மாவட்ட செய்திகள்

தமிழகத்துக்கு சீன அதிபர் வருகையையொட்டி மாவட்டத்தில் விடிய, விடிய போலீசார் சோதனை; 176 பேர் கைது + "||" + Chinese President visits Tamil Nadu Police raid in the district; 176 people Arrested

தமிழகத்துக்கு சீன அதிபர் வருகையையொட்டி மாவட்டத்தில் விடிய, விடிய போலீசார் சோதனை; 176 பேர் கைது

தமிழகத்துக்கு சீன அதிபர் வருகையையொட்டி மாவட்டத்தில் விடிய, விடிய போலீசார் சோதனை; 176 பேர் கைது
தமிழகத்துக்கு சீன அதிபர் ஜின்பிங் நேற்று வருகை தந்ததையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை விடிய, விடிய போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். இதில் 176 பேரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம்,

மாமல்லபுரத்திற்கு இந்திய பிரதமர் நரேந்திரமோடி, சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் நேற்று வருகை தந்ததையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் மற்றும் முக்கிய இடங்களில் போலீசார் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை விடிய, விடிய அதிரடி சோதனை நடத்தினார்கள். மேலும் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் வாகன தணிக்கை மேற்கொண்டனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயகுமார் விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் வாகனங்களை நிறுத்தி தணிக்கை செய்தார். ஓட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் சந்தேகப்படும்படியாக யாராவது தங்கியுள்ளனரா? குற்ற சம்பவங்கள் அதிகம் நடைபெறும் இடங்களில் பழைய குற்றவாளிகளின் நடமாட்டம், ரவுடிகளின் நடமாட்டம் உள்ளதா? என்று போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையின்போது குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுதல், அதிக பாரம் ஏற்றிச்செல்லுதல், அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், ஓட்டுனர் உரிமம், ஆர்.சி. புத்தகம் இல்லாமல் வாகனங்களை இயக்குதல் மற்றும் சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிதல், மணல் கடத்தலில் ஈடுபட்டது, லாட்டரி சீட்டு விற்றது, பணம் வைத்து சூதாடியது என மொத்தம் 1,086 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 72 பேரையும், பழைய குற்றவாளிகள், லாட்டரி சீட்டு விற்றவர்கள், பணம் வைத்து சூதாடியவர்கள் என 78 பேரையும், நீதிமன்றத்தால் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்தவர்கள் 26 பேரையும் கைது செய்தனர். அந்த வகையில் மொத்தம் 176 பேர் கைது செய்யப்பட்டனர்.