மாவட்ட செய்திகள்

திருவையாறு போலீஸ் நிலையத்துக்கு வந்த வித்தியாசமான வழக்கு: கள்ளக்காதலனை மகளுக்கு திருமணம் செய்து வைக்க முயன்ற பெண் + "||" + The counterfeit lover Marriage to daughter The woman who tried to keep up

திருவையாறு போலீஸ் நிலையத்துக்கு வந்த வித்தியாசமான வழக்கு: கள்ளக்காதலனை மகளுக்கு திருமணம் செய்து வைக்க முயன்ற பெண்

திருவையாறு போலீஸ் நிலையத்துக்கு வந்த வித்தியாசமான வழக்கு: கள்ளக்காதலனை மகளுக்கு திருமணம் செய்து வைக்க முயன்ற பெண்
தனது கள்ளக்காதலனை கைவிட முடியாத பெண், அவரையே தனது மகளுக்கு திருமணம் செய்து வைக்க முயன்றார். இதற்காக அவர் தனது மகள் மூலம் பொய் புகார் கொடுக்க வைத்து போலீசில் சிக்கிக்கொண்டார். திருவையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு வந்த இந்த வித்தியாசமான வழக்கு குறித்த விவரம் வருமாறு:-
திருவையாறு,

தஞ்சை மாவட்டம் திருவையாறை அடுத்துள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர், தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் கொடுத்தார். அந்த புகாரில், அதே பகுதியை சேர்ந்த 28 வயது மதிக்கதக்க ஒரு வாலிபர் என்னிடம் பல நாட்களாக பழகினார். நாங்கள் இருவரும் பல்வேறு இடங்களுக்கு ஒன்றாக சேர்ந்து சுற்றினோம்.

இந்த நிலையில் அவர் என்னை ஏமாற்றி விட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய உள்ளார். அவரது திருமணம் 12-ந் தேதி(அதாவது இன்று) நடைபெற உள்ளது. எனவே அந்த திருமணத்தை தடுத்து நிறுத்துவதுடன் எனக்கு அவரையே திருமணம் செய்து வைக்கவேண்டும் என்று அவர் அந்த புகாரில் கூறியிருந்தார்.

இந்த புகார் மனுவை திருவையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பிய போலீஸ் சூப்பிரண்டு, இந்த புகார் மனு தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். இதனையடுத்து திருவையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், சம்பந்தப்பட்ட இருதரப்பினரையும் நேற்று போலீஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணைக்காக புகார் கொடுத்த பெண்ணும், அவர் புகார் தெரிவித்த வாலிபரும் இருவரின் பெற்றோரும், உறவினர்களும், நண்பர்களும் வந்து இருந்தனர்.

விசாரணை நடந்துகொண்டிருந்தபோது அந்த இளம்பெண், திடீரென தான் தயாராக வைத்திருந்த மண்எண்ணெய்யை எடுத்து தனது உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க போவதாக கூறினார். இதனால் போலீஸ் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனே போலீசார், அந்த பெண்ணை தடுத்து நிறுத்தியதுடன் அவரிடம், இப்படியெல்லாம் செய்யக்கூடாது. உன் வாழ்க்கை நன்றாக அமைய வேண்டும் என்பதற்காகத்தானே நாங்கள் விசாரணை நடத்திக்கொண்டு இருக்கிறோம். அதற்குள் இப்படியெல்லாம் அவசரப்படக்கூடாது என்று அறிவுரை கூறினர்.

பின்னர் போலீசார், விசாரணையை தொடங்கினர். அந்த இளம்பெண் புகார் கூறிய வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அந்த வாலிபர், தான் அந்த பெண்ணிடம் பழகவில்லை என்றும், அவரை அழைத்துக்கொண்டு எங்கேயும் சுற்றவில்லை என்றும் போலீசாரிடம் கூறினார். அதை நம்பாத போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

போலீசாரின் விசாரணை தன் மீது இறுகுவதை கண்ட அவர் அதற்கு மேலும் சமாளிக்க முடியாததால் தான் அந்த பெண்ணை விரும்பவில்லை என்றும், அந்த பெண்ணின் தாயாரைத்தான் விரும்பினேன் என்றும் கூறினார். அவர் கூறிய அதிர்ச்சிகரமான தகவலை கேட்டு விசாரணை நடத்திய போலீசார், ஒரு நிமிடம் ஆடிப்போனார்கள்.

அவர் கூறுவது உண்மையா? என்று அந்த பெண்ணின் தாயாரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அந்த வாலிபருக்கும், தனக்கும் கள்ளக்காதல் இருந்ததை அந்த இளம்பெண்ணின் தாயார் ஒத்துக்கொண்டார்.

தனது கள்ளக்காதலை தொடர வசதியாக தன் மகளுக்கும், தனது கள்ளக்காதலனுக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்த அந்த பெண், தனது மகள் மூலம் போலீசில் பொய்யாக புகார் கொடுக்க வைத்துள்ளார். ஆனால் அவர் நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்றாகி விட்டது.

போலீசாரின் தீவிர விசாரணையில் இந்த அசிங்கமான தகவல் வெளிச்சத்துக்கு வந்தது. இதனையடுத்து போலீசார் அந்த பெண்ணிடம், திருமண வயதில் மகள் உள்ள நிலையில் இந்த கள்ள தொடர்பு தேவையா? என்று அறிவுரை கூறினர். பின்னர் புகார் கொடுத்த அந்த இளம்பெண், தான் கொடுத்த புகாரை வாபஸ் வாங்கிக்கொள்வதாக கூறினார். இதனைத்தொடர்ந்து தாயும், மகளும் அங்கிருந்து சென்றனர்.

பெண் ஒருவர் தனது கள்ளக்காதலை தொடர கள்ளக்காதலனையே தனது மகளுக்கு திருமணம் செய்து வைக்க முயன்றதும், இதற்காக போலீசில் மகளை பொய் புகார் கொடுக்க வைத்ததும் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆசிரியரின் தேர்வுகள்...