மாவட்ட செய்திகள்

மின்னல் தாக்கி கணவர் பலி: நிவாரணம் கேட்டு ஒரு வருடமாக போராடி வரும் பெண் + "||" + Lightning strikes husband dead: Asking for relief The woman who has been struggling for a year

மின்னல் தாக்கி கணவர் பலி: நிவாரணம் கேட்டு ஒரு வருடமாக போராடி வரும் பெண்

மின்னல் தாக்கி கணவர் பலி: நிவாரணம் கேட்டு ஒரு வருடமாக போராடி வரும் பெண்
மின்னல் தாக்கி பலியான கணவரின் இழப்பிற்கு நிவாரணம் கேட்டு ஒரு ஆண்டாக போராடி வரும் பெண் தனக்கு நிவாரணம் கூட வேண்டாம் எனது கணவரின் இறப்பு அசல் சான்றிதழையாவது தாருங்கள் என்று கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார்.
ராமநாதபுரம்,

ஆர்.எஸ்.மங்கலம் பகுதியை சேர்ந்தவர் தனசேகரன். இவருடைய மனைவி அருள்மேரி(வயது 35). இவரின் கணவர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 5-ந்தேதி மின்னல் தாக்கி பலியாகி விட்டார். கணவரின் இறப்பை தொடர்ந்து 2 மகன்களை படிக்க வைத்து வளர்க்க அரசின் நிவாரணம் கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார். இந்த மனு மீதான விசாரணையின்போது தாலுகா அலுவலகத்தில் இறப்பு சான்றிதழ், வாரிசு சான்றிதழ், பிரேத பரிசோதனை அறிக்கை உள்ளிட்டஅசல் சான்றிதழ்களை கேட்டுள்ளனர்.

இந்த சான்றிதழ்களை கொடுத்துள்ள அருள்மேரிக்கு கடந்த ஒரு ஆண்டிற்கும் மேலாக நிவாரண தொகை கிடைக்கவில்லையாம். இது குறித்து ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா அலுவலகத்தில் கேட்டபோது, சமூக பாதுகாப்பு தி்ட்ட அலுவலகத்திற்கு அனுப்பி உள்ளதாக தெரிவித்தார்களாம். இவ்வாறு மாறிமாறி இரு அலுவலகங்களிலும் அலைக்கழித்த நிலையில் கடந்த மாதம் கலெக்டர் அலுவலகத்தில் அருள்மேரி மனு கொடுத்துள்ளார். இந்த மனுவை மீண்டும் விசாரித்த கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். இதன் பின்னரும் நடவடிக்கை எடுக்காத நிலையில் தனது அசல் சான்றிதழ்களை கொடுக்குமாறு கேட்டு நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தார்.

அப்போது அவர்,எனக்கு எந்த நிவாரணமும் வேண்டாம். கூலி வேலை செய்தாவது எனது மகன்களை வளர்த்து கொள்கிறேன். எனது கணவரின் இறப்பிற்கான அசல் சான்றிதழ் களை கொடுத்துள்ளேன். அந்த சான்றிதழ்கள் எங்கு உள்ளது என்று தெரியவில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அந்த சான்றிதழ்களை பெற்று கொடுங்கள். கணவரை இழந்து மகன்களை வளர்க்க உங்களிடம் நிதி கேட்டு போராடியதுதான் மிச்சம். எனது கணவர் இறந்து விட்டார் என்பதற்கான சான்றிதழ்களையாவது அவரின் நினைவாக வைத்துக் கொள்கிறேன். அதனை தந்து விடுங்கள் என்று கண்ணீர் மல்க கோரினார்.

இதனை கேட்ட கலெக்டர் வீரராகவராவ் சான்றிதழ் களை நகல் எடுத்துக் கொண்டு அசல் சான்றிதழ்களை உடனடியாக வழங்கவும், அடுத்த குறைதீர்க்கும் கூட்டத்தில் ரூ.20,000 நிவாரண நிதி வழங்கவும் உத்தரவிட்டார்.