மாவட்ட செய்திகள்

குன்னம் அருகே குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு வீணாகும் குடிநீர் + "||" + Drinking water is a waste that breaks into drinking water pipes near Kunnam

குன்னம் அருகே குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு வீணாகும் குடிநீர்

குன்னம் அருகே குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு வீணாகும் குடிநீர்
குன்னம் அருகே குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது.
குன்னம்,

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் பகுதி குடியிருப்புகளுக்கு கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டம் செயல் படுத்தப்பட்டு குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. குன்னம் அருகே உள்ள வேப்பூர், ஆலத்தூர் ஒன்றியங்களில் உள்ள மக்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்து வருகின்றனர். கொள்ளிடம் திருமலப்பாடியில் இருந்து நீர் உறிஞ்சும் நிலையம் மூலம் வேப்பூர் ஒன்றியத்தில் உள்ள நீரேற்றும் நிலையங்களுக்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டு ஒவ்வொரு பஞ்சாயத்துகளுக்கும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் வினியோகிக்கப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் ஆலத்தூர் ஒன்றியத்தில் மேலமத்தூர், வேப்பூர் ஒன்றியம் குன்னம், லட்சுமிபுரம், எழுமூர், முருக்கன்குடி, புதுவேட்டகுடி, வேப்பூர், நன்னை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நீரேற்றும் நிலையங்களில் இருந்து தண்ணீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பெரம்பலூர்- அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் தங்கநகர் பகுதியிலும், புதுவேட்டைக்குடி கிராமத்தில் இருந்து வேப்பூர் கிராமத்திற்கு செல்லும் சாலையிலும், எழுமூர் மற்றும் முருக்கன்குடி கிராமத்திற்கு செல்லும் குடிநீர் குழாய்களிலும், மேலமாத்தூர் இருந்து வரிசைப்பட்டிக்கு செல்லும் குடிநீர் குழாய்களிலும், எழுமூர்- ஓதியம் கிராமத்திற்கு செல்லும் குடிநீர் குழாய்களிலும் மற்றும் அசூர் கிராமத்திற்கு செல்லும் குடிநீர் குழாய்களிலும் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது.

அங்கிருந்து வெளியேறும் தண்ணீரைக் கொண்டு பல ஊர்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யலாம். அந்த அளவிற்கு தண்ணீர் வெளியேறிய வண்ணம் உள்ளது. இரவு பகலாக பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகி வருகிறது. எனவே உடனடியாக நடவடிக்கை எடுத்து உடைப்பு ஏற்பட்ட குடிநீர் குழாயை சரிசெய்ய வேண்டும். இந்த குடிநீர் குழாய்களில் கடந்த 3 மாதத்திற்கு முன்பு உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வீணாகி வருகிறது. இது குறித்து பலமுறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை சரி செய்யப்படவில்லை. குடிநீர் பற்றாக்குறை உள்ள நிலையில் மாதக்கணக்கில் குடிநீர் வீணாவதை தடுக்க அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் சில இடங்களில் தானாக உடைப்பு ஏற்பட்டாலும், பல இடங்களில் கிராம மக்கள் சிலர் தங்களது ஆடு, மாடுகளுக்கு குடிநீர் தேவை என்பதால் குடிநீர் குழாயை உடைத்து விடுகின்றனர். இதையடுத்து அங்கு தேங்கும் குடிநீரில் சிலர் அசுத்தம் செய்கின்றனர். இதனால் அசுத்தமாகும் குடிநீர், குழாய் வழியாக மீண்டும் உட்புகுந்து தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே தற்போது கோடை கால வறட்சியில் குடிநீர் சிக்கனம், சுகாதாரம் காக்க வேண்டிய இத்தருணத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டியது அவசியம் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். கூட்டுக் குடிநீர்த் திட்ட குழாய்களை பணியாளர்கள் பராமரித்து வந்தாலும் கிராம மக்கள் சுய நலத்துடன் செயல்படாமல் பொது நலத்துடன் செயல்பட வேண்டும். இதை மாவட்ட நிர்வாகம் தீவிரமாக கண்காணித்து பராமரிக்க வேண்டும் என குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.