மாவட்ட செய்திகள்

கர்நாடகத்தில் அரங்கேறிய வினோதம்; மழை வேண்டாம் என வருண பகவானுக்கு பூஜை + "||" + Strange in Karnataka; Varun Pooja is not to rain

கர்நாடகத்தில் அரங்கேறிய வினோதம்; மழை வேண்டாம் என வருண பகவானுக்கு பூஜை

கர்நாடகத்தில் அரங்கேறிய வினோதம்; மழை வேண்டாம் என வருண பகவானுக்கு பூஜை
மழை வேண்டாம் என்று வருணபகவானுக்கும், மழை கொட்டி தீர்க்க வேண்டி ஆஞ்சநேயருக்கும் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
பெங்களூரு, 

கர்நாடகத்தில் இந்த வினோதம் அரங்கேறியது. இதுபற்றிய விவரம் பின்வருமாறு:-

வடகர்நாடகத்தில் கனமழை கொட்டி தீர்த்தது. இந்த அடைமழையாலும், மராட்டிய மாநில கொய்னா அணையில் இருந்து திறந்துவிடப்பட்டுள்ள நீராலும் வடகர்நாடகத்தில் சுமார் 13 மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. அதுபோல் மலைநாடு கர்நாடகம், கடலோர கர்நாடக பகுதிகளும் பெருமளவு வெள்ளத்தால் மூழ்கி கிடக்கிறது. அந்தப் பகுதியில் தற்போது மழை குறைந்த போதிலும் இன்னும் வெள்ள நீர் வடியாமல் தேங்கி நிற்கிறது. இதனால் வடகர்நாடக பகுதியில் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதாவது வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட ஆடு, மாடு, கோழிகளும் தண்ணீரில் செத்து மிதக்கின்றன. அத்துடன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிலரின் உடல்களும் மிதந்து வந்த வண்ணம் உள்ளது. இதனால் தொற்றுநோய் பாதிப்பு ஏற்படும் அச்சத்தில் மக்கள் உள்ளனர்.

இதற்கு மத்தியில் வடகர்நாடகம், மலைநாடு மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வேண்டாம் என்றும், மக்கள் நிம்மதியாக வாழ வேண்டியும் வருண பகவானுக்கு பெங்களூரு நெலமங்களாவில் உள்ள உசசங்கி கோவிலில் நேற்றுமுன்தினம் சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு, அதிகளவு மழை பெய்துவிட்டது. எனவே மழை வேண்டாம் என்று வேண்டியதை கண்கூடாக பார்க்க முடிந்தது.

அதே வேளையில், தென்கர்நாடகத்தில் அமைந்துள்ள துமகூரு, ராமநகர், சாம்ராஜ்நகர், கோலார், சிக்பள்ளாப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் போதிய அளவு மழை பெய்யவில்லை. இதனால் அந்த பகுதி மக்கள் மழை வேண்டி ஏற்கனவே தவளைகளுக்கு திருமணம், கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த நிகழ்வுகளும் அரங்கேறின. கர்நாடகத்தின் வடக்கு பகுதி வெள்ளத்தில் மிதக்கிறது. இதனால் ஏராளமான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் துமகூரு மாவட்டம் கொரட்டக்கெரே தாலுகா மாரநாயக்கனஹள்ளி கிராமத்தை சேர்ந்த மக்கள் மழை பெய்ய வேண்டி ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். பின்னர் சாமியை சப்பரத்தில் வைத்து ஊர்வலமாக தூக்கி வந்தனர். ஊர்வலத்தின் போது பெண்கள் ஆட்டம், பாட்டத்துடன் பஜனை பாடல்களையும் பாடியபடி வந்தனர்.

அப்போது கிராம மக்கள், வடகர்நாடகத்திற்கு அதிகளவு மழை பெய்துவிட்டது. எங்களுக்கும் மழை கொடு அனுமா... எங்களுக்கும் மழை கொடு... என கோரசாக வேண்டினர்.

நேற்றுமுன்தினம் ஒரே நாளில் மழை வேண்டியும், மழை வேண்டாம் என்றும் கர்நாடகத்தில் வெவ்வேறு இடங்களில் அரங்கேறிய இந்த நூதன வழிபாடு பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது.