மாவட்ட செய்திகள்

திருப்பூரில் பெண் குத்திக்கொலை: கைதான ஓட்டல் தொழிலாளி போலீசில் பரபரப்பு வாக்குமூலம் + "||" + Woman stabbed to death in Tirupur: Soldier confesses to police for arresting hotel worker

திருப்பூரில் பெண் குத்திக்கொலை: கைதான ஓட்டல் தொழிலாளி போலீசில் பரபரப்பு வாக்குமூலம்

திருப்பூரில் பெண் குத்திக்கொலை: கைதான ஓட்டல் தொழிலாளி போலீசில் பரபரப்பு வாக்குமூலம்
திருப்பூரில் பெண் குத்திக்கொலை செய்யப்பட்டார். அவர் பலருடன் பழகியதை கைவிட மறுத்ததால் தீர்த்துக்கட்டியதாக ஓட்டல் தொழிலாளி போலீசில் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
திருப்பூர்,

திருப்பூரில் பெண் குத்திக்கொல்லப்பட்ட சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திருப்பூர் பெரியகடை வீதியை சேர்ந்தவர் பல்கீஸ் பேகம்(வயது 31). இவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்து மகன், மகள் உள்ளனர். கணவரை விட்டு பிரிந்து வந்த இவர் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவருடைய மகன், மகள் மேட்டுப்பாளையத்தில் உள்ள அவருடைய பாட்டி வீட்டில் வசித்து வருகிறார்கள். அப்பகுதியில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் பல்கீஸ் பேகம் வேலை செய்து வந்தார். இந்தநிலையில் கடந்த மாதம் 30-ந் தேதி காலை வீட்டில் இருந்த பல்கீஸ் பேகம் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு கிடந்தார். சம்பவம் பற்றி அறிந்ததும் திருப்பூர் தெற்கு போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.

முதல்கட்ட விசாரணையில் பல்கீஸ் பேகத்துடன், திருப்பூர் கோம்பைதோட்டத்தை முகமது அபுதாகீர் சேட்(43) பழகி வந்ததும், அடிக்கடி அவர் வீட்டுக்கு வந்து சென்றதும், சம்பவத்தன்று காலை பல்கீஸ் பேகத்தின் வீட்டுக்கு வந்த முகமது அபுதாகீர் சேட் அவருடன் சண்டை போட்டுள்ளதும் தெரியவந்தது.

திடீரென்று பல்கீஸ் பேகத்தின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிச்சென்று பார்த்தபோது முகமது அபுதாகீர் சேட் ரத்தக்கறை படிந்த கத்தியுடன் வீட்டுக்குள் இருந்து வெளியே ஓடியுள்ளார். வீட்டுக்குள் பல்கீஸ் பேகம் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

இந்தநிலையில் இந்த கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முகமது அபுதாகீர் சேட்டை திருப்பூர் தெற்கு போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார்கள். அவர் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறும்போது, முகமது அபுதாகீர் சேட் திருப்பூர் காங்கேயம் ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். ஏற்கனவே திருமணம் ஆனவர். முகமது அபுதாகீர் சேட்டுக்கும், பல்கீஸ் பேகத்துக்கும் கடந்த 2 ஆண்டுகளாக பழக்கம் ஏற்பட்டு அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்றுள்ளார்.

இந்தநிலையில் பல்கீஸ் பேகம் செல்போனில் வேறு ஆண்களுடன் பேசியும், பழகியும் வந்துள்ளார். இது முகமது அபுதாகீர் சேட்டுக்கு பிடிக்கவில்லை. இதை கண்டித்துள்ளார். ஆனால் பல்கீஸ் பேகம், வேறு ஆண்களுடன் பேசுவதை, பழகுவதை தன்னால் கைவிட முடியாது என்று மறுத்துள்ளார். இதனால் பல்கீஸ் பேகத்தை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார். சம்பவத்தன்று காலையில் வீட்டில் வைத்து இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது முகமது அபுதாகீர் சேட் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பல்கீஸ் பேகத்தை குத்திக் கொலை செய்து விட்டு தப்பியதாக தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து முகமது அபுதாகீர் சேட்டை திருப்பூர் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரகா‌‌ஷ் மற்றும் போலீசார் நேற்று கைது செய்தனர்.