மாவட்ட செய்திகள்

ஆனந்த சதுர்த்தி விழா கோலாகலம்:38 ஆயிரம் விநாயகர் சிலைகள் கரைப்பு + "||" + Ananda Chaturthi Festival 38 thousand Ganesha statues melt

ஆனந்த சதுர்த்தி விழா கோலாகலம்:38 ஆயிரம் விநாயகர் சிலைகள் கரைப்பு

ஆனந்த சதுர்த்தி விழா கோலாகலம்:38 ஆயிரம் விநாயகர் சிலைகள் கரைப்பு
மும்பையில் ஆனந்த சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. 38 ஆயிரம் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.
மும்பை, 

மும்பையில் ஆனந்த சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. 38 ஆயிரம் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.

விநாயகர் சதுர்த்தி

திருவிழாக்களுக்கு பெயர் போன மும்பையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் கடந்த 2-ந் தேதி தொடங்கியது. 11 நாட்கள் கொண்டாடப்பட்ட இந்த விழாவினால் மும்பை நகரமே விழாக்கோலம் பூண்டு இருந்தது. சர்வஜனிக் மண்டல்கள் (பொது இடங்கள்) மற்றும் வீடுகளில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பக்தி பரவசத்துடன் பூஜைகள் நடந்தன.

சர்வஜனிக் மண்டல்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்த பிரமாண்ட விநாயகர் சிலைகளை பக்தர்கள் ஆர்வமுடன் வந்து தரிசித்து சென்றனர். லால்பாக் ராஜா, ஜி.எஸ்.பி. மண்டல் உள்ளிட்ட பல முக்கிய மண்டல்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்த விநாயகரை லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்தனர்.

பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை பொதுமக்கள் 1½, 3, 5 மற்றும் 7 நாள் வழிபாட்டுக்கு பின்னர் கடல், குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் கரைத்தனர்.

ஆனந்த சதுர்த்தி

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் சிகர நிகழ்ச்சி மற்றும் நிறைவு விழாவான ஆனந்த சதுர்த்தி (சிலைகள் கரைப்பு) நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு 129 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

அன்று மதியம் முதலே மும்பையில் உள்ள எல்லா சாலைகளிலும் விநாயகர் சிலைகளின் ஊர்வலமாகவே காட்சி அளித்தது.

நகரம் முழுவதும் நடந்த விநாயகர் சிலை ஊர்வலங்களில் மக்கள் லட்சக்கணக்கில் கலந்து கொண்டனர். டோல் உள்ளிட்ட இசை வாத்தியங்களின் சத்தம் விண்ணை பிளந்தது. வண்ணப்பொடிகளை தூவியும், ஆடிப்பாடியும் உற்சாகமாக விநாயகரை நீர்நிலைகளுக்கு கொண்டு சென்றனர். ‘கண்பதி பப்பா மோரியா’ என்ற முழக்கத்தால் மும்பை நகரம் அதிர்ந்தது.

38 ஆயிரம் சிலைகள் கரைப்பு

லால்பாக் ராஜா விநாயகர் சிலை கிர்காவ் கடற்கரையில் கரைக்கப்பட்டது. மேலும் பல்வேறு கடற்கரைகளில் சிலைகள் கரைக்கப்பட்டன. இதேபோல ஏராளமான விநாயகர் சிலைகள் மும்பையின் இதர கடற்கரைகள், குளங்கள் மற்றும் செயற்கை குளங்களில் கரைக்கப்பட்டன.

தாராவி, செம்பூர், அந்தேரி, ரே ரோடு, மலாடு உள்ளிட்ட இடங்களில் தமிழர் மண்டல்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்த விநாயகர் சிலைகளும் நீர்நிலைகளுக்கு கொண்டு சென்று கரைக்கப்பட்டன.

நேற்று முன்தினம் முதல் நேற்று காலை 9 மணி வரை ஆனந்த சதுர்த்தியின் போது மண்டல்கள் சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 7 ஆயிரத்து 627 பிரமாண்ட விநாயகர் சிலைகளும், வீடுகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 30 ஆயிரத்து 403 சிலைகளும் என மொத்தம் 38 ஆயிரத்து 30 சிலைகள் கரைக்கப்பட்டதாக மும்பை மாநகராட்சி தெரிவித்து உள்ளது.

சிலைகள் கரைப்பையொட்டி மும்பையில் 50 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆனந்த சதுர்த்தி விழா வெகு உற்சாகத்துடன் அமைதியாக நடந்து முடிந்தது.

அதிகம் வாசிக்கப்பட்டவை