மாவட்ட செய்திகள்

‘இந்து தீவிரவாதி’ என்று சர்ச்சை பேச்சு: கரூர் கோர்ட்டில் ஆஜராகி முன்ஜாமீன் பெற்ற கமல்ஹாசன் + "||" + Kamal Haasan who was present at the Karur Court, was the 'Hindu terrorist'

‘இந்து தீவிரவாதி’ என்று சர்ச்சை பேச்சு: கரூர் கோர்ட்டில் ஆஜராகி முன்ஜாமீன் பெற்ற கமல்ஹாசன்

‘இந்து தீவிரவாதி’ என்று சர்ச்சை பேச்சு: கரூர் கோர்ட்டில் ஆஜராகி முன்ஜாமீன் பெற்ற கமல்ஹாசன்
இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது ‘இந்து தீவிரவாதி’ என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் கரூர் கோர்ட்டில் ஆஜராகி கமல்ஹாசன் முன்ஜாமீன் பெற்றார்.
கரூர்,

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலின் போது, பள்ளப்பட்டி அண்ணாநகர் சந்திப்பில் கடந்த மாதம் 12-ந்தேதி இரவு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, அவர், ‘சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் தான் நாதுராம் கோட்சே’ என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

அவரது பேச்சுக்கு இந்து அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சியினர் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. எனினும் அந்த பேச்சுக்கு அவர் மறுப்பு ஏதும் தெரிவிக்காமல், தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். அதன் பின்னர் கமல்ஹாசன் பங்கேற்ற வேலாயுதம்பாளையம் பிரசார பொதுக்கூட்டத்தில் செருப்பு வீசப்பட்டு பெரும் தகராறு ஏற்பட்டது. அதில் செருப்பு வீசிய நபரை போலீசார் கைது செய்தனர்.

இதற்கிடையே கமல்ஹாசனின் சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து அரவக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் புகார் அளித்தார். அதில், இந்துக்களை தீவிரவாதி என்று கமல்ஹாசன் சித்தரித்து பேசியது இந்து மதத்தினரிடையே மனவேதனை ஏற்படுத்தியுள்ளது. இந்துவுக்கும், மற்ற மதத்தினரிடையேயும் விரோதத்தை ஏற்படுத்தும் வகையில் அவரது பேச்சு இருந்தது. எனவே அவர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் கூறியிருந்தார்.

அதன் பேரில், இந்திய தண்டனை சட்டம் பிரிவு 295 (ஏ) (இந்துக்களை இழிவு படுத்துதல்), இந்திய தண்டனை சட்டம் பிரிவு 153 (ஏ) (பொது இடத்தில் மத கலவரத்தை தூண்டுவது போல் பேசுதல்) என்று 2 பிரிவுகளின் கீழ் கமல்ஹாசன் மீது கடந்த மாதம் 14-ந்தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் கமல்ஹாசன் மனுதாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி, கரூர் 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் 15 நாட்களுக்குள் ஆஜராகி முன்ஜாமீன் பெற கமல்ஹாசனுக்கு உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து கரூர் 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜராகி முன்ஜாமீன் வாங்குவதற்காக நேற்று மதியம் 2.40 மணியளவில் கரூர் கோர்ட்டுக்கு கமல்ஹாசன் வந்தார். பின்னர் பின்பக்க வாசல் வழியாக சென்று, 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு விஜய்கார்த்திக் முன்பு ஆஜர் ஆனார்.

அவரிடம் விசாரணை நடத்திய பின்னர், அவருக்கு மாஜிஸ்திரேட்டு முன்ஜாமீன் வழங்கினார். இதைதொடர்ந்து 3 மணிக்கு அவர் கோர்ட்டில் இருந்து வெளியே வந்தார். அங்கு நிருபர்கள் அவரை சூழ்ந்து கொண்டு பேட்டி கேட்டனர். ஆனால் அவர் பேட்டி கொடுக்காமல் அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார்.

கரூரில் ஓட்டலில் தங்கியிருந்த கமல்ஹாசன் நிருபர்களுக்கு கமல்ஹாசன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மதுரை ஐகோர்ட்டு வழிகாட்டுதலின்படி இன்று (நேற்று) கரூர் கோர்ட்டு எனக்கு முன்ஜாமீன் வழங்கியுள்ளது. கருத்துரிமை அடிப்படையில் தான் பேசினேன். ஆனால் ஊடகங்கள் தலையையும், வாலையும் வெட்டி விட்டு பரப்பி விட்டார்கள். ஹேராம் படத்தில் கூறிய கருத்தின் வெளிப்பாடுதான் நான் கூறிய கருத்து. இது குறித்து ஏற்கனவே மெரினாவில் பேசியிருக்கிறேன். இதில் பள்ளப்பட்டியில் பேசியதற்கு நிர்பந்தம் எதுவும் இல்லை.

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது குறித்து பேசி கொண்டிருக்கிறோம். மக்களுக்கு சேவை செய்வதற்கு என்னென்ன பங்களிப்பு இருக்கிறதோ அதனை செய்ய முனைப்புடன் செயல்படுவோம். மக்களவை தேர்தலில் மக்கள் அளித்த ஆதரவு பேராதரவு என்பதை விட கூடுதல் நம்பிக்கையாகவே இருக்கிறது. கெயில், ஹைட்ரோ கார்பன் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் மக்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அரசியல்வாதிகள் பார்த்து கொள்வார்கள் என இருக்கக்கூடாது. மக்கள் குரல் எழுப்ப வேண்டும். மத்தியஅரசு தமிழகத்தை புறக்கணிக்கிறது என்ற கருத்து கடந்த அரை நூற்றாண்டாகவே இருந்து வருகிறது.

இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.