மாவட்ட செய்திகள்

‘நீட்’ தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் 4 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி + "||" + neet exam In the case of impersonation 4 bail petitions dismissed

‘நீட்’ தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் 4 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

‘நீட்’ தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் 4 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி
‘நீட்’ தேர்வில் நடந்த ஆள்மாறாட்டம் தொடர்பாக 2 மாணவர்கள் உள்பட 4 பேரின் ஜாமீன் மனுக்கள் தேனி கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.
தேனி,

‘நீட்’ தேர்வில் நடந்த ஆள்மாறாட்டம் தொடர்பாக தேனி சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் தொடர்புடைய மாணவர்கள், அவர்களது பெற்றோர் என இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக சேலம் கோர்ட்டில் சரண் அடைந்த மாணவர் இர்பானை, சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து நேற்று முன்தினம் விசாரணை நடத்தினர். பின்னர் அவர், தேனி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்தநிலையில், இந்த வழக்கு தொடர்பாக நேற்று மீண்டும் மாணவர் இர்பான் தேனி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வருகிற 25-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதையடுத்து அவரை போலீசார் பாதுகாப்பாக அழைத்து சென்று மீண்டும் சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் டாக்டர் வெங்கடேசன், முகமது ஷபி ஆகியோருக்காக தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுக்கள் தேனி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் கடந்த 9-ந்தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவருக்கும் ஜாமீன் கேட்டு தேனி மாவட்ட செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு வருகிறது.

இதேபோல், ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மாணவர் பிரவீண், அவருடைய தந்தை சரவணன், மாணவர் ராகுல், அவருடைய தந்தை டேவிஸ் ஆகியோருக்கு ஜாமீன் கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை நடந்து வந்தது. நேற்று முன்தினம் விசாரணை நடத்தப்பட்ட போது, மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து நேற்று மீண்டும் 4 பேரின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை மாஜிஸ்திரேட்டு பன்னீர்செல்வம் முன்னிலையில் நடந்தது.

மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல்கள், ‘இந்த வழக்கில் மாணவர்கள் பிரவீண், ராகுல் ஆகியோர் ஆள்மாறாட்டம் செய்தார்கள் என்பதற்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் இன்னும் தகுந்த ஆதாரங்களை தாக்கல் செய்யவில்லை. இந்த இரு மாணவர்களும் நீட் தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களுக்கு இந்த வழக்கில் ஜாமீன் வழங்க வேண்டும்’ என்று வாதிட்டனர்.

அதற்கு அரசு தரப்பு வக்கீல் நிர்மலா ஆட்சேபனை தெரிவித்தார். பின்னர், மாணவர்கள் தரப்பு வக்கீல்கள், ‘மாணவர்கள் நலன் கருதி மாணவர்களுக்கு மட்டுமாவது தற்போது ஜாமீன் வழங்க வேண்டும்’ என்றனர். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த மாஜிஸ்திரேட்டு இந்த 4 பேரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.