மாவட்ட செய்திகள்

ஊட்டி அருகே, விவசாய நிலங்களை சூழ்ந்த மழைவெள்ளம் வடிந்தது - பல ஏக்கர் பயிர்கள் சேதம் + "||" + Near Ooty, Encompassing agricultural lands Malaivellam ran

ஊட்டி அருகே, விவசாய நிலங்களை சூழ்ந்த மழைவெள்ளம் வடிந்தது - பல ஏக்கர் பயிர்கள் சேதம்

ஊட்டி அருகே, விவசாய நிலங்களை சூழ்ந்த மழைவெள்ளம் வடிந்தது - பல ஏக்கர் பயிர்கள் சேதம்
ஊட்டி அருகே விவசாய நிலங்களை சூழ்ந்த மழைவெள்ளம் வடிந்தது. பல ஏக்கரில் பயிரிடப்பட்ட பயிர்கள் சேதம் அடைந்தன.
ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கியது. இதனால் கால்வாய், சிறு ஓடைகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டன. ஊட்டி-கூடலூர் சாலை, ஊட்டி-மஞ்சூர் சாலைகளில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. அதன் காரணமாக சாலையே தெரியாத அளவுக்கு, அதனை மண் மூடியது. சாலையில் குவிந்து கிடக்கும் மண்ணை அகற்றும் பணியில் பொக்லைன் எந்திரங்கள் ஈடுபட்டு வருகின்றன.

சாலைகளின் அடியில் செல்லும் மழைநீர் கால்வாயில் மரக்கிளைகள், கற்கள் அடைத்து காணப்படுகிறது. இதனை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. ஊட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருந்தது. தற்போது மழை அளவு குறைந்ததாலும், மழை பெய்யாததாலும் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார்கள். ஊட்டியில் நேற்று பகலில் வெயில் அடித்தது.

ஊட்டி அருகே குருத்துக்குளி கிராமத்தில் உப்புட்டி கால்வாயில் வெள்ளம் சென்று கொண்டே இருக்கிறது. அந்த கால்வாயில் விவசாயத்துக்கு பயன்படுத்தப்படும் குழாய்கள், மரக்கட்டைகள் அடைத்து கொண்டதால், வெள்ளம் சாலை வழியாக சென்றது. இதனால் தான் பெண்கள் 2 பேர் வெள்ளத்தை கடந்து செல்ல முயன்ற போது, வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு இருந்தனர். அப்பகுதியில் சாலையையொட்டி மண்சரிவு ஏற்பட்டு உள்ளது. விவசாய நிலங்களில் வெள்ளம் புகுந்து கேரட் உள்ளிட்ட காய்கறிகள் பயிர்கள் பாதிக்கப்பட்டு உள்ளன.

தொடர் மழை காரணமாக சாலையோரங்களில் புதிதாக அருவிகள் தோன்றி உள்ளன. உயரமான இடத்தில் இருந்து உற்பத்தியாகி வரும் தண்ணீர் பாறை மீது வெள்ளியை உருக்கியது போல் வந்து கொட்டுகிறது. ஊட்டி அருகே கப்பத்தொரை, பசவக்கல், எம்.பாலாடா, கல்லக்கொரை உள்ளிட்ட கிராமங்களில் விளைநிலங்களுக்கு நடுவே செல்லும் கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது, கால்வாயில் மண் அதிகளவு படிந்து இருந்ததால் கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு பயிர்களை வெள்ளம் சூழ்ந்தது.

விளைநிலங்களில் புகுந்து தண்ணீர் ஓடியதால் மேடு, பள்ளமாக ஆனதோடு சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. 2 நாட்களுக்கு பின்னர் தான் தண்ணீர் வடிந்தது. பயிர்கள் தண்ணீரில் மூழ்கி இருந்ததால் அழுகின. மறுபுறம் பயிர்களை மண் மூடி விட்டது. அதன் காரணமாக விளைநிலங்கள் உருக்குலைந்து காணப்படுகிறது. காய்கறி பயிர்களை நடவு செய்து, உரம் போட்டு, மருந்து தெளித்து, பராமரித்து வந்த விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். பல ஏக்கர் நிலங்களில் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே சேதமான பயிர்களுக்கு உரிய ந‌‌ஷ்டஈடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர். சில்லடா பகுதியில் கால்வாய் ஓரத்தில் மண்சரிவு ஏற்படாமல் இருக்க தடுப்புச்சுவர் கட்டப்பட்டு இருந்தது. கனமழையின் போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில், தடுப்புச்சுவர் உடைந்து தண்ணீர் விளைநிலங்களுக்குள் புகுந்து சேதம் ஆனது.

குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் பர்லியாறு என்ற இடத்தில் ராட்சத மரம் பாதியில் முறிந்து விழுந்தது. அதனை தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் வெட்டி அகற்றினர். ஆனால் முழுமையாக மரம் வெட்டி அகற்றப்படவில்லை. மரத்தில் பாதியில் முறிந்த பகுதி சாலை வரை நீண்டு உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள், அதன் மீது மோதி விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது. எனவே அந்த மரத்தை முழுமையாக வெட்டி அகற்ற வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மஞ்சூர் பகுதியில் மண் சரிவில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்தன. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் 9 முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு இதுவரை ரூ.10 லட்சத்தில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு உள்ளன. மேலும் சேதம் அடைந்த வீடுகள் கணக்கெடுக்கப்பட்டு ந‌‌ஷ்ட ஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று குந்தா தாசில்தார் சரவணன் தெரிவித்தார்.

குந்தா பாலம் முதல் கைகாட்டி வரை சாலையோரங்களில் ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை அகற்ற ஆர்.டி.ஓ. உத்தரவிட்டு உள்ளார். அந்த பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். கிண்ணக்கொரை-மஞ்சூர் சாலையில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆனால் அவை முழுமையாக வெட்டி அகற்றப்படவில்லை. எனினும் போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. எனவே உடனடியாக அனைத்து மரங்களையும் முழுமையாக வெட்டி அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.