தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் அனுமதியின்றி பேனர் வைத்த 81 பேர் மீது வழக்கு + "||" + In Tanjore, Nagai, and Thiruvarur districts, 81 persons have been banished
தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் அனுமதியின்றி பேனர் வைத்த 81 பேர் மீது வழக்கு
தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங் களில் அனுமதியின்றி பேனர் வைத்த 81 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்,
சாலையோரங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக பேனர் வைக்க சென்னை ஐகோர்ட்டு தடை விதித்தது. ஆனால் அதை யாரும் பொருட்படுத்தாமல் சாலையோரங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக விபத்தை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு அரசியல் கட்சியினர், திரைப்பட நடிகர்களின் ரசிகர்கள், தனியார் நிறுவனத்தினர் பேனர்களை வைத்தனர்.
இந்தநிலையில் சென்னையில் பேனர் சரிந்து விழுந்து பெண் என்ஜினீயர் பலியானதை தொடர்ந்து மெத்தன போக்குடன் செயல்படுவதாக அதிகாரிகளுக்கு சென்னை ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்தது. அரசியல் கட்சி தலைவர்களும் பேனர்கள் வைக்கக்கூடாது என கட்சி தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கினர். இதையடுத்து தமிழகம் முழுவதும் சாலையோரம் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் அகற்றப்பட்டன.
81 பேர் மீது வழக்கு
தஞ்சை ரெயிலடி, பழைய பஸ் நிலையம், ராசாமிராசுதார் அரசு மருத்துவமனை, சோழன்சிலை, ராமநாதன் ரவுண்டானா, எம்.கே.மூப்பனார் சாலை ஆகிய பகுதிகளில் வைக்கப்பட்டு இருந்த பேனர்களை கட்சி தொண்டர்களே அகற்றினர். மேலும் பல்வேறு இடங்களுக்கு மாநகராட்சி அதிகாரிகளும் நேரில் சென்று பேனர்கள் இருக்கிறதா? என கண்காணித்தனர். அப்போது சாலையோரம் இருந்த பல பேனர்களை அவர்கள் அகற்றினர்.
தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை அகற்றி, பேனர் வைத்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என தஞ்சை சரக போலீஸ் டி.ஐ.ஜி. லோகநாதன் உத்தரவு பிறப்பித்தார். அதன்படி போலீஸ் சூப்பிரண்டுகள் மகேஸ்வரன் (தஞ்சை), துரை(திருவாரூர்), ராஜசேகரன்(நாகை) ஆகியோர் மேற்பார்வையில் 3 மாவட்டங்களிலும் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை போலீசார் அகற்றினர். மேலும் பேனர்கள் வைத்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 3 மாவட்டங்களிலும் மொத்தம் 81 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதேபோல் அனுமதியின்றி பேனர் வைப்பவர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.