மாவட்ட செய்திகள்

80 மணி நேரம் போராடியும் பலன் இல்லை பிணமாக மீட்கப்பட்ட சுஜித் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி + "||" + 80 hours worth of struggle No corpse recovered Tears pay tribute to Sujith's body

80 மணி நேரம் போராடியும் பலன் இல்லை பிணமாக மீட்கப்பட்ட சுஜித் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி

80 மணி நேரம் போராடியும் பலன் இல்லை பிணமாக மீட்கப்பட்ட சுஜித் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி
ஆழ்துளை கிணற்றில் இருந்து பிணமாக மீட்கப்பட்ட சுஜித் உடலுக்கு அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் சுஜித்தின் பெற்றோருக்கு நேரில் ஆறுதல் கூறினார்கள்.
திருச்சி,

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்தவர் பிரிட்டோ ஆரோக்கியராஜ்.

இவரது வீட்டின் அருகே உள்ள நிலத்தில் 7 ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீருக்காக 600 அடி ஆழத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு இருந்தது.

ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தை

போதிய தண்ணீர் இல்லாததால் ஆழ்துளை கிணற்றில் கற்கள் மற்றும் மண்ணை கொட்டி மூடிவிட்டனர். சமீபத்தில் பெய்த மழையால் அந்த இடத்தில் தண்ணீர் தேங்கியது. இதில் கிணற்றை மூடியிருந்த மண் 30 அடி ஆழம் வரை ஆழ்துளை கிணற்றுக்குள் இறங்கியது.

கடந்த 25-ந் தேதி மாலை அந்த இடத்தில் விளையாடிக்கொண்டு இருந்த பிரிட்டோ ஆரோக்கியராஜின் 2 வயது குழந்தை சுஜித் வில்சன் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான். தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று குழந்தையை மீட்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. உடனடியாக ஆழ்துளை கிணறு அருகே பக்கவாட்டில் பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டி குழந்தையை மீட்க முயற்சித்தனர். பாறை குறுக்கிட்டதால் பள்ளம் தோண்டும் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதையடுத்து குழந்தை சுவாசிப்பதற்காக குழாய் மூலம் ஆக்சிஜன் கொடுக்கப்பட்டது.

98 அடி ஆழத்துக்கு பள்ளம் தோண்டும் பணி

தொடர்ந்து மீட்பு பணிக்கு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு குழந்தையை மீட்க முயற்சி மேற்கொண்டனர். அப்போது ஆழ்துளை கிணற்றில் 28 அடி ஆழத்தில் சிக்கி இருந்த குழந்தை சுஜித் அதிகாலை 3.30 மணி அளவில் 88 அடி ஆழத்துக்கு சென்று விட்டான். நவீன கருவி மூலம் குழந்தையை மீட்க முயன்றபோது மண் சரிந்து குழந்தையின் தலையில் விழுந்தது.

இதற்கிடையே அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் அங்கு முகாமிட்டு மீட்பு பணியை முடுக்கிவிட்டனர். குழந்தையை மீட்க பல்வேறு கட்டங்களாக மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்தன. இதையடுத்து காரைக்காலில் இருந்து ராட்சத ரிக் எந்திரம் கொண்டு வரப்பட்டு குழந்தை சிக்கி இருந்த இடத்தின் பக்கவாட்டில் 98 அடி ஆழத்துக்கு பள்ளம் தோண்டும் பணி தொடங்கியது. பள்ளம் தோண்டி முடித்த பிறகு தீயணைப்பு வீரர்கள் உள்ளே இறங்கி குழந்தை சிக்கியுள்ள இடத்துக்கு பக்கவாட்டில் சுரங்கம் அமைத்து அதன் வழியாக குழந்தையை மீட்க திட்டமிட்டனர்.

குழந்தை இறந்ததாக அறிவிப்பு

பள்ளம் தோண்டும்போது, குழந்தை மேலும் கீழே சென்றுவிடக்கூடாது என்பதற்காக ஏர்-லாக் மூலம் குழந்தையின் கைகளை இறுக்க பிடித்து இருந்தனர். ஆனால் பள்ளம் தோண்டும்போது, கடின பாறைகள் இருந்ததால் அவற்றை உடைக்க முடியாமல் ரிக் எந்திரங்கள் திணறின. பின்னர் போர்வெல் மூலம் பள்ளம் தோண்ட முயன்றனர். ஆனால் பள்ளம் தோண்டும் பணி கடும் சவாலாக அமைந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 10.30 மணி அளவில் குழந்தை விழுந்த ஆழ்துளை கிணற்றுக்குள் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் குழந்தை சுஜித் இறந்து இருக்கலாம் என கருதப்பட்டது.

