மாவட்ட செய்திகள்

கோர்ட்டை அவமதித்ததாக சிறையில் அடைப்பு: நின்று போன திருமணம் குறித்து இருவீட்டாரும் கலந்து பேசி முடிவு - ஜாமீனில் விடுதலையான மதுரை வக்கீல் நந்தினி பேட்டி + "||" + Jailed for contempt of court: Regarding a stopped marriage Both Houses Talk and decision - Madurai lawyer Nandini released on bail

கோர்ட்டை அவமதித்ததாக சிறையில் அடைப்பு: நின்று போன திருமணம் குறித்து இருவீட்டாரும் கலந்து பேசி முடிவு - ஜாமீனில் விடுதலையான மதுரை வக்கீல் நந்தினி பேட்டி

கோர்ட்டை அவமதித்ததாக சிறையில் அடைப்பு: நின்று போன திருமணம் குறித்து இருவீட்டாரும் கலந்து பேசி முடிவு - ஜாமீனில் விடுதலையான மதுரை வக்கீல் நந்தினி பேட்டி
சிறையில் அடைக்கப்பட்டால் மதுரை வக்கீல் நந்தினியின் திருமணம் நின்று போனது. இந்தநிலையில் திருமணம் குறித்து இரு வீட்டாரும் கலந்து பேசி முடிவு செய்வார்கள் என்று ஜாமீனில் விடுதலையான வக்கீல் நந்தினி கூறினார்.

மதுரை,

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் கடந்த 2014–ம் ஆண்டு டாஸ்மாக் கடைகளுக்கு எதிராகவும், மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்தும் மதுரையை சேர்ந்த வக்கீல் நந்தினி, தனது தந்தை ஆனந்தனுடன் சென்று பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கினார். தொடர்ந்து அவர் திருப்பத்தூரில் பிரசாரம் செய்த போது, அதற்கு அனுமதி வாங்கவில்லை என்றும், போக்குவரத்திற்கு இடையூறு செய்ததாகவும் திருப்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை கடந்த மாதம் 27–ந்தேதி திருப்பத்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் ஆஜராக வந்த நந்தினி மற்றும் அவரது தந்தை ஆனந்தன் நீதிமன்றத்தை அவமதிப்பு செய்ததாக கூறி அவர்கள் 2 பேரையும் ஜூலை 9–ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையில் நந்தினிக்கு கடந்த 5–ந் தேதி திருமணம் நடக்க இருந்தது. அப்போது அவரும், அவரது தந்தையும் சிறையிலிருந்ததால் திருமணம் நின்று போனது. இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை நேற்று காலை திருப்பத்தூர் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்காக வந்தது.

தந்தையும் மகளும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது இருவருக்கும் நீதிபதி சாமுண்டீஸ்வரிபிரபா அறிவுரை வழங்கி சொந்த ஜாமீனில் விடுதலை செய்தார். அதைத் தொடர்ந்து மதுரை மத்திய சிறையில் இருந்து நந்தினி மற்றும் அவரது தந்தை ஆனந்தன் ஆகியோர் நேற்று மாலை விடுதலை செய்யப்பட்டனர்.

சிறையில் இருந்து வெளியே வந்த வக்கீல் நந்தினி நிருபர்களிடம் கூறியதாவது:–

மதுவுக்கு எதிராக போராடும் என்னை அரசு சிறையில் அடைத்து மிரட்டி பார்க்கலாம் என நினைக்கிறது. எத்தனை தடை வந்தாலும் போராட்டம் தொடரும். படிப்படியாக மதுவிலக்கு என்பது அரசின் ஏமாற்று வேலை. நின்று போன எனது திருமணம் குறித்து இரு வீட்டாரும் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்போம்.

இவ்வாறு கூறினார்.