மாவட்ட செய்திகள்

ஆரணி, திருவண்ணாமலை நாடாளுமன்ற தேர்தல்: சட்டமன்ற தொகுதி வாரியாக 14 மேஜைகள் அமைத்து வாக்கு எண்ணிக்கை - கலெக்டர் தகவல் + "||" + Arani, Thiruvannamalai Parliamentary Elections: Counting and Setting up 14 Tables by Assembly Constituency - Collector information

ஆரணி, திருவண்ணாமலை நாடாளுமன்ற தேர்தல்: சட்டமன்ற தொகுதி வாரியாக 14 மேஜைகள் அமைத்து வாக்கு எண்ணிக்கை - கலெக்டர் தகவல்

ஆரணி, திருவண்ணாமலை நாடாளுமன்ற தேர்தல்: சட்டமன்ற தொகுதி வாரியாக 14 மேஜைகள் அமைத்து வாக்கு எண்ணிக்கை - கலெக்டர் தகவல்
ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 14 மேஜைகள் அமைத்து வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என நேரில் ஆய்வு செய்த கலெக்டர் தெரிவித்தார்.
திருவண்ணாமலை,

நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் பதிவான வாக்குகள் நாடு முழுவதும் நாளை (வியாழக்கிழமை) எண்ணப்படுகிறது. திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை திருவண்ணாமலை திண்டிவனம் சாலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூட வளாக கட்டிடத்திலும், ஆரணி நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையம் செங்கம் சாலையில் உள்ள சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப்பள்ளியிலும் நடக்கிறது.

இந்த நிலையில் வாக்கு எண்ணும் மையங்களை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி நேற்று அதிகாரிகளுடன் சென்றுஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருவண்ணாமலை மற்றும் ஆரணி நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்களுக்கு எப்படி வாக்கு எண்ணும் பணிகள் நடைபெறவுள்ளது என விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

வாக்கு எண்ணும் நாளான 23-ந் தேதி (அதாவது நாளை) காலை 8 மணி அளவில் வலுவான அறையிலிருந்து வாக்குப் பதிவு எந்திரங்கள் எடுத்துவரப்பட்டு வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளுக்கும் 14 மேஜைகள் அமைக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்படுகிறது. முதல் சுற்று முடிவுகள் ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதி வாக்குகள் எண்ணப்பட்டு சரி பார்த்தவுடன் வெளியிடப்படும். இப்படி ஒவ்வொரு சுற்றுகளாக நாடாளுமன்ற தொகுதி வாரியாக முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த முறை ‘suvi-d-ha’ என்ற செயலி மூலமும் ஒவ்வொரு சுற்றின் முடிவுகள் உடனுக்குடன் வெளியடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதிக்கு 24 சுற்றுகளும் ஆரணி நாடாளுமன்ற தொகுதிக்கு 23 சுற்றுகளும் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

ஒவ்வொரு தொகுதியிலும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதிசெய்யும் வி.வி.பி.ஏ.டி. எந்திரத்தில் பதிவான ஓட்டுகள் சரிபார்க்கப்படும். மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணி முடித்தபின்னரே வி.வி.பி.ஏ.டி. எந்திரத்தில் பதிவான ஓட்டுகள் எண்ணப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு தொகுதிக்கும் 5 வி.வி.பி.ஏ.டி. எந்திரங்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளது.

பின்னர், தபால் வாக்குகள் தனியாக எண்ணப்பட்டு, அதனையும் சேர்த்து இறுதி முடிவுகள் அறிவிக்கப்படும்.

மேலும், வாக்குப் பதிவு மையங்களில் மின்சாரம், குடிநீர், கழிவறை, ஜெனரேட்டர் உட்பட அனைத்து அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. திருவண்ணாமலை மற்றும் ஆரணி நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் பணிகளில் தலா 1,400 வீதம் மொத்தம் 2 ஆயிரத்து 800 ஊழியர்கள் பணிபுரிய உள்ளார்கள். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 2 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் மேற்பார்வையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள பணியாளர்கள் உள்பட வேட்பாளர்கள், முகவர்கள், பத்திரிகையாளர்கள் என அனைவருக்கும் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையத்திற்கு வரும் போது கண்டிப்பாக அடையாள அட்டைகள் கொண்டு வர வேண்டும். திருவண்ணாமலை மற்றும் ஆரணி ஆகிய 2 வாக்கு எண்ணும் மையங்களில் மருத்துவ முகாம், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் ஆகிய வசதிகளும் செய்யப்படுகிறது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் மூலம் வாக்கு எண்ணும் பணிகளை பார்வையிடுவதற்கு ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரு பொதுப் பார்வையாளர் வீதம் மொத்தம் 4 தேர்தல் பொதுப் பார்வையாளர்கள் நியமிக்கபட்டுள்ளார்கள். மேலும், வாக்கு எண்ணும் மையத்தில் 2 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் தலா 200 கண்காணிப்பு கேமரா வீதம் மொத்தம் 400 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறை மூலமாக 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக ஆய்வின் போது கலெக்டர் கந்தசாமி, தி.மு.க. , அ.தி.மு.க. போன்ற அரசியல் கட்சியினருக்கு வாக்கு எண்ணும் நாளன்று செய்யப்பட உள்ள பணிகள் குறித்து எடுத்துக்கூறினார்.