நேற்று அதிகாலை 2.30 மணி அளவில் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம், “குழந்தை சுஜித் உயிருடன் இல்லை என்றும், குழந்தை இறந்துள்ளது மருத்துவ குழுவினரால் உறுதி செய்யப்பட்டது” எனவும் தெரிவித்தார். இதையடுத்து பக்கவாட்டில் பள்ளம் தோண்டும் பணி கைவிடப்பட்டது. இதன் மூலம் 80 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த முயற்சி தோல்வியில் முடிந்தது. ஆழ்துளை கிணற்றை சுற்றியுள்ள பகுதி போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. ஆழ்துளை கிணற்றில் இருந்து ஏர்-லாக் மூலம் பிடித்து இருந்த குழந்தையை மேலே தூக்க முயன்றனர். அதிகாலை 4.05 மணி அளவில் அழுகிய நிலையில் இருந்த குழந்தையின் சடலத்தை மீட்டு வெளியே தூக்கினர்.

உடல் ஒப்படைப்பு

குழந்தையை தூக்கி வந்தபோது, தாய் கலாமேரி, தந்தை பிரிட்டோ ஆரோக்கியராஜ் மற்றும் அங்கு கூடி இருந்த பொதுமக்கள் கண்ணீர்விட்டு கதறி அழுதனர். பின்னர் 4.10 மணிக்கு குழந்தையின் உடல் ஆம்புலன்சில் ஏற்றப்பட்டது. ஆம்புலன்சை சுற்றி ஏராளமான பொதுமக்கள் திரண்டு நின்றதால் போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர். பின்னர் அதிகாலை 4.30 மணிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆம்புலன்ஸ் நடுக்காட்டுப்பட்டியில் இருந்து புறப்பட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு 5 மணிக்கு பிரேத பரிசோதனை செய்யும் பணி தொடங்கியது. இதையடுத்து 6.30 மணிக்கு சுஜித்தின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அங்கிருந்து குழந்தையின் உடல் திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஆவாரம்பட்டியில் உள்ள பாத்திமாபுதூர் கல்லறைக்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. அங்கு சுஜித்தின் உடல் வைக்கப்பட்டு சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

கண்ணீர் மல்க அஞ்சலி

தொடர்ந்து அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு ஆகியோர் சுஜித்தின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். குழந்தை சுஜித்தின் இறுதி சடங்கில் கிராம மக்கள் ஆயிரக்கணக்கானோர் மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் குழந்தையின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. குழந்தை சுஜித் பிணமாக மீட்கப்பட்டதை தொடர்ந்து நடுக்காட்டுப்பட்டி கிராமமே சோகத்தில் மூழ்கியது.

மு.க.ஸ்டாலின்

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை நடுக்காட்டுப்பட்டிக்கு சென்று சுஜித்தின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது தி.மு.க. சார்பில் ரூ.10 லட்சம் நிவாரண உதவி வழங்கினார்.

இதுபோல தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்தும் சுஜித்தின் பெற்றோருக்கு ஆறுதல் கூறி ரூ.1 லட்சம் நிவாரண உதவி வழங்கினார்.

எடப்பாடி பழனிசாமி

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை சேலத்தில் இருந்து கார் மூலமாக நடுக்காட்டுப்பட்டிக்கு சென்றார். சுஜித் வீட்டுக்கு சென்ற எடப்பாடி பழனிசாமி அங்கு வைக்கப்பட்டு இருந்த சுஜித் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் சுஜித்தின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார். அவருடன் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் சென்றிருந்தனர்.

பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த எடப்பாடி பழனிசாமி, பலியான சுஜித் குடும்பத்துக்கு அரசு சார்பில் ரூ.10 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என்று அறிவித்தார். அ.தி.மு.க. சார்பில் ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.