மாவட்ட செய்திகள்

ஊட்டியில் மூடப்பட்ட டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்கக்கூடாது, பொதுமக்கள் கலெக்டரிடம் மனு + "||" + In Ooty Do not open the closed tasmack shop, The public Petition to the collector

ஊட்டியில் மூடப்பட்ட டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்கக்கூடாது, பொதுமக்கள் கலெக்டரிடம் மனு

ஊட்டியில் மூடப்பட்ட டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்கக்கூடாது, பொதுமக்கள் கலெக்டரிடம் மனு
ஊட்டியில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் மூடப்பட்ட டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்கக்கூடாது என்று பொதுமக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
ஊட்டி,

ஊட்டியில் உள்ள நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கினார். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கை மற்றும் குறைகளை மனுக்களாக அளித்தனர். அதன்படி பந்தலூர் அருகே கொத்தலகுண்டு, திருவம்பாடி, மூப்புகுன்னு பொதுமக்கள் மூடப்பட்ட டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ள தாவது:-

பந்தலூர் தாலுகா எருமாடு அருகே கொத்தலகுண்டு பகுதியில் ஆதிவாசி மக்கள் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் கடந்த 2014-ம் ஆண்டு தமிழக அரசின் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதனால் மாணவ-மாணவிகள், ஆதிவாசி மக்கள், பெண்கள், குழந்தைகள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளானார்கள். டாஸ்மாக் கடை அமைந்திருக்கும் பகுதி கேரள மாநில எல்லை, அதனை சுற்றி தோட்டங்கள், வயல்வெளிகள், ஆற்றோரத்தில் புதர்கள் நிறைந்து இருப்பதாலும், கேரள மாநிலத்தில் இருந்து வந்து செல்ல குறுக்கு பாதைகள் இருப்பதாலும், சுற்றுப்புற பகுதிகளில் இருந்து மது அருந்த வரும் நபர்களால் சமூக விரோத செயல்கள், பொதுமக்களுக்கு இடையூறுகள் ஏற்பட்டு வந்தன.

இதனால் கோவில் மற்றும் ஆலயங்களுக்கு வந்து செல்பவர்கள் அவதி அடைந்தனர். அப்பகுதியில் இருந்து சுமார் 1½ கிலோ மீட்டர் தூரத்தில் தாளூரில் டாஸ்மாக் கடை இயங்கி வரும் நிலையில், கொத்தலகுண்டுவில் மதுக்கடை அவசியம் இல்லை. இதற்கிடையே கடந்த மாதம் கொத்தலகுண்டு பகுதியில் இயங்கி வந்த டாஸ்மாக் கடை அனுமதி இல்லாத கட்டிடத்தில் இயங்கியதாக மூடப்பட்டது. அதன் காரணமாக அப்பகுதியில் பொதுமக்கள் அனைவரும் நிம்மதி அடைந்தனர்.

இந்த நிலையில் மூடப்பட்ட டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிகிறது. எனவே, மீண்டும் மதுக்கடையை திறக்கக்கூடாது, திறக்கப்பட்டால் பெண்கள், ஆதிவாசி மக்கள் ஒன்றிணைந்து தொடர் போராட்டம் நடத்த நேரிடும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. கூடலூர் அருகே கோத்தர்வயல் பனியர் காலனியை சேர்ந்த ஆதிவாசி மக்கள் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடு கட்ட தொகை பெற்று தரக்கோரி மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பனியர் காலனியில் பனியர் இன மக்கள் 80-க்கும் மேற்பட்டோர் வாழ்ந்து வருகின்றனர். அங்கு 12 வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அதனை தொடர்ந்து முதல் கட்டமாக தொகை பெற்று வீடு கட்டப்பட்டு வருகிறது. 2-வது கட்டமாக குடிசை மாற்று வாரியத்தின் மூலம் பழங்குடியினர் வீடு கட்டுவதற்கான தொகை கடந்த 4 மாதங்களாகியும் இதுவரை வழங்கப்பட வில்லை. தற்போது மண் குடிசை வீடுகளில் வசித்து வருகிறோம். மழை பெய்தால் உள்ளே தண்ணீர் ஒழுகுவதால், வீடு முழுவதும் நனைந்து விடுகிறது. ஆகவே, வீடு கட்டும் பணிக்கான தொகையை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் அப்பகுதியில் உள்ள வீட்டின் மேற்கூரையில் மின்சார கம்பிகள் உரசியபடி செல்கின்றன. இதனால் எதிர்பாராத நேரத்தில் விபரீதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, மின்சார கம்பி இணைப்பை மாற்றி தர வேண்டும். கடந்த பல ஆண்டுகளாக நாங்கள் பயன்படுத்தி வரும் நடைபாதை மிகவும் மோசமாக காணப்படுகிறது.

இதனால் யாரேனும் இறந்து விட்டால் உடலை எடுத்து செல்ல சிரமமாக உள்ளது. ஆகவே, மயானத்துக்கு செல்லும் நடைபாதையை சீரமைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

மஞ்சூர் அருகே எமரால்டு தக்கர் பாபா நகர் மற்றும் இந்திரா நகரை சேர்ந்த இளைஞர்கள் கொடுத்த மனுவில், இப்பகுதியில் 150 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இளைஞர்கள் 90 பேர் உள்ளோம். அப்பகுதியில் ஆதிதிராவிடர் நல நடுநிலைப்பள்ளி, மற்றும் அங்கன்வாடி மையம் உள்ளது. அங்கு விளையாட்டு மைதானம் இல்லை. இதனால் பள்ளி மாணவர்கள், குழந்தைகள், இளைஞர்கள் விளையாட மைதானம் இல்லாமல் அவதி அடைந்து வருகின்றனர். எனவே, விளையாட்டு மைதானம் அமைத்து தர வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

குன்னூர் அருகே கொலக்கொம்பையை சேர்ந்த மாற்றுத்திறனாளி கார்தியானி அளித்த மனுவில், நான் கொலக்கொம்பையில் கடந்த 65 ஆண்டுகளாக வசித்து வருகிறேன். எனக்கு கழிப்பிட வசதி செய்து தரக்கோரி பல முறை மனு அளித்து உள்ளேன். கழிப்பிட வசதி செய்து தருவதாக கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால், இதுவரை மாற்றுத்திறனாளியான எனக்கு கழிப்பிட வசதி செய்து தரவில்லை. அப்பகுதியில் வனவிலங்குகளின் நடமாட்டம் உள்ளதால், கழிப்பிடம் கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

ஆசிரியரின் தேர்வுகள்...