மாவட்ட செய்திகள்

மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரி 3½ ஆண்டில் பயன்பாட்டுக்கு வருமா? மத்திய-மாநில அரசுகள் துரித நடவடிக்கை எடுக்க கோரிக்கை + "||" + Will Madurai AIIMS be in operation in 3½ years? Request for speedy action to Central and State Government

மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரி 3½ ஆண்டில் பயன்பாட்டுக்கு வருமா? மத்திய-மாநில அரசுகள் துரித நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரி 3½ ஆண்டில் பயன்பாட்டுக்கு வருமா? மத்திய-மாநில அரசுகள் துரித நடவடிக்கை எடுக்க கோரிக்கை
பணிகள் நடைபெறாததால் மதுரை தோப்பூரில் 3½ ஆண்டுகளில் மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரி பயன்பாட்டிற்கு வருமா? என்பது கேள்விக்குறியாகி உள்ளது. எனவே மத்திய, மாநில அரசுகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர்,

தமிழகத்தில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி தொடங்கப்படும் என கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது கூறப்பட்டு வந்தது. அப்போது மதுரையில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரிக்கு மட்டும் அனுமதி கிடைத்தது. எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கான அனுமதி தாமதம் ஆனது. அதற்குள் 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. 2015-ம் ஆண்டு தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி தொடங்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை அறிவித்தது.

மற்ற மாநிலங்களில் அறிவிப்பு வெளியானவுடன் இடங்கள் தேர்வு செய்யப்பட்டு திட்டப்பணி தொடங்கப்பட்டு முடியும் தருவாயில் உள்ளது. ஆனால் தமிழகத்தில் இடம் தேர்வு செய்வதிலேயே 3 ஆண்டுகள் கழிந்து விட்டது. செங்கல்பட்டு, சேலம், தஞ்சை, புதுக்கோட்டை, மதுரை என மத்திய ஆய்வுக்குழுவினரை தமிழக அதிகாரிகள் பல இடங்களுக்கு அழைத்துச் சென்று எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கான இடத்தை தேர்வு செய்வதில் தாமதம் ஏற்படுத்தி விட்டனர். இறுதியில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி நட்டா, மதுரை தோப்பூரில் தான் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி தொடங்கப்படும் என அறிவித்தார். ரூ.1,350 கோடி செலவில் 3½ ஆண்டுகளில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரியின் கட்டுமானபணி முடிந்து பயன்பாட்டிற்கு வரும் என அறிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அதன்பின்னர் எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கான பணிகள் எதிர்பார்த்த வேகத்தில் நடைபெறவில்லை. மாநில அரசு தான் எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கான இடத்தை ஒப்படைக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்தது. இதனை தொடர்ந்து தமிழக அரசு நிலம் ஒப்படைப்பதற்கான பணியை தொடங்கி உள்ளது. இதற்கிடையில் ஜப்பானில் உள்ள ஒரு நிறுவன அதிகாரிகள் எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தினை பார்வையிட்டு சென்றனர். நிலம் ஒப்படைத்த பின்னர் ஜப்பான் நிறுவனம் பணியினை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டது.

ஆனால் எந்த அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படவில்லை. நிதிநிலை அறிக்கையிலும் எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கான போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என தெரிகிறது. ஆண்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு செய்தால் 3½ ஆண்டுகளில் இந்த ஆஸ்பத்திரி பயன்பாட்டிற்கு வர வாய்ப்பு ஏற்படும். ஆனால் தற்போது உள்ள நிலையில் தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தில் சுற்றுச்சுவர் கட்டுவதற்கு மட்டும் ரூ.6 கோடி மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசு அதிகாரிகள் நிலம் ஒப்படைப்பதற்கான பணி நடைபெறுவதாகவும், விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெறுவதாகவும் தெரிவித்தாலும், நடைமுறையில் திட்டப்பணியில் எந்த முன்னேற்றமும் இருப்பதாக தெரியவில்லை. மொத்தத்தில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி கட்டுமான பணியில் தீவிரம் காட்டாமல் மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளாத நிலையே நீடிக்கிறது. இதே நிலை நீடித்தால் அறிவிக்கப்பட்டபடி 3½ ஆண்டுகளில் இந்த ஆஸ்பத்திரி பயன்பாட்டிற்கு வருவது சாத்தியப்படாது.

எனவே தற்போது உள்ள நிலையில் விருதுநகர் தொகுதி எம்.பி. மாணிக்கம்தாகூர் அவரது தொகுதியில் இந்த ஆஸ்பத்திரி அமைய உள்ளதால் மத்திய சுகாதாரத்துறை மந்திரியை நேரில் சந்தித்து இந்த ஆஸ்பத்திரியின் கட்டுமான பணியினை விரைவுபடுத்த துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழக அரசும் ஆஸ்பத்திரி கட்டுமான திட்டப்பணியில் அவர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை தாமதம் இல்லாமல் செய்து முடிக்க வேண்டியது அவசியம் ஆகும். ஒரு திட்டப்பணி குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் செய்து முடிக்கப்பட்டால் தான் மக்களுக்கு விரைவான பலன் கிடைக்கும். அந்த அடிப்படையில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி கட்டுமான பணி விரைந்து முடிக்கப்பட குரல் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.