மாவட்ட செய்திகள்

மராட்டியத்தில் பா.ஜனதா-சிவசேனா கூட்டணி 41 தொகுதிகளில் அபார வெற்றி + "||" + BJP - Shiv Sena alliance is victorious in 41 constituencies In Maharashtra

மராட்டியத்தில் பா.ஜனதா-சிவசேனா கூட்டணி 41 தொகுதிகளில் அபார வெற்றி

மராட்டியத்தில் பா.ஜனதா-சிவசேனா கூட்டணி 41 தொகுதிகளில் அபார வெற்றி
மராட்டியத்தில் பா.ஜனதா, சிவசேனா கூட்டணி 41 இடங்களில் அபார வெற்றி பெற்றது. காங்கிரஸ் கூட்டணிக்கு 5 இடங்கள் மட்டுமே கிடைத்தன.
மும்பை,

நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரை 2-வது பெரிய மாநிலம் மராட்டியம். இங்கு உத்தர பிரதேசத்துக்கு (80 தொகுதிகள்) அடுத்தப்படியாக 48 தொகுதிகள் உள்ளன.

கடந்த தேர்தலில் (2014) பா.ஜனதா-சிவசேனா கூட்டணி 42 தொகுதிகளில் அபார வெற்றி கண்டது. காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி 6 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது.

கடந்த தேர்தலை போலவே, இந்த தடவையும் பா.ஜனதா- சிவசேனா ஒரு அணியாகவும், காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் மற்றொரு அணியாகவும் கூட்டணி வைத்து போட்டியிட்டன. தேர்தல் வெற்றி, தோல்வி நிலவரமும் கடந்த தேர்தலுக்கு நெருக்கமாகவே அமைந்து விட்டது.

அதன்படி பா.ஜனதா கூட்டணி 41 தொகுதிகளில் அபார வெற்றி பெற்றது. இதில் பா.ஜனதாவுக்கு 23 இடங்களும், சிவசேனாவுக்கு 18 இடங்களும் கிடைத்து உள்ளன.

காங்கிரஸ் கூட்டணியில் அக்கட்சிக்கு ஒரே ஒரு தொகுதி மட்டுமே கிடைத்தது. சந்திராப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் அக்கட்சி சார்பில் போட்டியிட்ட சுரேஷ் நாராயண் வெற்றி பெற்றார். கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரஸ் 4 தொகுதிகளில் வெற்றி கண்டது.

கடந்த தேர்தலில் காங்கிரஸ் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த நிலையில், இந்த தடவை ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்று அக்கட்சி பின்னடைவை சந்தித்து உள்ளது.

புதிய திருப்பமாக ஐதராபாத் தொகுதி எம்.பி. அசாதுதீன் ஒவைசி தலைமையிலான எம்.ஐ.எம். கட்சி, அவுரங்காபாத் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. அக்கட்சி சார்பில் இம்தியாஸ் ஜலீல் வெற்றி பெற்றுள்ளார்.

அமராவதி நாடாளுமன்ற தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட தென்னிந்திய நடிகை நவ்னித் ரானா வெற்றி பெற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தினார். இவர் தமிழ் படங்களிலும் நடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.