மாவட்ட செய்திகள்

காவிரியில் தண்ணீர் திறந்து விடக்கோரி, ஆற்றுக்குள் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் + "||" + On the Cauvery Vitakkori open water, Farmers down the river Demonstration

காவிரியில் தண்ணீர் திறந்து விடக்கோரி, ஆற்றுக்குள் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

காவிரியில் தண்ணீர் திறந்து விடக்கோரி, ஆற்றுக்குள் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
காவிரியில் தண்ணீர் திறந்து விடக்கோரி திருவாரூர் மாவட்டத்தில் ஆற்றுக்குள் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர், 

நடப்பு ஆண்டு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசிடமிருந்து பெற்று தர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரமில்லாத காவிரி ஆணையம், மத்திய அரசு தமிழகத்தை அலட்சியப்படுத்தி வஞ்சித்து வருகிறது. இதனால் 8 ஆண்டாக குறுவை சாகுபடியை இழந்துள்ளோம். இதனால் வருமானத்தை இழந்துள்ள விவசாயிகள், விவசாய தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். குடிமராமத்து பணிகளில் மோசடி கண்டறிய வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆற்றுக்குள் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்துவதாக விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்து இருந்தனர்.

அதன்படி நேற்று திருவாரூர் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள ஓடம்போக்கி ஆற்றுக்குள் இறங்கி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் மாசிலாமணி தலைமை தாங்கினார். இதில் மாவட்டக்குழு உறுப்பினர் செல்வமணி, நகர செயலாளர் மாரியப்பன், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட தலைவர் குணசேகரன், நகர செயற்குழு உறுப்பினர் தர்மதாஸ், பாசன சங்க தலைவர் தங்கையன், நிர்வாகி நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

காவிரியில் தண்ணீர் திறந்து விடக்கோரி மன்னார்குடி கீழப்பாலம் பாமணி ஆற்றுக்குள் இறங்கி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் செல்வராஜ் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் வீரமணி, மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் மாலாபாண்டியன், ஒன்றிய தலைவர் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் சதாசிவம், ஒன்றிய பொருளாளர் திரவியம், அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற ஒன்றிய செயலாளர் பாப்பையன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மன்னார்குடி நகர கிளை சார்பில் காவிரியில் தண்ணீர் திறந்து விடக்கோரி மன்னார்குடி புதுப்பாலம் அருகே பாமணி ஆற்றுக்குள் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க நிர்வாகி ராஜேந்திரன் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நகர செயலாளர் கலைச்செல்வன் கலந்து கொண்டு பேசினார். இதில் மாவட்டக்குழு உறுப்பினர் ரத்தினகுமார், நகர துணை செயலாளர் தனிக்கொடி, நகர செயலாளர் கலியபெருமாள், நகர தலைவர் ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் திருத்துறைப்பூண்டி முள்ளியாற்றில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ. உலகநாதன் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் பாஸ்கர், நகர செயலாளர் முருகேசன், விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் ஜெயபால், ஒன்றிய தலைவர் பாலு, நகர செயலாளர் சுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் சந்திரராமன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் மகாலிங்கம், நகர செயலாளர் வாசுதேவன், விவசாயிகள் சங்க நகர தலைவர் பக்கிரிசாமி உள்பட பலர் கலந்து கொண்டு காவிரியில் தண்ணீர் திறந்து விடக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.

காவிரியில் தண்ணீர் திறந்து விடக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோட்டூர் அடப்பாற்றில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சிவபுண்ணியம் தலைமை தாங்கினார். இதில் ஒன்றிய துணைச்செயலாளர் செந்தில்நாதன், கூட்டுறவு சங்க தலைவர் சிவசண்முகம், சங்கத்தின் ஒன்றிய துணைத்தலைவர் பிச்சைகண்ணு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல சேந்தங்குடியில் வெண்ணாறு, விக்கிரபாண்டியத்தில் அரிச்சந்திராநதி, தட்டாங்கோவிலில் முள்ளியாறு, அக்கரைக்கோட்டகத்தில் சாளுவனாறு, ஒரத்தூர், நாணலூர் ஆகிய பகுதிகளில் ஆறுகளில் இறங்கி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நீடாமங்கலம் ஒன்றிய பகுதிகளில் 6 இடங்களில் ஆறுகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.நீடாமங்கலம் ஒன்றியத்தில் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் நடேச.தமிழார்வன் பேசினார். நீடாமங்கலம் கோரையாற்றில் நடந்த ஆர்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய தலைவர் பாரதிமோகன் தலைமை தாங்கினார்.

ஒளிமதியில் வெண்ணாற்றில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய துணைத் தலைவர் கல்யாணசுந்தரம் தலைமை தாங்கினார். இதில் திரளான விவசாயிகள் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.