மாவட்ட செய்திகள்

கோவையில் ஓடும் பஸ்களில் பயணிகளிடம் நகை, பணம் திருடிய 4 பெண்கள் கைது - 30 ஏ.டி.எம். கார்டுகள் பறிமுதல் + "||" + To passengers in running buses Jewelry, cash stolen and arrested 4 women

கோவையில் ஓடும் பஸ்களில் பயணிகளிடம் நகை, பணம் திருடிய 4 பெண்கள் கைது - 30 ஏ.டி.எம். கார்டுகள் பறிமுதல்

கோவையில் ஓடும் பஸ்களில் பயணிகளிடம் நகை, பணம் திருடிய 4 பெண்கள் கைது - 30 ஏ.டி.எம். கார்டுகள் பறிமுதல்
கோவையில் ஓடும் பஸ்களில் பயணிகளிடம் நகை, பணம் திருடிய 4 பெண்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 30 ஏ.டி.எம். கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கோவை,

கோவை மாநகர பகுதியில் ஓடும் பஸ்களில் நகை, பணம் திருடப்படுவதை தடுக்க சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. அவர்கள் பஸ்களில் பயணம் செய்து நகை, பணம் திருடும் ஆசாமிகளை கண்டறியும் பணியில் ஈடுபடுகின்றனர். மேலும் குற்ற சம்பவங்கள் நடப்பதை தடுக்க ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, கோவை காந்திபுரம் பஸ்நிலையத்தில் இருந்து பஸ் ஏறும் 4 பெண்கள் ரெயில் நிலையத்தில் இறங்குவதும், பின்னர் பஸ் ஏறி காந்திபுரம் பஸ் நிலையத்துக்கு செல்வதுமாக இருந்தனர்.

அவர்கள் தொடர்ந்து பலமுறை பஸ்சில் ஏறி, இறங்கி செல்வது குறித்து காட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் விரைந்து சென்று அந்த 4 பெண்களையும் மடக்கி பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்கள் 4 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை செய்தனர்.

இதில் அவர்கள், மதுரையை சேர்ந்த கிருஷ்ணம்மாள் (வயது 50), உமா (52), வித்யா (35), சத்யா (21) என்பதும், ஓடும் பஸ்களில் பயணிகளிடம் நகை, பணம் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1,500 மற்றும் 30 ஏ.டி.எம். கார்டுகளை பறிமுதல் செய்தனர்.

இது குறித்து போலீசார் கூறியதாவது:-

கைதான 4 பேரும் பஸ்களில் ஏறி முன்பக்க படிக்கட்டு அருகே நிற்பார்கள். பஸ்சை விட்டு கீழே இறங்க பயணிகள் வரும்போது அவர்களை இடிப்பது, காலை வைத்து தட்டிவிடுவது போன்ற செயலில் ஈடுபட்டு கவனத்தை திசைதிருப்பி பணம், நகையை திருடி உள்ளனர். ஏராளமானோரிடம் ஏ.டி.எம். கார்டுகளை திருடி உள்ளனர். அதில் 30 ஏ.டி.எம். கார்டுகளில் ரகசிய எண் எழுதப்பட்டு இருந்ததால் அந்த கார்டுகள் மூலம் பணத்தை எடுத்து செலவு செய்து உள்ளனர்.

மற்ற கார்டுகளை உடைத்து வீசி விட்டனர். எனவே அவர்கள் ஏ.டி.எம். கார்டுகளில் இருந்து எடுத்த பணம் எவ்வளவு? கோவை மாநகர பகுதியில் வேறு எங்காவது திருடி உள்ளார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.