மாவட்ட செய்திகள்

அரசு ஆஸ்பத்திரியில் 60–க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு காது கேட்கும் கருவி பொருத்தி உள்ளோம் டீன் தகவல் + "||" + More than 60 children in government hospital equipped with hearing aids

அரசு ஆஸ்பத்திரியில் 60–க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு காது கேட்கும் கருவி பொருத்தி உள்ளோம் டீன் தகவல்

அரசு ஆஸ்பத்திரியில் 60–க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு காது கேட்கும் கருவி பொருத்தி உள்ளோம் டீன் தகவல்
நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் 60–க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு காது கேட்கும் கருவி பொருத்தி உள்ளதாக டீன் பாலாஜிநாதன் கூறினார்.

நாகர்கோவில்,

நெல்லை மாவட்டம் ராதாபுரத்தை சேர்ந்தவர் ரக்ஷா என்னும் 4 வயது சிறுமிக்கு திடீரென உடலில் தோல் உரிதலும், சீழ் வடிதலும் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனே ரக்ஷாவை நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் அந்த அவளுக்கு தீவிர சிகிச்சை அளித்து குணப்படுத்தினர்.

இதுபற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி டீன் பாலாஜிநாதன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

ரக்ஷா உடலில் 90 சதவீதம் தோல் உரிந்தும், சீழ் வடிந்தும் இருந்தது. இந்த நோய், டாக்ஸிக் எபிடெர்மல் நெக்ரோலைசிஸ் என்று அழைப்படுகிறது. இதைத் தொடர்ந்து ரக்ஷாவை கடந்த ஜூன் மாதம் 8–ந் தேதி குழந்தைகள் நல பிரிவில் அனுமதித்து சிகிச்சைகளை தொடங்கினோம். குழந்தைகள் நல சிறப்பு டாக்டர்களும், தோல் சிகிச்சை நிபுணர்களும் இணைந்து ரக்ஷாவுக்கு சிகிச்சைகள் அளித்தனர். அதாவது ஆக்ஸிஜன், நரம்பு வழி திரவங்கள், பிரத்தியோகமான விலை உயர்ந்த நோய் எதிர்ப்பு மருந்துகள், நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் மற்றும் கடுமையான தொற்று கட்டுபாடு சிகிச்சை மூலம் தொடர்ந்து 18 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டது. டாக்டர்கள் மற்றும் செவிலியர்களின் அயராத உழைப்பாலும், தொடர் கண்காணிப்பு சிகிச்சைகளினாலும் ரக்ஷா எந்தவித குறைபாடும் இன்றி முற்றிலுமாக குணம் அடைந்து உள்ளார்.

இந்த நோயால் பாதிக்கப்பட்டால் 100–ல் 60 குழந்தைகள் இறந்துவிடும். இந்த நோயுக்கான சிகிச்சைகளை தனியார் ஆஸ்பத்திரியில் மேற்கொண்டால் ரூ.5 லட்சம் வரை செலவு ஆகும். ஆனால் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் முதல்–அமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் இலவசமாக செய்யப்படுகிறது.

மேலும் காது, மூக்கு, தொண்டை பிரிவில், காது கேளாமையால் பாதிக்கப்பட்ட 60–க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு காது கேட்கும் கருவி பொருத்தி உள்ளோம்.

குழந்தை பிறந்து 2 ஆண்டுகளில் காது கேளாமை குறைபாட்டை கண்டுபிடித்தால் அதை பூரணமாக குணப்படுத்தி விடலாம். 4 அல்லது 5 ஆண்டுகள் ஆகிவிட்டால் பூரணமாக குணப்படுத்துவது இயலாமல் போய்விடும். 6 வயதுக்குட்பட்ட குழந்தைகள் முதல்–அமைச்சரின் காப்பீட்டு திட்டம் மூலமாக இந்த சிகிச்சையை செய்து கொள்ளலாம். நெருங்கிய உறவினர்களை திருமணம் செய்யும்போது இதுபோன்ற குறைபாடுகள் வரும். எனவே பிறந்த குழந்தைக்கு காது கேளாமை குறைபாடு இருந்தால் உடனே ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியை அணுகலாம்.

மகாலட்சுமி என்ற 9 வயது சிறுமி எதிர்பாராத விதமாக 3 சிறிய இரும்பு கிளிப்பை விழுங்கி விட்டாள். அதை உள்நோக்கு கருவி மூலமாக வெளியே எடுத்தோம். அதோடு ஜெரோமிக் என்ற 3 வயது குழந்தை நாணயத்தை விழுங்கிவிட்டான். அதையும் உள்நோக்கு கருவி மூலமாக வெளியே கொண்டுவந்தோம். தற்போது அந்த குழந்தைகள் நலமாக உள்ளனர்.

ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பல்வேறு விதமான நவீன திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. விபத்து அவசர சிகிச்சை பிரிவு நாளை (அதாவது இன்று) முதல் செயல்படும். டயாலிசிஸ் பிரிவு நவீனப்படுத்தப்படும். புது வெண்டிலேட்டர், மானிட்டர் உள்ளிட்ட கருவிகள் வர உள்ளன. ஆஸ்பத்திரிக்கு கூடுதல் மின்சாரம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது உறைவிட மருத்துவர் ஆறுமுகவேலன், மருத்துவ கண்காணிப்பாளர் பிரின்ஸ் பயஸ் உள்பட பலர் உடன் இருந்தனர்.