மாவட்ட செய்திகள்

கிருஷ்ணகிரி அருகே பயங்கரம்: டாஸ்மாக் விற்பனையாளரை கொன்று பணம் கொள்ளை + "||" + Terror near Krishnagiri: Task force killed

கிருஷ்ணகிரி அருகே பயங்கரம்: டாஸ்மாக் விற்பனையாளரை கொன்று பணம் கொள்ளை

கிருஷ்ணகிரி அருகே பயங்கரம்: டாஸ்மாக் விற்பனையாளரை கொன்று பணம் கொள்ளை
கிருஷ்ணகிரி அருகே டாஸ்மாக் கடைக்குள் புகுந்து விற்பனையாளரை குத்திக்கொலை செய்த மர்ம நபர்கள் கடையில் இருந்த ரூ.1½ லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே உள்ள நெடுஞ்சாலையில் பேட்டப்பனூர் கிராமம் உள்ளது. இங்கு டாஸ்மாக் மதுக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள காவேரி நகர் பக்கமுள்ள மீனாட்சி மண்டபம் பகுதியைச் சேர்ந்த ராஜா (வயது 43) என்பவர் விற்பனையாளராக இருந்து வந்தார். கடையின் மேற்பார்வையாளராக தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தாலுகா அரகசனஅள்ளியைச் சேர்ந்த ஜெகநாதன் (42) என்பவர் பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் விற்பனையாளர் ராஜா வழக்கம் போல பணிக்கு வந்து வேலை செய்து கொண்டிருந்தார். பின்னர் இரவில் கடையை மூடக்கூடிய நேரத்தில் மர்ம நபர்கள் சிலர் வந்தனர். அவர்கள் கடையில் தனியாக இருந்த ராஜாவிடம் சில மது பாட்டில்களை மொத்தமாக கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் விற்பனையாளர் ராஜா கடைக்குள் மதுபாட்டில்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள இடத்திற்கு சென்றார்.

பணம் கொள்ளை

அப்போது கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள் ராஜாவை தாங்கள் வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தினார்கள். இதில் அவருக்கு மார்பு மற்றும் கழுத்து பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. இதில் ராஜா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இதைத் தொடர்ந்து அந்த நபர்கள் கடையில் இருந்த மதுபாட்டில்கள் மற்றும் மதுபாட்டில்களை விற்று வசூல் ஆகி இருந்த ரூ.1½ லட்சம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.

இந்த நிலையில் வெளியே சென்று இருந்த மேற்பார்வையாளர் ஜெகநாதன் கடைக்குள் வந்து பார்த்த போது விற்பனையாளர் ராஜா பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் கடையில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்ததை கண்ட அவர் இதுகுறித்து குருபரப்பள்ளி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர், துணை சூப்பிரண்டு குமார், குருபரப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கணேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் கொலையுண்ட ராஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பரபரப்பு

கொலை நடந்த டாஸ்மாக் கடையில் நேற்று முன்தினம் மதியம் 12 மணி முதல் இரவு வரையில் மது விற்பனை நடந்திருந்தது. குறிப்பாக நேற்று சுதந்திர தினத்தையொட்டி மதுக்கடைக்கு விடுமுறை என்பதால் நேற்று முன்தினம் வழக்கத்தை காட்டிலும் அதிகமாக மதுபாட்டில்கள் விற்பனை ஆனதாக கூறப்படுகிறது. அவ்வாறு வசூல் ஆன தொகையை கொள்ளையடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வந்த மர்ம நபர்கள், தனியாக இருந்த விற்பனையாளரை கொலை செய்து பணத்தை கொள்ளையடித்து சென்றது விசாரணையில் தெரிய வந்தது.