மாவட்ட செய்திகள்

மாணவ, மாணவிகளுக்கு வழங்காமல் குப்பையில் வீசப்பட்ட சத்து மாத்திரைகள் + "||" + Tossed in the trash without giving nutrient tablets to students

மாணவ, மாணவிகளுக்கு வழங்காமல் குப்பையில் வீசப்பட்ட சத்து மாத்திரைகள்

மாணவ, மாணவிகளுக்கு வழங்காமல் குப்பையில் வீசப்பட்ட சத்து மாத்திரைகள்
தாமரைக்குளம் அரசு பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படாமல் சத்து மாத்திரைகள் குப்பையில் கொட்டப்பட்டு இருந்தன.
தேனி,

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு சத்துக் குறைபாட்டை சரிசெய்யும் வகையில் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து மருத்துவக்குழுவினர் அவ்வப்போது பள்ளிக்கு சென்று சத்து மாத்திரைகள் வழங்கி வருகின்றனர். இந்த மாத்திரைகளை மொத்தமாக பள்ளியில் வழங்கி மாணவ, மாணவிகளுக்கு வழங்குமாறு அறிவுரை வழங்கி வருகின்றனர். குறிப்பாக வளர் இளம் பருவ மாணவிகளுக்கு இந்த மாத்திரைகளை கட்டாயம் வழங்குமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், பெரியகுளம் அருகே தாமரைக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு வழங்குமாறு பள்ளியில் கொடுக்கப்பட்ட மாத்திரைகள் பல ஆண்டுகளாக மாணவ, மாணவிகளுக்கு முறையாக வழங்கப்படாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், பள்ளி வளாகத்தில் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டிக் காணப்பட்டதால் பாம்புகள் நடமாட்டம் அதிகரித்தது.

இதையடுத்து பள்ளி வளாகத்தில் புதர்களை அகற்றி சுத்தம் செய்யும் பணியில் தன்னார்வலர்கள் பலர் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றும் தூய்மை பணியில் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர். அத்துடன் இந்த பள்ளி வளாகத்தில் மருத்துவ குழுவினரும் நேற்று முகாம் அமைத்து இருந்தனர். மருத்துவ குழுவினர் பள்ளி வளாகத்தை பார்வையிட்ட போது, அங்கு குப்பைகளில் ஏராளமான சத்து மாத்திரைகள் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். ஆங்காங்கே மாத்திரை அட்டைகள் வீசப்பட்டு சிதறிக் கிடந்தன. நூற்றுக்கணக்கான அட்டைகளில் மாத்திரைகள் கிடப்பதை பார்த்த மருத்துவ குழுவினர் அவற்றை எடுத்துப் பார்த்தனர். அவை காலாவதியாகி இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து மருத்துவ குழுவினர் கூறுகையில், ‘இந்த மாத்திரைகள் வளர் இளம் மாணவிகளுக்கு மிகவும் பயன் அளிக்கக்கூடியது. இதே மாத்திரை சத்துக்குறைபாடு உள்ள கர்ப்பிணிகளுக்கும் வழங்கப்படும். சில நேரங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூட இந்த மாத்திரைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும். ஆனால், பள்ளிக்கு வழங்கிய மாத்திரைகளை மாணவ, மாணவிகளுக்கு கொடுக்காமல் இப்படி குப்பையில் கொட்டி இருப்பது வேதனையை அளிக்கிறது. இதுகுறித்து பள்ளி ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கல்வித்துறை அதிகாரிகளுக்கு தகவல்கள் கொடுக்கப்படும்’ என்றனர்.