மாவட்ட செய்திகள்

புதுவை அருகே போலீசார் அதிரடி: வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தனர்; போதை பொருட்களுடன் வெளிநாட்டு தம்பதி கைது + "||" + near Puthuvai Foreign couple arrested with drugs

புதுவை அருகே போலீசார் அதிரடி: வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தனர்; போதை பொருட்களுடன் வெளிநாட்டு தம்பதி கைது

புதுவை அருகே போலீசார் அதிரடி: வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தனர்; போதை பொருட்களுடன் வெளிநாட்டு தம்பதி கைது
புதுவை அருகே வாடகைக்கு எடுத்து தங்கிய வீட்டில் போதை பொருட்கள் பதுக்கி வைத்து இருந்ததாக வெளிநாட்டு தம்பதி அதிரடியாக கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
காலாப்பட்டு,

புதுச்சேரி மாநில எல்லையில் உள்ள தமிழகத்தை சேர்ந்த ஆரோவில், கோட்டக்குப்பம், பெரிய முதலியார்சாவடி உள்ளிட்ட பகுதிகளில் போதை பொருட்கள் நடமாட்டம் இருப்பதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதைத் தொடர்ந்து போதை பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு தனிப்படை துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தியாஸ்சுதீன் (சென்னை), ஜூலியஸ் சீசர் (காஞ்சீபுரம்) ஆகியோர் தலைமையில் சுமார் 15 போலீசார் பெரிய முதலியார்சாவடி பகுதியில் முகாமிட்டனர். அங்குள்ள திவான் கந்தப்பன் நகரில் உள்ள ஒரு வீட்டை சுற்றி வளைத்து அதிரடியாக வீட்டுக்குள் புகுந்தனர்.

அந்த வீட்டில் இருந்த நைஜீரியா நாட்டை சேர்ந்த காட்வின் டிக்கு (வயது 47), அவருடைய மனைவி உகாண்டா நாட்டை சேர்ந்த கக்கு சாஸ்ட் ஈகுவா (26) மற்றும் ஒரு பெண் உள்பட 6 பேரை துப்பாக்கி முனையில் பிடித்து போதை பொருட்கள் கடத்தல் தொடர்பாக போலீசார் விசாரித்தனர்.

தொடர்ந்து போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் பிரவுன் சுகர், போதை திரவம், அபின், கோகைன், ஹெராயின், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களும், போதை மருந்தை உடலில் செலுத்த பயன்படுத்தப்படும் ஊசிகளும் கிடைத்தன. இதன் மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இவை அனைத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

எனவே போதை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அவர்கள் குடியிருந்த வீட்டின் உரிமையாளரிடமும் போலீசார் விசாரித்தனர். இதில் போதை பொருட்கள் கடத்தியதாக சிக்கிய தம்பதி கடந்த 13-ந் தேதிதான் வாடகைக்கு வந்துள்ளனர். அப்போது டிசம்பர் மாதம் வரை தங்கியிருப்போம் என்று தெரிவித்துள்ளனர். வீட்டின் உரிமையாளரை நம்ப வைப்பதற்காக ஒரு கைக்குழந்தையையும் அவர்கள் தூக்கி வந்துள்ளனர்.

இதன்பின் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் குறிப்பாக நைஜீரியா, உகாண்டா நாடுகளை சேர்ந்த கருப்பர் இன வாலிபர்கள் அடிக்கடி வந்து சென்றுள்ளனர். இந்த தகவல்கள் போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.

போதை பொருட்கள் விற்கப்படுவதை அறிந்து காட்வின் டிக்கு தம்பதி தங்கி இருந்த வீட்டுக்கு அவர்கள் வந்து சென்று இருக்க வேண்டும் என்று தெரிகிறது. தற்போது அவர்கள் கைது செய்யப்பட்ட போது கைக்குழந்தை எதுவும் வீட்டில் இல்லை. இதுவும் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே குழந்தை குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

பிடிபட்ட தம்பதியிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையைத் தொடர்ந்து காட்வின் டிக்கு, கக்கு சாஸ்ட் ஈகுவா தம்பதியை போலீசார் கைது செய்தனர். மற்ற 4 பேரையும் விடுவித்தனர். கைதான தம்பதியிடம் மேல் விசாரணை நடத்துவதற்காக போதை பொருள் தடுப்பு போலீசாரால் அவர்கள் இருவரும் சென்னை கொண்டு செல்லப்பட்டனர். அங்கு வைத்து விசாரணை நடந்து வருகிறது.

புதுவை அருகே தமிழக பகுதியான கோட்டக்குப்பத்தில் வீட்டை வாடகைக்கு எடுத்து போதை பொருட்கள் பதுக்கி வைத்திருந்ததன் பின்னணி என்ன? இதில் யாருக்கெல்லாம் தொடர்பு? எங்கெல்லாம் விற்பனை செய்துள்ளனர்? என்பது போன்ற விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.

போதை பொருட்களுடன் வெளிநாட்டு தம்பதி துப்பாக்கி முனையில் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. புதுவை அருகே பயங்கரம்: வெடிகுண்டு வீசி அமைச்சரின் ஆதரவாளர் வெட்டிக் கொலை - பரபரப்பு தகவல்கள்
புதுவை அருகே வெடிகுண்டு வீசி அமைச்சரின் ஆதரவாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது குறித்து பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளன.