மாவட்ட செய்திகள்

கர்நாடக மந்திரி சபை அவசர கூட்டம்கூட்டணி ஆட்சியை காப்பாற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ள முடிவு + "||" + To save the coalition regime Decision to make all efforts

கர்நாடக மந்திரி சபை அவசர கூட்டம்கூட்டணி ஆட்சியை காப்பாற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ள முடிவு

கர்நாடக மந்திரி சபை அவசர கூட்டம்கூட்டணி ஆட்சியை காப்பாற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ள முடிவு
பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில் கர்நாடக மந்திரி சபையின் அவசர கூட்டம் நேற்று நடந்தது. இதில் கூட்டணி ஆட்சியை காப்பாற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ள முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு, 

பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில் கர்நாடக மந்திரி சபையின் அவசர கூட்டம் நேற்று நடந்தது. இதில் கூட்டணி ஆட்சியை காப்பாற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ள முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சட்ட மசோதா

கர்நாடகத்தில் ஆளும் கூட்டணியான காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கட்சிகளை சேர்ந்த 16 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ளனர். இதனால் கூட்டணி அரசுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் பெங்களூரு விதானசவுதாவில் தொடங்குகிறது.

இந்த நிலையில் கர்நாடக மந்திரிசபையின் அவசர கூட்டம் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. இதில் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் உள்பட மந்திரிகள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த கூட்டம் முடிந்த பிறகு கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை மந்திரி கிருஷ்ண பைரேகவுடா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பெங்களூரு மாநகராட்சியை பிரிக்க முடிவு எடுக்கப்பட்டது. இதற்கான சட்ட மசோதா மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அந்த மசோதாவை வாபஸ் பெறுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு மாநகராட்சியை பிரிக்காமல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மாற்று வழிகளை கண்டறிய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆட்சியை காப்பாற்ற அனைத்து முயற்சி

ஜிந்தால் நிறுவனத்திற்கு நிலம் விற்பனை செய்யும் முடிவை மறுபரிசீலனை செய்ய மந்திரிசபை துணை குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு பரிசீலித்து அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யும். அதுவரை இந்த விஷயத்தில் எந்த முடிவும் எடுக்க மாட்டோம். எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா குறித்தும், ஆட்சியை பாதுகாப்பது குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.

கூட்டணி அரசை கவிழ்க்க பா.ஜனதா 6-வது முறையாக முயற்சி மேற்கொண்டுள்ளது. இது ஆட்சி கவிழ்ப்பு முயற்சி என்று சொல்வதை விட ஆட்சி மீது நடைபெறும் தாக்குதல் ஆகும். பா.ஜனதா இந்த தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது. ஆட்சியை காப்பாற்ற தைரியமாக அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வது என்று மந்திரிசபை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

வாக்கெடுப்பு நடத்த தயார்

இந்த கூட்டணி அரசு அதிக ஆபத்தில் உள்ளது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் ராஜினாமா செய்துள்ள எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்த நாங்கள் முடிவு செய்துள்ளோம். இந்த அரசுக்கு பெரும்பான்மை பலம் இல்லை என்று பா.ஜனதா சொல்கிறது. அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு கவர்னர் பிறப்பிக்கும் உத்தரவுகளை எங்கள் அரசு பின்பற்றும்.

கர்நாடக சட்டசபை கூட்டம் நாளை (அதாவது இன்று) தொடங்குகிறது. இந்த கூட்டத்தில் எந்த பிரச்சினை குறித்தும் விவாதிக்க நாங்கள் தயாராக உள்ளோம். நிதி மசோதாவை நிறைவேற்ற வேண்டியுள்ளது. இதுகுறித்து விவாதிக்க வேண்டும். தேவைப்பட்டால் வாக்கெடுப்பு நடத்தவும் நாங்கள் தயாராக உள்ளோம். இதுகுறித்து பா.ஜனதா வலியுறுத்தினால் நாங்கள் அதை ஏற்போம். வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்த எதிர்க்கட்சிக்கு உரிமை உள்ளது.

நிதி மசோதா நிறைவேறுமா?

அந்த உரிமையை வழங்க நாங்கள் மறுக்கமாட்டோம். நிதி மசோதா நிறைவேறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். பெரும்பான்மை பலத்தை நிரூபிப்போம் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு கிருஷ்ண பைரேகவுடா கூறினார்.