மாவட்ட செய்திகள்

தமிழ் பண்பாடு, கலாசாரத்தை அழிப்பதற்கு சதி நடக்கிறது தஞ்சையில், எச்.ராஜா பேட்டி + "||" + To destroy Tamil culture and culture Interview with H. Raja

தமிழ் பண்பாடு, கலாசாரத்தை அழிப்பதற்கு சதி நடக்கிறது தஞ்சையில், எச்.ராஜா பேட்டி

தமிழ் பண்பாடு, கலாசாரத்தை அழிப்பதற்கு சதி நடக்கிறது தஞ்சையில், எச்.ராஜா பேட்டி
தமிழ் பண்பாடு, கலாசாரத்தை அழிப்பதற்கு சதி நடக்கிறது என்று பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா கூறினார்.
தஞ்சாவூர்,

இந்து தர்மத்தையும், தமிழர் கலாசாரத்தையும் இழிவுபடுத்தி பேசி வருபவர்களை கண்டித்து மாமன்னன் ராஜராஜ சோழன் எழுச்சி பேரவை சார்பில் தஞ்சையில் பொதுக்கூட்டம் நேற்று நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு போலீசார் அனுமதி மறுத்து விட்டனர். இதனையடுத்து தஞ்சை பெரிய கோவில் அருகில் உள்ள ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து அங்கேயே பாராட்டு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தில் பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், மாவட்ட தலைவர் பண்ணைவயல் இளங்கோ, மாநில செயற்குழு உறுப்பினர் ராமலிங்கம், மாவட்ட செயலாளர் ஜெய்சதீஷ், பொதுச்செயலாளர் உமாபதி, நகர தலைவர் விநாயகம், சிவசேனா மாநில துணைத்தலைவர் புலவஞ்சி போஸ், இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி செயலாளர் கார்த்திக்ராவ் போன்ஸ்லே, இந்து இளைஞர் எழுச்சிப்பேரவை தலைவர் சந்தோஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக எச்.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ் பாரம்பரியம், பண்பாடு, கலாசாரத்தை அழிப்பதற்கு தமிழ்நாட்டில் பெரிய சதி நடக்கிறது. காவிரி நீர் மேலாண்மை, நில சீர்த்திருத்தம் உள்ளிட்டவற்றை மாமன்னன் ராஜராஜ சோழன்தான் கொண்டு வந்தார். உலகிலேயே முதல் கப்பற்படையை அமைத்தவர் ராஜேந்திர சோழன்.

அதனால்தான் ராஜேந்திர சோழனுக்கு மோடி அரசு, தபால்தலை வெளியிட்டுள்ளது. நம் கப்பற்படையின் ஒரு கப்பலுக்கு ராஜேந்திர சோழன் பெயர் வைத்துள்ளோம். இந்த நிலையில், ராஜராஜ சோழன் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் டைரக்கர் ரஞ்சித் சதித்திட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்துக்களை பயமுறுத்தி மதமாற்றம் செய்ய முயற்சி நடக்கிறது. அதற்கு வருவாய்த்துறை, போலீசார் உடந்தையாக செயல்படுகிறார்கள். தஞ்சை நிர்மலா நகரில் பொது இடத்தில் கோவில் கட்டுவதை தடுக்கிறார்கள். அதேபோல் அங்கு பொது இடத்தில் சந்தை, கோவில் கட்ட போராட்டம் நடத்த வேண்டி உள்ளது.

மன்னர்கள் காலத்தில் சலவை தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட வீடு போலீசார் முன்னிலையில் இடிக்கப்படுகிறது. இதை கண்டிக்கிறேன். தஞ்சை சோழன் சிலை பூங்காவில் ஆழ்துளை கிணறு அமைப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும்.

மீத்தேன், ஹைட்ரோ கார்பன் எடுப்பதால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. அய்யாக்கண்ணு, வைகோ போன்ற சிலர்தான் வேண்டுமென்றே பீதியை ஏற்படுத்தி மக்களை தூண்டி விடுகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.