச்சந்திரனை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

நேற்று காலை ராமச்சந்திரனை கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக போலீசார் ஏற்பாடு செய்து கொண்டிருந்தபோது, தனக்கு திடீரென மயக்கம் வருவதாக கூறியுள்ளார். போலீசார் உடனடியாக அவரை சிகிச்சைக்காக ஆட்டோவில் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் மயக்க நிலையை அடைந்து விட்டதாக தெரிகிறது.

அரசு மருத்துவமனைக்கு சென்றவுடன் ராமச்சந்திரனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

திருட்டு வழக்கு தொடர்பாக போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வாலிபர் உயிரிழந்த சம்பவம் சிவகாசியிலும், போலீஸ் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது சாவுக்கான காரணம் குறித்து போலீஸ் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

மேலும் ராமச்சந்திரன் இறந்தது தொடர்பாக கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். நடந்த சம்பவம் குறித்து சிவகாசி மாஜிஸ்திரேட்டு சந்தனகுமார் நேரில் வந்து விசாரணை நடத்தினார்.

தகவல் அறிந்து ராமச்சந்திரனின் மனைவி பஞ்சவர்ணம் மற்றும் உறவினர்கள் மருத்துவமனைக்கு திரண்டு வந்தனர். தனது கணவரை போலீசாரே அடித்துக்கொன்று விட்டனர் என்று மாஜிஸ்திரேட்டிடம் பஞ்சவர்ணம் கதறி அழுதபடி மனு கொடுத்தார். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாஜிஸ்திரேட்டு உறுதி அளித்தார். அதன் பின்பு ராமச்சந்திரனின் உடல் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.