மாவட்ட செய்திகள்

அதிராம்பட்டினத்தில், திடீரென உள்வாங்கிய கடல் பொதுமக்கள் பீதி + "||" + In the Great Depression, suddenly the sea's civilians panicked

அதிராம்பட்டினத்தில், திடீரென உள்வாங்கிய கடல் பொதுமக்கள் பீதி

அதிராம்பட்டினத்தில், திடீரென உள்வாங்கிய கடல் பொதுமக்கள் பீதி
அதிராம்பட்டினத்தில் கடல் திடீரென உள்வாங்கியது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.
அதிராம்பட்டினம்,

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கடல் பகுதியில் கடந்த சில நாட்களாக சூறைக்காற்று வீசியது. கடலில் ராட்சத அலைகள் எழுந்த வண்ணம் இருந்தன. இதன் காரணமாக பெரும்பாலான நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு காற்றின் தாக்கம் குறைந்து, கடல் அமைதியாக காணப்பட்டது.

இதையடுத்து நேற்று காலை மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல தயாராகினர். இதற்காக மீனவர்கள் பலர் மீன்பிடி துறைமுகம் பகுதிக்கு வந்திருந்தனர். அப்போது கடல் சுமார் 200 மீட்டர் தூரத்துக்கு உள்வாங்கி இருந்தது. துறைமுகத்தையொட்டி உள்ள கழிமுகத்திலும் தண்ணீர் இல்லை. அங்கு நிறுத்தப்பட்டிருந்த படகுகள் தரை தட்டி நின்றன. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் வீடு திரும்பினர்.

பொதுமக்கள் பீதி

கடல் திடீரென உள்வாங்கியதால் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது.

இதுகுறித்து மீனவர்கள் கூறியதாவது:-

புயல் உருவாகி இருந்தால் மட்டுமே கடல் உள்வாங்கும். தற்போது அக்னி வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் அதிராம்பட்டினத்தில் கடல் உள்வாங்கி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

கோடை காலத்தில் இதுபோல் கடல் உள்வாங்குவதை பார்த்தது இல்லை. சூறைக்காற்று வீசி வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கடல் அமைதியாக காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று கடல் உள்வாங்கி காணப்பட்டது. கடலில் அடிக்கடி நிகழும் மாற்றம் மீன்பிடி தொழிலை பாதிப்படைய செய்துள்ளது.

இவ்வாறு மீனவர்கள் கூறினர்.