மாவட்ட செய்திகள்

தாராபுரம் நகைக்கடையில் கவரிங்கை கொடுத்து நகை வாங்க முயன்ற 2 பெண்கள் கைது + "||" + At the Tarapuram jewelery shop Trying to buy jewelry by giving the Covering 2 women arrested

தாராபுரம் நகைக்கடையில் கவரிங்கை கொடுத்து நகை வாங்க முயன்ற 2 பெண்கள் கைது

தாராபுரம் நகைக்கடையில் கவரிங்கை கொடுத்து நகை வாங்க முயன்ற 2 பெண்கள் கைது
தாராபுரம் நகைக்கடையில் கவரிங் நகையை கொடுத்து தங்க நகையை வாங்க முயன்ற 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
தாராபுரம்,

தாராபுரம் சீதா நகரை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் பொள்ளாச்சி ரோட்டில் நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய நகை கடைக்கு நேற்று மதியம் 2 பெண்கள் பர்தா அணிந்து வந்துள்ளனர். அதில் ஒரு பெண் 6 மாத குழந்தையை வைத்திருந்தார். அப்போது நகைக்கடையில் இருந்த உரிமையாளர் கிருஷ்ணனிடம் பழைய தங்க நகையை கொடுத்து, இதற்குப் பதிலாக புதிய தங்க நகை வாங்கிக் கொள்வதாக கூறியுள்ளனர்.

அந்த நகையை வாங்கி, கிருஷ்ணன் பரிசோதனை செய்து பார்த்துள்ளார். அது சுத்தமான தங்கத்தால் செய்யப்பட்டிருந்தது. அந்த நகையை எடைபோட்டு பார்த்தபோது, அது 3 பவுன் இருந்துள்ளது. அதையடுத்து கடையில் இருந்தவர்கள் அந்த பெண்களிடம் பலவிதமான டிசைன் நகைகளை காண்பித்துள்ளனர். பல்வேறு டிசைன்களை பார்த்த பின்னர் தங்களுக்கு பிடித்த நகையை தேர்வு செய்தனர். பின்னர் அந்த புதிய நகையை கிருஷ்ணன் எடைபோட்டு பார்த்துள்ளார்.

அதை தொடர்ந்து ரசீது போடுவதற்காக பெண்கள் கொடுத்த பழைய நகையை மீண்டும் ஒருமுறை கிருஷ்ணன் எடைபோட்டுள்ளார். அப்போது முதலில் எடை போட்ட பழைய நகையை விட இப்போது எடை போட்டுள்ள நகையின் நிறம் மங்கலாக இருந்தது. இது கடை உரிமையாளருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த நகையை உரசி பார்த்தபோது அது கவரிங் நகை என தெரியவந்தது.

இதற்கிடையில் அந்த 2 பெண்களும் புதிய நகையை வாங்காமல் அவசரமாக கடையை விட்டு வெளியே சென்றனர். அதைப்பார்த்த கிருஷ்ணன் ஓடிச்சென்று முதலில் குழந்தையுடன் சென்ற பெண்ணை பிடித்து கடையில் உட்கார வைத்தார். ஒரு பெண் சிக்கிக்கொண்டதை பார்த்த மற்றோரு பெண், பொள்ளாச்சி ரோட்டில் வேகமாக ஓடினார். உடனே அருகில் இருந்தவர்கள் உதவியோடு துரத்திச் சென்று அந்த பெண்ணையும் பிடித்து நகைக்கடையில் உட்கார வைத்து தாராபுரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அதையடுத்து போலீசார் விரைந்து சென்று அந்த பெண்களிடம் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் குழந்தையை வைத்திருந்த பெண் சேலம் அருகே உள்ள தாதக்கப்பட்டி என்.ஜி.ஓ காலனியை சேர்ந்த கார்த்திகேயனின் மனைவி தனா என்கிற தனலட்சுமி (வயது 23) என்றும், மற்றொரு பெண் அதே பகுதியை சேர்ந்த கோவிந்தன் என்பவரது மனைவி ராதா (34) என்றும் தெரியவந்தது.

இவர்கள் நகைக்கடையில் புதிய நகை வாங்குவது போல் நடித்து முதலில் அசல் பழைய நகையை கொடுப்பதும், அதன்பின்னர் புதிய நகையை ஒரு பெண் தேர்வு செய்யும்போதே மற்றொரு பெண், கடைக்காரருக்குத் தெரியாமல், தான் மறைத்து வைத்திருந்த அதே எடை மற்றும் டிசைன் உள்ள கவரிங் நகையை எடுத்து மேலே வைத்துவிட்டு, கடைக்காரரிடம் கொடுத்த பழைய தங்க நகையை லாவகமாக எடுத்து மறைத்து வைத்துக் கொள்வதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். பட்டப்பகலில் நகைக்கடையில் மோசடி செய்ய வந்த பெண்கள், நகைக்கடைக்காரரிடம் மாட்டிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.